வித்யோதயா பள்ளியில் தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவிகளுக்கு கல்வியாளர் பத்மா ராஜன் நினைவு ரொக்கப் பரிசு: மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் எம்.கே.நாராயணன் வழங்கினார்

By செய்திப்பிரிவு

சென்னை: வித்யோதயா மகளிர் பள்ளியில் பொதுத்தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவிகளுக்கு கல்வியாளர் பத்மாராஜன் நினைவு ரொக்கப் பரிசை மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் எம்.கே.நாராயணன் நேற்று வழங்கினார்.

வித்யோதயா மகளிர் பள்ளியின் நூற்றாண்டு நினைவு விழா சென்னைதியாகராய நகரில் உள்ள வித்யோதயா பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் எம்.கே.நாராயணன் பங்கேற்று வித்யோதயா பள்ளியின் 100 ஆண்டுகள் வரலாற்று தொகுப்பு நூலை வெளியிட்டார். தொடர்ந்து பள்ளியின் நூற்றாண்டு நிறைவை குறிக்கும் வகையில் பிரத்யேக அஞ்சல் உறையை சென்னை மாநகர மண்டல அஞ்சல் துறைத் தலைவர் ஜி.நடராஜன் வெளியிட்டார்.

தொடர்ந்து கடந்த 2022-23 கல்வியாண்டில் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சிறப்பிடம் பிடித்த மாணவிகளுக்கு எம்.கே.நாராயணன் பரிசுகளை வழங்கி கவுரவித்தார். அதன் ஒரு பகுதியாக, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பிடித்த இ.பிரெசில்லா மெர்சி, பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பிடித்த வி.லாவண்யா, சி.ரஷ்மிகா ஆகியோருக்கு கல்வியாளர் பத்மா ராஜன் நினைவு ரொக்கப் பரிசை எம்.கே.நாராயணன் வழங்கினார்.

பத்மா ராஜன் நினைவு ரொக்கப்பரிசு வழங்குவது குறித்து அமெரிக்காவில் உள்ள டேஃப் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அலுவலர் முரளி ராகவன் கூறியதாவது:

எனது சகோதரி பத்மா ராஜன், சென்னை வித்யோதயா பள்ளியின் முன்னாள் மாணவி. மதுரையில் பிறந்து, அமெரிக்காவில் குடியேறியவர். அமெரிக்காவில் தனக்கு பெரும்ஊதியம் தந்த ஆடிட்டர் தொழிலை உதறிவிட்டு, ஏழை மற்றும் ஆதரவற்றகுழந்தைகளின் தொடக்கக் கல்விக்காக செர்பியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டார். அவர் கடந்த ஆண்டு காலமானார். அவரது நினைவாக, வித்யோதயா பள்ளியில் தேர்வில் சிறப்பிடம் பிடிக்கும் மாணவிகளுக்கு ஆண்டுதோறும் ரொக்கப் பரிசு வழங்குவது என முடிவு செய்து, அதற்காக ஒரு வைப்பு தொகையை பள்ளியில் செலுத்தி இருக்கிறேன். அதன் மூலம் தற்போது தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவிகளுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இப்பரிசு பெற்ற மாணவி லாவண்யா,நாட்டின் முதல் நிதியமைச்சர் ஆர்.கே.சண்முகத்தின் கொள்ளுப்பேத்தியும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் எஸ்.வி.சிட்டிபாபுவின் பேத்தியுமாவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா,எம்.கே.நாராயணனின் மனைவி பத்மினி, முரளி ராகவன் மனைவிகவுசல்யா, பள்ளியின் தலைவர் ஜெயந்தி, ஆயுள் கால உறுப்பினர்பிரபா அப்பாசாமி, தாளாளர் நிரஞ்சனா, பொருளாளர் வி.நாகப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE