இளைஞர் ஒலிம்பியாட் தேர்வு ஏப்ரல் 8 முதல் 12-ம் தேதி வரை நடக்கிறது: கல்லூரி மாணவர்கள் பங்கேற்க யுஜிசி அழைப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான இளைஞர் ஒலிம்பியாட் தேர்வானது வரும் ஏப்.8-ம் தேதி ஆன்லைனில் நடைபெறுகிறது. இதில் கல்லூரி மாணவர்கள் அதிகளவில் பங்கேற்க பல்கலைக்கழக மானியக் குழுமம் (யுஜிசி) அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து யுஜிசியின் செயலர்மணீஷ் ஆர்.ஜோஷி அனைத்து பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தேசிய அளவில் சிக்கலான சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையிலான திறன்களை மாணவர்கள் பெறுவதற்காக இளங்கலை படிப்புகளில் சுற்றுச்சூழல் படிப்பை கட்டாயமாக செயல்படுத்துவது குறித்து உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக நாட்டின்சுற்றுச்சூழல் மற்றும் நிலையான வளர்ச்சி தொடர்பான பிரச்சினைகளை மையமாக கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் கல்லூரி மாணவர்களுக்காக யுஜிசி,கல்வி அமைச்சகம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்ட இளைஞர் ஒலிம்பியாட் தேர்வுக்கு மத்திய அரசின் ஆற்றல் மற்றும் வளங்கள் நிறுவனம் (டெரி) ஏற்பாடு செய்துள்ளது.

50 கேள்விகளுக்கு... இந்த தேர்வானது ஆன்லைனில் வரும் ஏப்.8 முதல் ஏப்.12-ம் தேதிவரை நடக்கிறது. மொத்தம் 60 நிமிடங்கள் நடைபெறும் இந்த தேர்வில் 50 கேள்விகளுக்கு பதில்அளிக்க வேண்டும். இந்தியா முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட மாணவர்கள் வரும் பிப்.25-ம் தேதிக்குள் பதிவு செய்துகொள்ளலாம்.

போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள், முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு ரொக்க பரிசுகள், ஆற்றல் மற்றும் வளங்கள் நிறுவனத்தில் திறன்பயிற்சி பெறுவதற்கான வாய்ப்புகள், இளைஞர் நெட்வொர்க் குழுவில் உறுப்பினர் தகுதி உள்ளிட்டவை வழங்கப்படும்.

நேரடி ஒளிபரப்பு: முன்னதாக இளைஞர் ஒலிம்பியாட் நிகழ்ச்சியின் வெளியீட்டு விழா ஆன்லையில் வரும் ஜன.31-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான இணைப்புகள் மின்னஞ்சல் மூலம் கல்வி நிறுவனங்களுக்கு பகிரப்படும். மேலும் யுஜிசியின் ட்விட்டர் மற்றும் https://www.youtube.com/@UGC_India/featured என்ற யூடியூப் பக்கத்திலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE