ம
ணியடித்தால் அறைக்குள் அடைக்கப்படுவது-சோறு, சீருடை, வரிசையில் நடந்து செல்வது, சுதந்திரம் பறிப்பு, தனித்தன்மைக்கு மதிப்பில்லாதது, சுருக்கமாக அதிகாரத்துக்குக் கீழ்ப்படிதல் - சிறைக்கும் வழக்கமான பள்ளிகளுக்கும் உள்ள முக்கியமான ஒற்றுமைகளாக இந்த அம்சங்களை உலகப் புகழ்பெற்ற கல்வியாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். இந்த அம்சங்கள் உலகின் வருங்காலக் குடிமக்களைச் சிறப்பாக உருவாக்கும் என்பதே பொதுவான நம்பிக்கை. ஆனால், மனிதர்கள் வேறு வகையிலும் சிறப்பாகக் கற்க முடியும் என்பதைப் பல கற்றல் முன்முயற்சிகள் மாற்றிக் காட்டியிருக்கின்றன.
பொதுவாகக் கல்வி பற்றிப் பேசுவதோ கருத்து தெரிவிப்பதோ அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. பெற்றோராக, ஆசிரியராக, அரசியல்வாதியாக, அரசு அதிகாரியாகப் பல நிலைகளிலிருந்து நாம் பேசினாலும், கல்வி குறித்த விவாதங்களை இயலாமைகளோடு முடிப்பது பழகிப்போய்விட்டது. ஆனால், எல்லோரும் அப்படி ஓய்ந்துபோய்விடுவதில்லை. கல்வி மீது நம்பிக்கை வைத்து அதைச் சிறப்பாகச் செயல்படுத்தும் முயற்சியில் ஈடுபடுபவர்கள் நம்மமிடையே இருக்கிறார்கள்.
இன்றைய பள்ளிக் கல்வி பெரும்பாலும் அரசு முன்வைக்கும் பாடத்திட்ட வரையறைக்கு உட்பட்டுதான் இயங்கிவருகிறது. சமச்சீர் கல்விப் பாடத்திட்டம், சி.பி.எஸ்.சி. பாடத்திட்டம் என ஏதோ ஒன்றின் வழியாகவே கற்பிக்கப்படுகிறது. இத்தகைய வரையறைகளுக்குள் செயல்படும் கல்வியாளர்கள் சிலரும் தங்களுடைய ஈடுபாட்டின் மூலம் கல்வியை நவீனப்படுத்த முயல்கிறார்கள். கல்வியின் நோக்கத்தை அடைய வெவ்வேறு வழிமுறைகளைக் கடைப்பிடிக்கிறார்கள். குழந்தைகளுக்கான கல்வி மையங்களில் சில நவீன புரிதலுடன் இயங்கிவருகின்றன.
ஆனாலும் முறைப்படுத்தப்பட்ட கற்றலுக்கு மாறாக இயல்பான கற்றல் (Natural Learning) செயல்பாடுகள் மீது முழு நம்பிக்கையோடு செயல்படும் பள்ளிகளும் நம்மிடையே வெற்றிகரமாக இயங்கி வருகின்றன. அவற்றைப் பற்றி இந்தப் பகுதியில் தொடர்ந்து பார்க்க இருக்கிறோம்.
எது கல்வி?
முதல் விஷயம் இயல்பான கல்வி என்பது மதிப்பெண் சார்ந்தது அல்ல, பாடப் புத்தகத்தை மட்டும் மையப்படுத்திக் கற்றுக்கொடுப்பது அல்ல, லாப நோக்கத்தோடு இயங்குவதும் அல்ல. உலகம் முழுக்க கல்வி முக்கியமானதாகக் கருதப்படுவதோடு, அதை மாற்றவும் சீர்திருத்தவும் கல்வியாளர்கள் முயன்றுள்ளனர். பல கல்வியாளர்களின் சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் நினைவுகூரும்போது கல்வியைப் பற்றிய நமது மதிப்பீடுகள் இன்னும் வலுவானதாக மாறுகின்றன.
