புதுச்சேரியில் நர்சிங் நுழைவுத்தேர்வு குளறுபடி: பாடத்திட்டத்தை அறிவிக்காததால் மாணவர்கள் தவிப்பு

By செய்திப்பிரிவு

புதுச்சேரி: புதுச்சேரியில் நடப்பாண்டு நர்சிங் நுழைவுத் தேர்வு அறிவிக்கப்பட்டும் பாடத்திட்டம் அறிவிக்கவில்லை. இத்தேர்வை எதிர் நோக்கியுள்ள மாணவ, மாணவிகள் தவித்து வருகின்றனர்.

புதுச்சேரி மாநிலத்தில் மதர் தெரசா சுகாதார நிறுவனம் மற்றும் 9 தனியார் நர்சிங் கல்லுாரிகள் உள்ளன. இவற்றில், 700-க்கும் மேற்பட்ட பி.எஸ்சி நர்சிங் இடங் கள் உள்ளன. இதில்,அரசு ஒதுக்கீட்டு இடங்களாக மதர்தெரசா கல்லுாரியில்–80, தனியார் நர்சிங் கல்லுாரியில் 295 என மொத்தம் 375 நர்சிங் இடங்கள் சென்டாக் மூலம் ஆண்டுதோறும் நிரப்பப்பட்டு வருகின்றன. கடந்த கல்வியாண்டு நாடு முழுவதும் உள்ள நர்சிங் கல்லூரிகளுக்கு நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்த நர்சிங் கவுன்சில் உத்தரவிட்டது.

ஆனால், போதிய கால அவகாசம் இல்லா ததால் புதுச்சேரிக்கு மட்டும் நர்சிங் நுழைவுத் தேர்வில் இருந்து ஒருமுறை மட்டும் விலக்கு அளிக்க வேண்டும் எனமத்திய அரசிடம் புதுச்சேரி அரசு கோரியது. இதைத்தொடர்ந்து புதுச்சேரியில் கடந்தாண்டு, நர்சிங் நுழைவுத்தேர்வு ரத்துசெய்து, பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. தற்போது மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ், மத்திய நர்சிங் கவுன்சில் பி.எஸ்சி. நர்சிங் சேர்க்கை நடத்த விதிமுறைகளை அறிவித்துள்ளது.

அதன்படி 2024 - 25 கல்வியாண்டிலிருந்து மத்திய நர்சிங் கவுன்சில் பி.எஸ்சி நர்சிங் படிப்புக்கு திருத்தப்பட்ட விதிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. அதன்படி புதுச்சேரி பி.எஸ்சி நர்சிங் படிப்புக்கு பொதுத் நுழைவுத் தேர்வு நடத்த துணை நிலை ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் நடப்பாண்டு பி.எஸ்சி நர்சிங் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை நுழைவுத் தேர்வுக்கான பாடத்திட்டம் குறித்து அறி விப்பு ஏதும் வெளியாகாததால் மாணவ, மாணவிகள் தவிப்பில் உள்ளனர்.

இது தொடர்பாக மாணவ, மாணவிகள் தரப்பில் விசாரித்தபோது, ‘‘கடந்தாண்டு நர்சிங் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு அறிவிக்கப்பட்ட போது, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 அடிப்படையில் நுழைவுத் தேர்வில் கேள்விகள் கேட்கப்படும் என அறிவிக்கப்பட்டது.குறிப்பாக இயற்பியல், வேதியியல், உயிரியல், ஆங்கிலம் மற்றும்நர்சிங் படிப்புக்கான தகுதி கண்டறிதல் ஆகிய பாடத் திட்டத்தின் அடிப்படையில் நுழைவுத்தேர்வில் கேள்விகள் கேட்கப்ப டும். இந்த 5 பாடங்களுக்கும் தலா 20 மதிப்பெண் என 100 மதிப்பெண்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப் பட்டது. இந்த பாடத்திட்ட முறை இப்போது தொடருமா? அல்லது புதிய முறையில் பாடத்திட்டம் வடிவமைத்து நடத்தப்படுமா? என தெரியாமல் குழப்பமாக உள்ளது. பாடத்திட்டம் அறிவித்தால் படிக்க இயலும். கடைசி நேரத்தில் பாடத்திட்டம் அறிவித்தால் கடினமாக இருக்கும். தயாராக போதிய அவகாசமும் இருக்காது என்றனர்.

இது குறித்து பெற்றோர் தரப்பில் கூறுகையில், ‘‘நிகர்நிலை பல்கலைக் கழகங்களில் நர்சிங் படிப்புகள் உள்ளன.இங்கு சேருவதற்கு தனியாக நுழைவுத் தேர்வு நடத்தப்படுமா அல்லது அரசு நடத்தும் நுழைவுத் தேர்வினை எழுதினால் மட்டும் போதுமா என்ற குழப்பமும் உள்ளது. புதுச்சேரியில் அரசு, தனியார், நிகர்நிலை என அனைத்துக்கும் சேர்த்து ஒரே நுழைவுத்தேர்வு எழுதினால் மாணவர்களுக்கு சிரமம் இருக்காது. இல்லையெனில் ஒவ்வொரு நுழைவுத் தேர்வினையும் தனித்தனியே எழுத வேண்டி இருக்கும்.இது மாணவர்களுக்கு தேவையில்லாத அலைச்சலை ஏற்படுத்தும்'' என்று தெரிவித்தனர்.

அரசு தரப்பில் விசாரித்தபோது, ‘‘நுழைவுத்தேர்வு மூலம் பிஎஸ்சி நர்சிங் படிப்பு சேர்க்கை வழிமுறைகளை உருவாக்க புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தேர்தல் நன்னடத்தை விதிகள் நடைமுறையில் உள்ளன. தேர்தல் ஆணையம் ஒப்புதல் பெற்றுதான் அறிவிப்பு வெளியாகும்'' என்று தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE