அரசு பள்ளிகள் சத்துணவில் முட்டை வழங்குவது நிறுத்தம் @ சிவகங்கை மாணவர்கள் ஏமாற்றம்

By செய்திப்பிரிவு

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட அரசு பள்ளிகளில் முட்டைகள் திடீரென நிறுத்தப்பட்டதால் மாணவர்கள் ஏமாற்றமடைந்தனர்.

அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு வாரத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை 5 நாட்களுக்கு சத்துணவுடன் முட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது பள்ளிகளில் ஆண்டுத் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு நேற்று திடீரென முட்டை வழங்கவில்லை. சத்துணவு மட்டுமே வழங்கப்பட்டன. இதனால் மாணவர்கள் ஏமாற்றமடைந்தனர்.

ஏப்.23-ம் தேதி வரை பள்ளிகள் உள்ள நிலையில் முட்டைகள் நிறுத்தப்பட்டதால் மாணவர்கள், பெற்றோர் அதிருப்தி அடைந்தனர். இது குறித்து சத்துணவு ஊழியர்களிடம் கேட்டபோது, ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையில் 5 நாட்களுக்குரிய முட்டைகள் வரும். அதை வியாழக் கிழமை வரை வழங்குவோம். ஆனால் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை 2 நாட்களுக்குரிய முட்டைகள் மட்டுமே வந்தன. இதனால் திங்கள் கிழமையோடு முட்டைகள் முடிந்துவிட்டன. முட்டைகள் இல்லாததால் இனிவரும் நாட்களிலும் வழங்கப்படாது என்று கூறினர்.

இது குறித்து கேட்க மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரை (சத்துணவு) மொபைல் போனில் பலமுறை தொடர்பு கொண்டும் அழைப்பை ஏற்கவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE