கடந்த ஆண்டு 300 காப்புரிமைகளைப் பெற்று சென்னை ஐஐடி இரட்டிப்பு சாதனை

By செய்திப்பிரிவு

சென்னை: கடந்த 2023ம் ஆண்டு 300 காப்புரிமைகளைப் பெற்று சென்னை ஐஐடி இரட்டிப்பு சாதனை படைத்துள்ளது. கடந்த 2022-ல் 156 காப்புரிமைகள் பெறப்பட்ட நிலையில், 2023-ல் அது 300 என்ற அளவுக்கு கணிசமாக அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை ஐஐடி கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டபின் 1975-ல் முதன்முறையாக காப்புரிமைக்கு விண்ணப்பிக்கப்பட்டது. தற்போதுவரை இந்தியாவிலும் (1,800), வெளிநாடுகளிலும் (750) மொத்தம் 2,550 அறிவுசார் சொத்து (காப்புரிமை உள்பட) விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் சுமார் 1,100 விண்ணப்பங்கள் ஐபி-க்கள்/ அனுமதிக்கப்பட்ட காப்புரிமைகள் எனப் பதிவு செய்யப்பட்டவையாகும் (சுமார் 900 இந்தியாவையும், & 200 சர்வதேச நாடுகளையும் சேர்ந்தவை).

சென்னை ஐஐடி 1975-ம் ஆண்டு ஜனவரியில் காப்புரிமை விண்ணப்பங்களைத் தாக்கல் செய்யத் தொடங்கியது பெருமைக்குரிய விஷயமாகும். மொத்த ஐபி விண்ணப்பங்களின் எண்ணிக்கை 2016-ல் 1,000-ஐயும், 2022-ல் 2,000-ஐயும், 2023-ல் 2,500-ஐயும் கடந்துள்ளது. ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்களின் முன்னோடியான, விளைவை ஏற்படுத்தும் ஆராய்ச்சியைப் பாராட்டிய சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, “நாம் சுதந்திரத்தின் 100-வது ஆண்டை நோக்கிப் பயணிக்கும்போது இந்தியா வல்லரசு நாடாக உருவெடுக்க நமது கருத்துக்களைப் பாதுகாக்க வேண்டியது அவசியமாகிறது. அதிக எண்ணிக்கையிலான காப்புரிமைகளைத் தாக்கல் செய்து சாதனை படைக்கும் வகையில் விரிவான திட்டத்தைத் தொகுத்தளித்த தொழில்துறை ஆலோசனை மற்றும் நிதியுதவி ஆராய்ச்சி அலுவலகத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு எனது பாராட்டுகள்” எனக் குறிப்பிட்டார்.

வயர்லெஸ் நெட்வொர்க்குகள், நவீனப் பொருட்கள், ரோபாட்டிக்ஸ், சேர்க்கை உற்பத்தி தொழில்நுட்பம், இயந்திர முன்னேற்றங்கள், உதவி சாதனங்கள், மேம்பட்ட சென்சார் பயன்பாடுகள், தூய்மையான எரிசக்தி, விண்வெளிப் பயன்பாடுகள், பாலிமர் பொருட்கள் மற்றும் மென்படலம், வினையூக்கிகள், உயிரியல் மருத்துவப் பயன்பாடுகள் போன்ற களங்களிலும், வளர்ந்துவரும் பல்வேறு தொழில்நுட்பங்களிலும் சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் ஏற்கனவே அறிவுசார் சொத்துகளை (IP) உருவாக்கியுள்ளனர்.

அறிவுசார் சொத்து மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றம் தொடர்பான பல்வேறு அம்சங்களை ஒருங்கிணைக்கும் பணியை சென்னை ஐஐடி-ல் உள்ள தொழில்துறை ஆலோசனை மற்றும் நிதியுதவி ஆராய்ச்சி (Industrial Consutancy and Sponsored Research- ICSR) அலுவலகம் மேற்கொண்டு வருகிறது.

ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்களுடன் இணைந்து செயல்பட்டு வரும் இந்த மையத்தில் பிரத்யேக சட்டப்பிரிவு ஒன்றும் இயங்கி வருகிறது. ஆராய்ச்சியாளர்களுக்கு இக்கல்வி நிறுவனம் வழங்கிவரும் ஆதரவு குறித்து விவரித்த சென்னை ஐஐடி டீன் (ஐசி&எஸ்ஆர்) பேராசிரியர் மனு சந்தானம், “ஆன்லைன் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான காப்புரிமைத் தேடல் கருவிகள் மூலம் தற்போதுள்ள காப்புரிமைத் தகவல்களை அணுகுவதை இக்கல்வி நிறுவனம் எளிதாக்கியுள்ளது. கண்டுபிடிப்பாளர்கள் தங்களது கண்டுபிடிப்புகளை விரைவாக மதிப்பீடு செய்து கொள்வது மட்டுமின்றி, தங்களது யோசனைகள் மற்றும் கருத்துகளை மேம்படுத்துவதற்கும் இந்த வசதி உதவிகரமாக இருந்துள்ளது. ஐபி-யாக உருவாக்கப்படும் படைப்பின் தரத்திற்கும் சம்மான முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. எங்களது கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் ஐபி குழுவின் கூட்டு முயற்சியால்தான் இதனை செயல்படுத்த முடிந்தது” என்றார்.

சென்னை ஐஐடி முன்னாள் டீன் (ஐசிஎஸ்ஆர்) பேராசிரியர் ரவீந்திர கெட்டு கூறும்போது, “ஐஐடிஎம்-ல் ஐபி உருவாக்குவதில் 3 அம்சங்கள் உள்ளன. ஐபி தாக்கல் செய்வதை தெளிவுபடுத்துதல், எளிமைப்படுத்துதல், நீக்குதல்; ஆசிரியர்கள் காலதாமதம் இன்றியும் நடைமுறைகளைப் பற்றிக் கவலைப்படாமலும் விரைவாக தாக்கல் மற்றும் பின்தொடர்தல் பணிகளை மேற்கொள்ளுதல், ஐபி மூலம் தொழில்நுட்ப பரிமாற்றத்தை ஏற்படுத்தி பணமாக்குதல். இதில் வெற்றி பெற்ற நிகழ்வுகளும், ஊக்கங்களும் கணிசமான அளவுக்கு உதவுகின்றன” எனத் தெரிவித்தார்.

சென்னை ஐஐடி கண்டுபிடிப்பாளர்கள் கூறுவது என்ன?: சென்னை ஐஐடி வேதியியல் துறையின் இன்ஸ்டிடியூட் பேராசிரியர் டி.பிரதீப், 100-க்கும் மேற்பட்ட இந்தியக் காப்புரிமை விண்ணப்பங்களையும் (ஜனவரி 2004 முதல்) மற்றும் சுமார் 50 சர்வதேச காப்புரிமை விண்ணப்பங்களையும் (ஜனவரி 2005 முதல்) தாக்கல் செய்திருக்கும் சிறந்த கண்டுபிடிப்பாளர்களில் ஒருவர். ஒட்டுமொத்தமாக சுமார் 100 மானியங்களைப் பெற்றுள்ளார். காப்புரிமை தாக்கல் செய்வதில் கிடைத்துள்ள வெற்றி குறித்து பேசிய பத்மஸ்ரீ விருது பெற்ற பேராசிரியர் டி.பிரதீப், “20 ஆண்டுகளுக்கு முன் எனது முதல் காப்புரிமையைத் தாக்கல் செய்தபோது அதற்குரிய வழிமுறைகள் ஏதும் இல்லை. காப்புரிமை வரைவு தாக்கல் செய்தல், தேர்வு அறிக்கைகளுக்கு பதிலளித்தல், வணிகப்படுத்துதல் போன்ற அனைத்தையும் நானே செய்து முடித்தேன். காப்புரிமை தாக்கல் மற்றும் வணிகப்படுத்துதல் ஆகியவற்றை மேற்கொள்ள வலுவான அமைப்புமுறையை பல ஆண்டுகள் பாடுபட்டு உருவாக்கியிருக்கிறோம். இந்த அமைப்புமுறையைப் பயன்படுத்தி மூன்றே நாட்களுக்குள் காப்புரிமைக்கு தாக்கல் செய்திருக்கிறேன். வணிகப்படுத்துதலுக்காக சாத்தியமான கூட்டாளர்களை அணுகியுள்ளேன். எனது 25 ஐபிக்கள் ஏதோ ஒரு வகையில் வணிகப்படுத்தப்பட்டுள்ளன” என்று குறிப்பிட்டார்.

சென்னை ஐஐடி இயற்பியல் துறை பேராசிரியர் எம்.எஸ்.ராமச்சந்திர ராவ் கூறும்போது, “நாம் எதிர்பார்க்கும் ஒவ்வொரு காப்புரிமையும் சட்டப்பூர்வ ஆவணம் மட்டுமல்ல; தொலைநோக்குக் கருத்துகளை உறுதியான தீர்வுகளாக மாற்றும் நமது முயற்சிகளுக்கு சான்றாகும். புதுமை என்பது வெறும் சுருக்கமான கருத்து அல்ல- உண்மையில் முன்னேற்றத்திற்கான உந்துசக்தியாகும். அத்துடன் காப்புரிமைக்கும் வணிகப்படுத்தலுக்கும் இடையேயான தொடர்பு முக்கியமான ஒன்றாகும். காப்புரிமைகள் நமது அறிவுசார் சொத்துகளைப் பாதுகாப்பது மட்டுமின்றி, வணிக வெற்றிக்கான நெம்புப்பலகை போன்று செயல்படுகின்றன. மொத்தத்தில், காப்புரிமைகளை செயல்படுத்துவதன் மூலம் தொழில்கள் மற்றும் ஸ்டார்ட்அப்களுக்கு உதவுதல் என்ற பொறுப்புணர்வும் இணைந்திருக்கிறது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

19 hours ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

2 days ago

கல்வி

2 days ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

5 days ago

கல்வி

5 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

மேலும்