சென்னை ஐ.ஐ.டி.யின் ஒளியூட்டும் மாணவர்கள்!

By செய்திப்பிரிவு

ஆளில்லாத் தெருக்களில் இரவு முழுக்க வீணாக எரிந்துகொண்டிருக்கும் தெருவிளக்குகளைப் பார்த்திருக்கிறோம். சென்னை மாநகரத்தில் மட்டும் ஆண்டுதோறும் தெருவிளக்குகளுக்கென ரூ. 52.08 கோடி செலவில் 331.32 மெகா வாட்ஸ் மின்சாரத்தைச் சென்னை மாநகராட்சி வழங்கிவருகிறது. இதில் கிட்டத்தட்ட 40 சதவீத மின்சாரம் வீணாகிறது. மின்சாரத்தைச் சேமிக்கும் விதமாகப் பொருத்தப்பட்டுள்ள எல்.இ.டி. விளக்குகளும் இதில் அடங்கும். இதுபோன்ற செய்திகளை படித்துவிட்டுக் கடந்துபோயிருப்போம்.

ஆனால், சென்னை ஐ.ஐ.டி. மாணவர்களான சுஷாந்த், அபிஷேக், அர்னாப் ஸ்ரீவாஸ்தவா, ஷஷாங்க் ஆகியோர் அறிவுபூர்வமாக இதற்குத் தீர்வு கண்டறிந்திருக்கிறார்கள். மின்சார விரயத்தைத் தடுக்கப் போக்குவரத்து இருக்கும்போது மட்டும் 100 சதவீதம் ஒளி வீசி மற்றநேரங்களில் மங்கலாக ஒளிரும் மின்விளக்குத் தொழில்நுட்பத்தை இவர்கள் வடிவமைத்திருக்கிறார்கள். ‘புத்திசாலித்தனமாக ஒளியூட்டும் அமைப்பு’ என்ற இவர்களுடைய திட்டத்தின் மூலம் சாலையில் நடமாட்டம் இல்லாதபோது 30 சதவீதம் மட்டுமே மின்விளக்குள் ஒளிரும்.

மின்சாரச் சேமிப்பு, செலவு குறைப்பு

“நெடுஞ்சாலைகளைத் தவிர மற்ற தெருக்களில் மக்கள் இரவு முழுவதும் பயணித்தபடியே இருப்பதில்லை. இதை அடிப்படையாக வைத்து யோசித்தால் தற்போது செலவழிக்கப்படும் மின்சாரத்தில் 40 சதவீதத்தை மிச்சப்படுத்தலாமே! இதற்கான தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்தால் என்ன என்ற யோசனை சென்னை ஐ.ஐ.டி.யில் சேர்ந்ததுமே எழுந்தது” என்கிறார் சென்னை ஐ.ஐ.டி.யின் பி.இ. மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாணவரான சுஷாந்த்.

தன்னுடைய கருத்தை சுஷாந்த் நண்பர்களிடம் பகிர்ந்தபோது அதில் உற்சாகமாகப் பங்கேற்க முன்வந்ததாக, சுஷாந்த்தின் வகுப்புத் தோழர் ஷஷாங்க், பி.இ. எலக்ட்ரானிக் இன்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாணவர்களான அபிஷேக், அர்னாப் ஸ்ரீவஸ்தவா ஆகியோர் தெரிவிக்கின்றனர். 2016-ம் ஆண்டு நவம்பரில் இதற்கான ஆய்வை நால்வரும் இணைந்து தொடங்கினர். அதை அடுத்துப் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் ‘கார்பன் ஜீரோ சேலஞ்ச்’ என்னும் தென்னிந்திய அளவிலான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் குறித்த போட்டியில் வெற்றிபெற்றனர்.

“நம்மால் புதிய ஆற்றலை உருவாக்க முடியாவிட்டாலும் இருப்பதைச் சேமித்து வீணாகாமல் தடுக்கலாம் இல்லையா? எங்களுடைய திட்டத்தின் அடிப்படையே மின்சாரத்தை சேமித்து அதற்கான செலவையும் குறைக்க வேண்டும் என்பதுதான். பொறியாளர்கள் இதுபோன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாவிட்டால் வேறு யார்தான் செய்வார்கள்?” என்று உற்சாகமாகக் கேள்வி எழுப்புகிறார்கள் நால்வரும்.

தங்களுடைய புதிய கருத்தாக்கத்தைப் பதிவுசெய்து இடைக்காலக் காப்புரிமையும் பெற்றுவிட்டார்கள் ஒளியைச் சேமித்து ஒளிரும் இந்தப் புத்திசாலி மாணவர்கள்!

சேமிப்பது எப்படி?

புத்திசாலித்தனமாக ஒளியூட்டும் அமைப்பில், ஒரு கண்ட்ரோல் மாட்யூல், சென்சார் மாட்யூல். எல்.இ.டி. டிரைவர் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டிருக்கின்றன. கிளவுட்ஸ் தொழில்நுட்பம், செல்லுலார் நெட்வர்க் மூலமாகத் தெருவிளக்குக்குத் தகவலைப் பரிமாறும் பணியை கண்ட்ரோல் மாட்யூல் செய்யும். பாதசாரிகள், வாகனங்களின் வருகையைச் சென்சார் மாட்யூல் கண்டுபிடிக்கும். கடைசியாக எல்.இ.டி. பேனலுக்கு எவ்வளவு மின்சாரத்தைச் செலுத்த வேண்டும் என்பதை எல்.இ.டி. டிரைவர் கட்டுப்படுத்தும்.
 

17CH_Ilight2rightஎந்திரனுக்கும் தேவை இயந்திரமே!

மகாராஷ்டிர மாநிலத்தின் புனே நகரத்தைச் சேர்ந்த சுஷாந்த் அங்குள்ள மாநில அரசுப் பள்ளியில் படித்த பின்தங்கிய சூழலில் இருந்துவந்த மாணவர். கல்வியில் கடும் போட்டி நிறைந்த காலகட்டத்தில் ஐ.ஐ.டி.க்கு எப்படித் தேர்வானார் என்று கேட்டபோது, “நான் ஜெ.இ.இ. தேர்வுக்குத் தயாராக எந்தச் சிறப்பு வகுப்புகளுக்கும் சென்றதில்லை. எப்போதுமே எனக்கு அறிவியலில் பேரார்வம் உண்டு. அதனால் எல்லாவற்றையும் புரிந்து படித்து, படித்ததைச் செயல்முறையில் சோதித்துப் பார்ப்பேன்.

அப்படித்தான் என்னுடைய பாடங்கள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்தேன். ஐ.ஐ.டி.யில் தேர்வாகி மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் சேர்ந்தபோதும் மற்ற தொழில்நுட்பப் பிரிவுகளில் எதாவது தேர்ந்தெடுத்திருக்கலாமே என்று மட்டம்தட்டப்பட்டேன். ஆனால், இன்று தயாரிக்கப்படும் அதிநவீனத் தொழில்நுட்பச் சாதனங்கள் அத்தனைக்கும் அடிப்படை இயந்திர வடிவமைப்புதான். எந்திரனுக்கும் தேவை இயந்திரமே என்பதால், இத்துறையை விரும்பித் தேர்ந்தெடுத்தேன்” என்கிறார் சுஷாந்த்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

3 days ago

கல்வி

2 days ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

4 days ago

கல்வி

4 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

கல்வி

7 days ago

கல்வி

8 days ago

கல்வி

9 days ago

கல்வி

9 days ago

கல்வி

10 days ago

கல்வி

10 days ago

மேலும்