தாகூர் குறிப்பிடுவதுபோல பண்பாடு, கலைகளை இணைத்துப் பயணிப்பது, காந்தி முன்வைத்த செயல்வழிக் கற்றல் முறை, மாண்டிசோரி குறிப்பிடும் சுதந்திரமான கற்றல் முறை, சமூக முன்னேற்றத்தைப் பெறுவதற்கு ஜான் ஹோல்ட் முன்மொழிந்த சுதந்திர கல்வி இயக்கம், ஜனநாயகத்துக்கு அடிப்படையாகக் கல்வி இருக்க வேண்டும் என்பதற்காக வகுப்பறையைக் கூட்டுச் செயல்பாடாக மாற்றியமைத்த ஜான் டூயியின் கல்வித் திட்டம், தனது பள்ளியின் மூலம் சாவித்திரிபாய் பூலே முயன்ற சமூக மாற்றம், ‘கற்பி, ஒன்று சேர், போராடு’ என்ற அம்பேத்கரின் குரல், கல்வி மீதான நம்பிக்கை என்பது பகுத்தறிவையும் சுயமரியாதையும் பெறுவதற்கான பாதை என்ற பெரியாரின் சிந்தனை போன்றவற்றை மேற்குறிப்பிட்ட வகையில் நினைவுகூரலாம்.
கல்வியாளர்களின் கோட்பாடுகளையும் செயல்பாடுகளையும் இப்படி ஒரு வரியில் சுருக்கிப் பார்ப்பது முறையாகாது. ஆனாலும், குழந்தைகள், கற்றல், சமூக மாற்றம், ஜனநாயகம், சூழலியலை மதிப்பது, மனித நேயம் ஆகியவற்றை நமக்கு இருக்கும் வெவ்வேறு அனுபவங்களைக் கொண்டு கற்றல், கற்பித்தல் செயல்பாட்டில் ஈடுபடுவதுதான் முழுமையான கல்வி என்று புரிந்துகொள்ள முயலலாம்.
எப்படி இருக்க வேண்டும்?
இயல்பான கற்றல் என்ற நீண்ட, நெடிய பயணத்தில் கவனம் பெற வேண்டிய புள்ளிகள்:
கற்பித்தல் முறைகள், குழந்தைகளின் தேவைகளுக்கு ஏற்ப மாற்றப்படுகின்றன.
மாணவர்களின் கற்பனைத் திறனை வளர்ப்பதையும், கண்டுபிடிப்புகளில் ஈடுபடுவதையும் இப்பள்ளிகள் ஊக்குவிக்கின்றன.
கற்றல் என்பது வெற்றி - தோல்வி என்ற பொது விதிக்கு உட்பட்டதல்ல. ஒரு விஷயத்தைப் புரிந்து, அறிந்து, வாழ்க்கையில் பயன்படுத்துவது எனத் தொடர் செயல்பாடுகளை உடையது.
கற்றல் என்பது, அறிவு வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல் ஆளுமை வளர்ச்சிக்குமான ஒன்று. பள்ளி அமைந்திருக்கும் பகுதியின் தேவைகள், பண்பாட்டு மதிப்பீடுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு பாடத்திட்டம் வடிமைக்கப்படுகிறது.
பொறுப்பை அனைவருக்கும் பகிர்ந்தளித்தல்.
பாலியல் வேறுபாடு, சாதியப் பாகுபாடுகளைக் கடந்து செயல்படுதல்.
அதிகாரப் படிநிலை முற்றிலுமாக நீக்கப்பட்ட சூழலைச் சாத்தியமாக்கும் தொடர் முயற்சியில் ஈடுபடுதல்.
குறைவான மாணவ-மாணவி எண்ணிக்கையைக் கொண்டிருப்பது, அதிகமான மாணவர்கள் இருக்கும் பட்சத்தில் ஆசிரியர்- மாணவ விகிதத்தை திட்டமிட்டுச் செயல்படுத்துவது.
குழந்தைக்கு என்ன தெரியும் என்பதை அறிந்து மதிப்பிடுதலும், ஆசிரியருக்கு அவரது திறனை மதிப்பாய்வு செய்ய உதவுதலும் இங்கு அவசியமானதாகக் கருதப்படுகிறது.
மாணவர்களின் திறன்களை வலுப்பெறச்செய்ய பள்ளியின் நிர்வாகம், பெற்றோர், ஆசிரியர் ஆகியோரின் கூட்டு முயற்சியில் சாத்தியப்படுத்தப்படும்.
இயல்பான கல்வியைப் பின்பற்றும் பள்ளிகளையும் அவற்றைக் கடைப்பிடிக்கும் கல்வியாளர்களையும் கவனப்படுத்த முயல்வதே இத்தொடரின் திட்டம்.
தொடர்புக்கு: saalaiselvam@gmail.com
முக்கிய செய்திகள்
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
2 days ago
கல்வி
3 days ago
கல்வி
4 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
6 days ago
கல்வி
9 days ago
கல்வி
9 days ago
கல்வி
11 days ago
கல்வி
12 days ago
கல்வி
13 days ago
கல்வி
13 days ago