காவல் துறை இடத்தில் இருந்த தளி அரசுப் பள்ளிக்கு செல்லும் பாதை அடைப்பு: மாணவிகள் அதிர்ச்சி

By செய்திப்பிரிவு

ஓசூர்: தளி அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளிக்குச் செல்லும் பாதை காவல் துறைக்குச் சொந்தமான இடம் என்பதால், திடீரென தடுப்புச் சுவர் கட்டப்பட்டதால், மாணவிகள் பள்ளிக்குச் செல்வதில் சிரமம் ஏற்பட்டது.

தளி அரசு மகளிர் உயர் நிலைப் பள்ளியில் சுமார் 250 மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளி வளாகத்தில் மாணவிகள் விடுதி மற்றும் அரசு கலைக் கல்லூரி தற்காலிகமாக செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிக்கு முறையான நுழைவு வாயில் இல்லாத நிலையில் பள்ளி வளாகம் அருகேயுள்ள காவல் நிலைய வளாகத்தின் வழியாக மாணவிகள் பள்ளிக்கு வந்து சென்றனர்.

இந்நிலையில், அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து நேற்று பள்ளி திறக்கப்பட்ட நிலையில் வழக்கமாக மாணவிகள் வரும் காவல் நிலைய பாதை தடுப்புச் சுவர் அமைத்து மூடப்பட்டிருந்தது. இதனால், மாணவிகள் பள்ளிக்குச் செல்ல முடியாமல் பரிதவித்தனர்.

மேலும், தகவல் அறிந்து அங்கு திரண்ட பெற்றோர் காவல் நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது, “காவல் துறைக்குச் சொந்தமான இடம் என்பதால், பாதுகாப்புக் கருதி சுவர் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, மாற்றுப் பாதை வழியாக மாணவிகள் பள்ளிக்குச் செல்ல வேண்டும்” என்றனர். இதனால், ஆத்திரமடைந்த பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

பின்னர் ஊர் முக்கியஸ்தர்கள் பெற்றோர்களை சமாதானம் செய்தனர். இதையடுத்து, மாணவிகள் அப்பகுதியில் உள்ள சிறிய சந்து வழியாக பள்ளிக்குச் சென்றனர். இது தொடர்பாக மாணவிகளின் பெற்றோர் கூறும்போது, “தற்போது மாணவிகள் பள்ளிக்கு செல்ல பயன்படுத்தும் பாதையில் பாதுகாப்பு இல்லை. எனவே, மாணவிகள் பள்ளிக்குச் சென்று வர பாதை வசதியை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்” என்றனர்.

இது தொடர்பாக போலீஸார் கூறும்போது, “அரசுப் பள்ளிக்குப் பாதை இல்லாததால் காவல் நிலையத்துக்குச் சொந்தமான பாதையை இதுவரை மாணவிகள் பயன்படுத்தி வந்தனர். தற்போது, உயர் அதிகாரிகள் உத்தரவுப்படி காவல்துறைக்குச் சொந்தமான இடத்தில் சுவர் கட்டப்பட்டுள்ளது. மேலும், பள்ளிக்கு அருகே வருவாய்த் துறையினருக்குச் சொந்தமான இடம் உள்ளது. அப்பகுதியில் 10 அடியில் பள்ளிக்குச் செல்ல பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE