இலக்கை அடைய முயற்சி அவசியம்: இந்திய கிரிக்கெட் வீரர் சிவம் துபே

By செய்திப்பிரிவு

வேலூர்: இலக்கை அடைய மாணவர் களுக்கு முயற்சி அவசியம் என்பதுடன் அது படிப்படியாகவும் தொடர்ச்சியாகவும் இருக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் வீரர் சிவம் துபே தெரிவித்தார்.

விஐடி பல்கலைக் கழகத்தில் 'ரிவேரா 24' எனும் சர்வதேசக் கலைத் திருவிழா நேற்று தொடங்கி மார்ச் 3-ம் தேதி வரை தொடர்ந்து 4 நாட்கள் நடைபெறுகிறது. இதில், 25 நாடுகளிலிருந்து 135 பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளைச் சேர்ந்த 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர். ரிவேரா விழாவின் ஒரு பகுதியாகப் பருவ நிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான மாரத்தான் ஓட்டத்தை விஐடி துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் தொடங்கி வைத்தார்.

இதில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். ரிவேரா - 24 கலைத் திருவிழாவை இந்திய கிரிக்கெட் வீரர் சிவம் துபே தொடங்கி வைத்துப் பேசும்போது, ‘‘எனக்கு இந்திய கிரிக்கெட் அணியில் விளையாட வேண்டும் என்ற ஆர்வம் 20-வது வயதில் ஏற்பட்டது. அதற்காகத் தீவிரமாகப் பயிற்சிகளை மேற்கொண்டதால் இந்திய கிரிக்கெட் அணியில் விளையாட முடிந்தது.

மாணவர்கள் தங்களது காலத்தை விரயம் செய்யாமல் தங்களது இலக்கை அடையத் தீவிரமாக முயற்சி செய்ய வேண்டும். அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித்தரும் இடமாக விஐடி பல்கலைக்கழகம் உள்ளது. இதனை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பெற்றோர்களுக்கு எப்போதும் மதிப்பளிக்க வேண்டும். ஏனென்றால் உங்களின் உயர்வுக்கு அவர்கள் தான் காரணம்’’ என்றார்.

சென்னை சூப்பர் கிங்ஸ்........: தொடர்ந்து மாணவர்களின் கேள்விகளுக்கு சிவம் துபே பதிலளித்துப் பேசும்போது, ‘‘கிரிக்கெட்தான் எனது வாழ்க்கையாக மாறும் என்று சிறு வயதில் நினைத்துப் பார்க்கவில்லை. 16 வயதில் தான் எனக்கு கிரிக்கெட் மீதான ஆர்வம் ஏற்பட்டது. பிறகு தீவிரமாகப் பயிற்சி மேற்கொண்டதால் முதலில் ராஞ்சி போட்டியில் விளையாடினேன். பிறகு இந்தியன் பிரீமியர் லீக் ( ஐபிஎல் ) போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடிய தன் மூலம், இந்திய கிரிக்கெட் அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது.

இலக்கை அடைய முயற்சி அவசியம். அந்த முயற்சி படிப்படியாகவும், தொடர்ச்சியாகவும் இருந்தால் நிச்சயம் இலக்கை அடைய முடியும். நான் கிரிக்கெட் வீரராக ஆகவில்லை என்றால் உங்கள் விருப்பப்படி நடிகராகி இருப்பேன். பலருக்கும் பலரும் முன்மாதிரியாக இருப்பார்கள். ஆனால், எனக்கு இந்தியாதான் முன்மாதிரி. மாணவர்களுக்கு ஒவ்வொரு நாளும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதை வீணாக்காமல் நாம் கற்றுக்கொள்ளும் ஒவ்வொரு விஷயமும் இப்போது இல்லையென்றாலும் 5 ஆண்டுகளுக்குப் பிறகாவது நிச்சயம் பலன் தரும்’’ என்றார்.

தொடர்ந்து, நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் பேசும்போது, ‘‘விஐடியில் கடந்த 2002-ம் ஆண்டு ரூ.20 லட்சம் நிதியுடன் தொடங்கிய ரிவேரா திருவிழா இந்தாண்டு ரூ.4 கோடி செலவில் நடத்தப்படுகிறது. வெற்றி பெறும் மாணவர்களுக்கு ரூ.20 லட்சம் பரிசு வழங்கப்பட உள்ளது. மத்திய, மாநில அரசுகள் கல்விக்கும், விளையாட்டுக்கும் கூடுதலாகச் செலவிட வேண்டும்.

2021-ல் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியா ஒரு தங்கம் உட்பட 7 பதக்கங்களை மட்டுமே வெல்ல முடிந்தது. காமன் வெல்த் போட்டிகளில் கூட இந்தியா 4-வது இடம் பிடித்த நிலையில் ஒலிம்பிக் போட்டியில் 58-வது இடம் பிடித்தது. அடுத்த ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா அதிகளவில் பதக்கங்களை வெல்ல வேண்டும். அதற்கேற்ப விளையாட்டு வீரர்களை உருவாக்க அரசுகள் தேவையான செலவுகளைச் செய்ய வேண்டும்’’ என்றார்.

இந்த நிகழ்ச்சியில் விஐடி துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், ஜி.வி.செல்வம், இணைத் துணை வேந்தர் பார்த்த சாரதி மல்லிக், பதிவாளர் டி.ஜெய பாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாரத்தான் ஓட்டத்தில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு கிரிக்கெட் வீரர் சிவம் துபே பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE