“2040-க்குள் நிலவில் இந்தியர் கால் பதிப்பார்” - ‘சந்திரயான் 3’ திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் உறுதி

By ஆர்.டி.சிவசங்கர்


உதகை: 2040-ம் ஆண்டுக்கு இந்தியா மனிதனை நிலவுக்கு அனுப்பும் பணி நிறைவேற்றப்படும் என ‘சந்திரயான் 3’ திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் உதகையில் தெரிவித்தார். நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள ஜெஎஸ்எஸ். பார்மசி கல்லூரியில் ‘விண்வெளியில் இந்தியா’ என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் நடந்த இந்த கருத்தரங்கில் சந்திரயான் 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மாணவர்களுக்கு விண்வெளி குறித்தும், சந்திராயன் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்.

அவர் நிருபர்களிடம் கூறியது: “ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு மற்று ஊரக பள்ளி மாணவர்களை ஊக்கமளிக்கும் வகையில் விண்வெளி மற்றும் சந்திரயான் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இன்று உதகையில் இந்நிகழ்ச்சி நடந்தது. இஸ்ரோ சார்பில் ரிமோட் சென்சிங், தகவல் தொடர்பு, வானிலை, ஜிபிஆர்எஸ், வழிக்காட்டி, கடலியல் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மேலும், செவ்வாய் கிரகம், சூரியன் ஆகியவற்றை ஆய்வு செய்ய கோள்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

அறிவியல் சார்ந்த செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இவற்றின் மூலம் பெறப்படும் தகவல்கள் மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்கு பயனுள்ளதாக அமைந்தது வருகிறது. இந்நிலையில், இந்தியா சார்பில் விண்வெளியில், விண்வெளி ஆராய்ச்சி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தியா சார்பில் வரும் 2040-ம் ஆண்டுக்குள் மனிதனை நிலவுக்கு அனுப்பும் பணி நிறைவேற்றப்படும். சந்திராயன் 3 செயற்கைக்கோள் லேண்டர் மற்றும் ரோவர் அடங்கியது. இதன் ஆயுட்காலம் ஒரு லூனார் நாளாகும். அதன் ஆயுட்காலம் முடிவடைந்து விட்டது. அந்த செயற்கைக்கோள் எந்த நோக்கத்துக்காக விண்ணுக்கு செலுத்தப்பட்டதோ அந்த நோக்கம் முழுமையாக நிறைவேறியுள்ளது.

இந்தத் திட்டத்தில் மற்றொரு சாதனையாக லேண்டர் எந்த இடத்தில் தரை இயக்கப்பட்டதோ அந்த இடத்திலிருந்து வேறொரு இடத்துக்கு அதே எஞசின் கொண்டு செல்லப்பட்டு தரையிறக்கப்பட்டது. இந்த திட்டத்தில் பயன்படுத்தப்பட்ட ஆர்பிட்டர் நிலவின் சுற்றுவட்ட பாதையிலிருந்து மீண்டும் பூமிக்கு வெற்றிகரமாக திரும்ப கொண்டு வரப்பட்டது. இதிலிருந்து பெறப்படும் தகவல்கள் பிற திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும்” என்று அவர் கூறினார்.

இந்தக் கருத்தரங்களில் நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் அரிமா சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE