பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகிறது

By செய்திப்பிரிவு

சென்னை: பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகளை தேர்வுத் துறை இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடுகிறது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் நடப்பு ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு 3,302 மையங்களில் கடந்த மார்ச் 1 முதல் 22-ம் தேதி வரை நடந்தது.

தேர்வு எழுத 7.72 லட்சம் பள்ளி மாணவர்கள், 8,191 தனித் தேர்வர்கள், ஒரு மூன்றாம் பாலினத்தவர், 125 கைதிகள் என ஒட்டுமொத்தமாக 7.80 லட்சம் பேர் வரை பதிவு செய்த நிலையில்,7.67 லட்சம் பேர் மட்டுமே தேர்வில் பங்கேற்றனர்.

விடைத்தாள் திருத்தும் பணி தமிழகம் முழுவதும் 83 முகாம்களில் ஏப்ரல் 1-ல் தொடங்கி 13-ம் தேதியுடன் முடிந்தது. இணையதளத்தில் மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட இதர பணிகளும் முடிக்கப்பட்டுவிட்டன.

இதைத் தொடர்ந்து, ஏற்கெனவே அறிவித்தபடி பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகளை தேர்வுத் துறை இன்று காலை 9.30 மணிக்கு வெளியிட உள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை.

www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.inஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறியலாம். படித்த பள்ளிகள் மூலமாகவும் அறிந்து கொள்ளலாம். ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தேசிய தகவலியல் மையங்கள் மற்றும் அனைத்து மைய, கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்துகொள்ளலாம்.

பள்ளி மாணவர்கள், தனித் தேர்வர்களுக்கு குறுஞ்செய்தியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும். மதிப்பெண் பட்டியலை தலைமை ஆசிரியர்கள் www.dge.tn.gov.in எனும் தளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE