1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு 3-ம் பருவத் தேர்வுக்கு ரூ.2.43 கோடி நிதி: தொடக்கக் கல்வித் துறை அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பருவத்தேர்வு நடத்துவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்:

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு எண்ணும், எழுத்தும் திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இதில் மாணவர்கள் கற்றலில் அடைந்துள்ள முன்னேற்றங்களை கண்டறிய குறிப்பிட்ட கால இடைவெளியில் வளரறி மற்றும் தொகுத்தறி மதிப்பீட்டு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி, நடப்பு கல்வியாண்டில் (2023-24) 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு 3-ம் பருவத்துக்கான தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.

இந்த தேர்வுக்கான வினாத்தாள்களை மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளிகளுக்கு வழங்குவதற்கான நிதியானது, வட்டார வாரியாக கணக்கீடு செய்து ஒட்டுமொத்தமாக ரூ.2.43 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வை நடத்தும் பொறுப்பு அலுவலரான வட்டாரக் கல்வி அதிகாரிகள், வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து அவற்றை ஆசிரியர் பயிற்றுநர்களை கொண்டு மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப பிரதி எடுக்க வேண்டும். அதற்கான நிதியானது தற்போது விடுவிக்கப்படுகிறது.

எனவே, பருவத் தேர்வை சிறந்த முறையில் நடத்த தேவையான நடவடிக்கைகளை அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE