அனைத்து அரசுப் பள்ளிகளும் இணையதள வசதியை துரிதமாக பெற பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: அரசுப் பள்ளிகள் இணையதள வசதிகளை துரிதமாகப் பெறவேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை செயலர் குமரகுருபரன் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்தவகையில் அரசு நடுநிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகம், தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர 80 ஆயிரம் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி (டேப்) வழங்கப்பட உள்ளது. இவை அனைத்தும் ஜூன் மாதம் பள்ளி திறப்பின்போது முடிக்கும் விதமாக பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இதற்கிடையே, அரசுப் பள்ளிகளில் நடப்பாண்டில் இதுவரை 3 லட்சத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த பணிகளில் ஈடுபட்ட மாவட்டக் கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்களை குரல்வழி பதிவின் வழியாக பள்ளிக்கல்வித்துறை செயலர் ஜெ.குமரகுருபரன் பாராட்டியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். உயர் தொழில்நுட்ப ஆய்வகம், ஸ்மார்ட் போர்டு மற்றும் கையடக்க கணினி போன்ற தொழில்நுட்ப ரீதியிலான வகுப்பறை கற்றலை மாணவர்களுக்கு வழங்க இணையதள வசதி அவசியமானது. இதுவரை சுமார் 1,000 அரசு தொடக்க, நடுநிலைபள்ளிகள் மட்டுமே இணையதள வசதிகளை பெற்றுள்ளன. மற்ற பள்ளிகளும் இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

இணையதள வசதிகளைப் பெறுவதற்கான பணிகளை உடனே தொடங்க வேண்டும். இந்த உட்கட்டமைப்பு வசதிகளை விரைந்து செய்தால் மக்கள் மத்தியில் அரசுப் பள்ளிகள் மீது பெரும் நம்பிக்கை வரும். இந்த 3 மாதத்துக்கான நமது உழைப்பு அடுத்த 30 ஆண்டுகளுக்கான பெரிய மாற்றத்துக்கு அடித்தளமாக இருக்கும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE