தேன்கனிக்கோட்டை அருகே அந்தேவனப்பள்ளியில் ‘வலுவிழந்த’ கட்டிடத்தில் இயங்கும் அரசுப் பள்ளி!

By கி.ஜெயகாந்தன்

ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே 63 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தில் இயங்கி வரும் அரசுப் பள்ளி கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டு, புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். தேன்கனிக்கோட்டை அருகே அந்தேவனப்பள்ளி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இப்பள்ளி கடந்த 1960-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் காமராஜரால் திறந்து வைக்கப்பட்டது. தற்போது, இப்பள்ளியில் 100 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

கட்டிடம் கட்டி 63 ஆண்டுகளைக் கடந்த நிலையில், தற்போது பள்ளிக் கட்டிடத்தின் மேற்கூரை ஓடுகள் சேதமடைந்தும், சுவர்கள் வலுவிழந்தும் உள்ளது. மேலும், மழைக் காலங்களில் மழை நீர் வகுப்பறையில் ஒழுகுவதால், வகுப்பறையில் மாணவர்கள் அமர முடியாத நிலை பல ஆண்டாய் நீடித்து வருகிறது. மேலும், வகுப்பறையின் உள்ளே பழைய இரும்பு நாற்காலி, மேசைகளும் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதனால், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற இடவசதியும் இல்லை. பள்ளியின் சுற்றுச்சுவரும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே, பள்ளி கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுற்றுச்சுவர் இடிந்த நிலையில், பழமையான ஓட்டுக் கட்டிடத்தில் இயங்கும்
அந்தேவனப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி.

இதுதொடர்பாக மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது: அனைவரும் படிக்க வேண்டும் என்ற உயர்ந்த லட்சத்துடன் கிராமங்கள் தோறும் பள்ளிகளை காமராஜர் திறந்து வைத்தார். அந்த அடிப்படையில் எங்கள் கிராமத்திலும் இப்பள்ளி திறக்கப்பட்டது. இப்பள்ளியில் படித்த பல மாணவர்கள் உயர் பதவியிலும், தொழில் அதிபர்களாகவும் உள்ளனர். பள்ளிக் கட்டிடம் கட்டி 63 ஆண்டுகளைக் கடந்த நிலையில் கட்டிடம் வலுவிழந்த நிலையில் உள்ளது. சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், சாலையிலிருந்து 7 அடி பள்ளத்தில் பள்ளிக் கட்டிடம் உள்ளது.

இதனால், மழைக் காலங்களில் பள்ளியைச் சுற்றிலும் மழைநீர் சூழ்ந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர். இதுதொடர்பாக கல்வித் துறை அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால், மழைக் காலங்களில் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப அச்சமாக உள்ளது. எனவே, பழமையான கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்டிக் கொடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE