“அச்சமற்று எதிர்கொள்ளுங்கள்” - பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

By செய்திப்பிரிவு

சென்னை: "பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை நாளை எழுத உள்ளமாணவர்களுக்கும் மாணவியர்க்கும் எனது வாழ்த்துகள். உங்களது கல்வி வாழ்க்கையின் அடுத்தகட்டமான பிளஸ் 2 இறுதித் தேர்வை அச்சமற்று எதிர்கொள்ளுங்கள். தெளிவாக எழுதுங்கள். நீங்கள் எதிர்பார்க்கும் வெற்றி அமைய வாழ்த்துகிறேன்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை நாளை எழுத உள்ள மாணவர்களுக்கும் மாணவியர்க்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். உங்களது கல்வி வாழ்க்கையின் அடுத்தகட்டமான பிளஸ் 2 இறுதித் தேர்வை அச்சமற்று எதிர்கொள்ளுங்கள். தெளிவாக எழுதுங்கள். நீங்கள் எதிர்பார்க்கும் வெற்றி அமைய வாழ்த்துகிறேன்.

தேர்வு என்பது மற்றுமொரு கல்வியியல் நடைமுறைதானே தவிர, அதுவே உங்களது திறமையை எடைபோடுவதற்கான அளவுகோல் கிடையாது. எனவே எவ்விதப் பதற்றமும் வேண்டாம். பெற்றோர்களும் இதனை நன்கு உணர்ந்து தங்களது குழந்தைகள் மீதான தேவையற்ற அழுத்தங்களைத் தவிர்த்து, அவர்களது வெற்றிக்கு ஊக்கமளிக்க வேண்டும்" என்று முதல்வர் பதிவிட்டுள்ளார்.

தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு நாளை (மார்ச் 1) தொடங்கி மார்ச் 22-ம் தேதி நடைபெற உள்ளது.

முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வை தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3,302 மையங்களில் 7.25 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். பொதுத் தேர்வுக்கான அறை கண்காணிப்பாளர் பணியில் 47 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE