கருவடிக்குப்பம் காமராஜர் மணிமண்டபத்தில் யுபிஎஸ்சி பயிற்சி மையம் அமையுமா?

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த 2007-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் முதல்வராக ரங்கசாமி இருந்த போது, கருவடிக்குப்பம் சித்தானந்தா கோயில் அருகே ரூ.14 கோடியில் 3.75 ஏக்கரில் காமராஜருக்கு மணிமண்டபம் அமைக்க அடிக்கல் நாட்டினார். நிதி நெருக்கடி காரணமாக, 2009-ம் ஆண்டு இந்தப் பணி நிறுத்தப்பட்டது. தொடர்ந்து 2014-ம் ஆண்டு ஹட்கோ கடனுதவியுடன் மீண்டும் கட்டுமான பணி தொடங்கியது. அப்போதும் முதல்வராக இருந்த ரங்கசாமி, 2-வது முறையாக காமராஜர் மணிமண்டபத்துக்கு அடிக்கல் நாட்டினார்.

இந்த மணிமண்டபத்தில் யுபிஎஸ்சி பயிற்சி மையம், உலகத்தரம் வாய்ந்த நூலகம், 130 பேர் அமரக் கூடிய ஆடிட்டோரியம், 4,417 சதுர அடி தரைத்தளம், காமராஜர் சிலை, அவரது வாழ்க்கை வரலாற்று புகைப்பட கண்காட்சி உள்ளிட்டவை அமைக்க முடிவு எடுக்கப்பட்டு, பணிகள் நடந்தன. இறுதியில் ரூ.23 கோடியில் கட்டப்பட்டுள்ள காமராஜர் மணி மண்டபத்தை 14 ஆண்டுகளுக்குப் பின், கடந்த 2022-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் டெல்லியில் இருந்தபடி திறந்து வைத்தார். அதன்பிறகு மண்டபம் பயன்படுத்தப்படாமல் 6 மாதங்கள் வரை அப்படியே இருந்தது.

இந்நிலையில் காமராஜர் பிறந்தநாளான 2022 ஜூலை 15-ம் தேதி முதன்முறையாக இந்த மணிமண்டபம் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. இந்நிகழ்வில் ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது, ‘இவ்வளாகத்தில் உலக தரத்திலான நூலகம், யுபிஎஸ்சி பயிற்சி மையம் அமைக்கப்படும்’ என்று முதல்வர் ரங்கசாமி உறுதி அளித்தார். ஆளுநரும், உலகத்தரம் வாய்ந்த புத்தகங்களும், மாணவர்கள் பயிற்சி பெறும் வகையில் கணினிகளும் இங்கு இடம் பெறும் என்று குறிப்பிட்டார்.

அறிவித்து ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகும் ரூ.23 கோடியில் கட்டப்பட்ட காமராஜர் மணி மண்டபத்தில் அவ்வாறு எதுவும் வரவில்லை. விழாக்கள் நடத்த மட்டுமே இந்த மணிமண்டபம் பயன்படுகிறது.

இந்த பெரிய கட்டிடத்தின் ஒரு பகுதியில் சென்டாக் அலுவலகம் மட்டும் செயல்படுகிறது. யுபிஎஸ்சி பயிற்சிக்காக கட்டப்பட்ட இம்மையத்தில் தற்போது எந்தப் பயிற்சியும் தரப்படவில்லை. முதல்வர் குறிப்பிட்டது போல, உலகத்தரம் வாய்ந்த நூலகமும் கொண்டு வரப்படவில்லை.

போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளையோர் இதுபற்றி கூறுகையில், காமராஜர் மணிமண்டபத்தில் யுபிஎஸ்சி தொடங்கி அனைத்து நுழைவுத்தேர்வுகளுக்கும் பயிற்சி மையம் அமைப்பார்கள் என காத்திருந்தோம். அவ்வாறு எந்த மையமும் அமைக்கப்படவில்லை; எந்த பயிற்சியும் தரப்படுவதில்லை.

யுபிஎஸ்சி பயிற்சி பெற வெளியூர் செல்ல வேண்டியுள்ளது. இதர நுழைவுத்தேர்வுகளுக்கும் இங்கு பயிற்சி வகுப்பு நடத்தலாம். அதையும்செய்யவில்லை. இளையோர் எதிர்காலத்தை மேம்படுத்த கட்டப்பட்ட இம்மையம் அரசு விழாக்கள் நடைபெறும் இடமாக மாறி வருகிறது.

யுபிஎஸ்சி பயிற்சி, உயர்கல்விக்கான பயிற்சி வகுப்புகள், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு பயிற்சி, ஜிப்மர் நுழைவுத்தேர்வு பயிற்சி, நீட் தேர்வு பயிற்சி, ஜேஇஇ நுழைவுத்தேர்வு பயிற்சி போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி ஆகியவற்றை காமராஜர் மணிமண்டபத்தில் அரசு நடத்தினால் நாங்கள் பயன்பெறுவோம்.

மேலும், இங்கு கணினிகள் அமைக்கப்பட்டு, இளையோருக்கு தேவைப்படும் பைத்தான், ஏஐ, டேட்டா சயின்ஸ் போன்ற கணினி பயிற்சிகளும் நடத்தலாம். அந்தளவுக்கு இங்கு இடமுள்ளது என்று தெரிவிக்கின்றனர்.

இளையோருக்கான பயிற்சி மையங்கள் அமைப்ப தோடு, காமராஜர் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் புகைப்படக்கண்காட்சியையும் காலம் தாழ்த்தாமல் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

12 hours ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

2 days ago

கல்வி

2 days ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

4 days ago

கல்வி

4 days ago

கல்வி

4 days ago

கல்வி

4 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

கல்வி

7 days ago

கல்வி

7 days ago

மேலும்