10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி: அரியலூர் மாவட்டம் முதல் இடம்

By செய்திப்பிரிவு

பொதுத் தேர்வு தேர்ச்சிக்கான மாவட்ட தரவரிசையில் அரியலூர் மாவட்டம் சமீப ஆண்டுகளாக முன்னிலை வகித்து வருகிறது. அதேபோல, இந்த ஆண்டும் மாவட்ட வாரியான தேர்ச்சியில் 97.31 சதவீதமும், அரசுப் பள்ளிகள் வாரியான தேர்ச்சியில் 96.20 சதவீதமும் பெற்று முதல் இடத்தை பிடித்து அசத்தியுள்ளது அரியலூர் மாவட்டம்.

தலைநகரான சென்னை மாவட்டத்தில் 66,228 மாணவ, மாணவிகள் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினர். இதில் 58,419 பேர் (88.21%) தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டைவிட (89.14%) இது 0.93 சதவீதம் குறைவு. மாவட்ட தேர்ச்சி பட்டியலில் சென்னை 9 இடங்கள் சரிந்து, 30-வது இடத்துக்கு பின்தங்கியுள்ளது. அரசுப் பள்ளிகள் தேர்ச்சியில் வேலூர் (77.66%) கடைசி இடத்தில் உள்ளது. அதற்கு முந்தைய இடத்தில் சென்னை (79.07) உள்ளது.

பொதுத் தேர்வு தேர்ச்சி பட்டியலில் ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருப்பத்தூர் உள்ளிட்ட வட மாவட்டங்கள் வழக்கம்போல இந்த ஆண்டும் பின்னடைவை சந்தித்துள்ளன. அரசுப் பள்ளிகள் தேர்ச்சியில் மேற்கண்ட மாவட்டங்களுடன் சென்னை, மயிலாடுதுறை மாவட்டங்களும் பின்தங்கியுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE