சென்னை: சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்) - என்பிடெல், இந்தியாவில் வேகமாக வளர்ந்துவரும் துறையான விளையாட்டு அறிவியல் பாடத்தில் 7 புதிய ஆன்லைன் படிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பாடப்பிரிவுகளை ஆன்லைனில் கட்டணம் ஏதுமின்றி படிக்கலாம்.
கோட்பாடு மற்றும் நடைமுறை பயன்பாடு ஆகியவற்றுக்கு இடையிலான இடைவெளியைக் குறைப்பதை இந்த விரிவான ஆன்லைன் படிப்புகள் நோக்கமாகக் கொண்டிருக்கின்றன. இந்திய மற்றும் தெற்காசிய உடல் அமைப்பு மற்றும் கலாச்சார அம்சங்களுக்கு ஏற்ப இப்பாடப்பிரிவுகள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.
இந்த 7 பாடப்பிரிவுகளுக்கான முதல் பேட்ச் வகுப்புகள் 19 பிப்ரவரி 2024 அன்று தொடங்குவதுடன், விண்ணப்பிக்கவும் அன்றே கடைசி நாளாகும். விண்ணப்பிக்க வேண்டிய என்பிடெல் இணையமுகவரி https://nptel.ac.in/courses.
இப்படிப்புகள் தொடர்பான அறிமுக வீடியோவை பின்வரும் இணைப்பில் காண்பதுடன் பதிவிறக்கமும் செய்துகொள்ளலாம்- https://drive.google.com/file/d/1eJ4nU3lDvJ5gs0NtCgFZ5M-wg_9pzOj5/view
தேசிய தொழில்நுட்ப மேம்பாடு கற்றல் திட்டம் (NPTEL) கடந்த 2003-ல் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகம் மற்றும் 7 இந்திய தொழில்நுட்பக் கழகங்களில் (சென்னை, முமு்பை, டெல்லி, கான்பூர், காரக்பூர், கவுகாத்தி, ரூர்க்கி) தொடங்கப்பட்டது.
இப்பாடத்திட்டத்தின் முக்கியத்துவத்தை விளக்கிய சென்னை ஐஐடி என்பிடெல் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஆண்ட்ரூ தங்கராஜ், "இந்த விரிவான படிப்புகள் இந்தியாவை மையமாகக் கொண்ட விளையாட்டுத் தேவைகளை நிறைவுசெய்வதுடன், சிறந்த அனுபவத்தை அளிக்கக்கூடிய அணுகுமுறையை ஊக்குவிக்கும். இந்தியாவில் வேகமாக விரிவடைந்து வரும் போட்டி விளையாட்டுகளுடன் விளையாட்டுக் களங்களில் நுணுக்கங்களை அறிந்திருப்போருக்கான தேவை அதிகளவில் இருந்துவருகிறது. செயல்திறனை மேம்படுத்துதல், உணவு மற்றும் பயிற்சி அதிர்வெண்கள் போன்றவற்றை கண்காணித்தல், மீட்புத் திட்டங்களை உருவாக்குதல், விளையாட்டு அறிவியலுக்கான முழுமையான அணுகுமுறையை வழங்குதல் போன்றவற்றை கற்பவர்கள் அறிந்துகொள்ள என்பிடெல் பாடத்திட்டங்கள் தயார்படுத்தும்" எனக் குறிப்பிட்டார்.
பரிந்துரைக்கப்பட்ட 12-ம் வகுப்பு தேர்ச்சியை தகுதியாகக் கொண்டு, வளர்ந்து வரும் இத்துறையை மேலும் அறிந்துகொள்ள என்பிடெல் அறிமுகப் பாடத்தைக் கற்கலாம். விளையாட்டு அறிவியல், பிசியோதெரபி, உடற்கல்வி உள்ளிட்ட இதர தொடர்புடைய துறைகளில் இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்புகளை படிக்கும் மாணவர்களுக்கு இப்பாடத்திட்டங்கள் பொருத்தமானவையாகும். இப்படிப்பு முடிந்த பின்னர், இதே துறையில் டிப்ளமோ அல்லது முதுகலை பட்டப்படிப்பை மாணவர்கள் தொடரலாம். சென்னை ஐஐடி-ல் உள்ள விளையாட்டு அறிவியல் மற்றும் பகுப்பாய்விற்கான உயர்சிறப்பு மையம் இந்த களத்திற்கான பாடப்பிரிவுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
பாடப்பிரிவு குறித்து சென்னை ஐஐடி விளையாட்டு அறிவியல் மற்றும் பகுப்பாய்வு உயர்சிறப்பு மையத்தின் இணை முதன்மை ஆய்வாளர் பேராசிரியர் மகேஷ் பஞ்சக்நுலா கூறுகையில், "இந்தப் பாடப்பிரிவு அனைவருக்கும் பொருந்தக்கூடியவை. விளையாட்டில் ஆர்வமுள்ளவர்கள், விளையாட்டு வீரர்கள் அல்லது உடலை வலுப்படுத்துதல், உடற்பயிற்சி, உடலை தயார்படுத்தும் பயிற்சி, விளையாட்டு, ஊட்டச்சத்து, உளவியல் போன்ற தலைப்புகளில் ஆர்வம் கொண்ட எவருக்கும் இது பொருத்தமான பாடமாகும்" எனத் தெரிவித்தார்.
இந்திய தேசிய திறந்தவெளி பாடப்பிரிவுகளுக்கான (MOOCs) இணைய முகவரியான ஸ்வயம் (swayam.gov.in) இணையத்திலும் இந்த பாடங்கள் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பப் பதிவு இலவசம். இறுதித் தேர்வை மையத்தில் நேரடியாக எழுத வேண்டியிருக்கும். மிகக்குறைந்த தேர்வுக் கட்டணம் அதாவது ஒரு பாடப்பிரிவுக்கு ரூ.1,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பயிற்சியாளர்கள், விளையாட்டு வீரர்கள், சிறப்புப் பயிற்சியாளர்கள், பிசியோதெரபிஸ்ட்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள் உள்ளிட்ட பரந்த அளவிலான நபர்களை இப் பாடப்பிரிவுகள் இலக்காகக் கொண்டிருக்கின்றன. பயோமெக்கானிக்ஸ், காயத்தடுப்பு, விளையாட்டு உளவியல், இந்தியர்களுக்கான வலிமை பயிற்சி, விளையாட்டின் கலாச்சார அம்சங்கள் போன்ற முக்கியமான விளையாட்டுத் தலைப்புகளை இப்பாடப்பிரிவுகள் உள்ளடக்கியிருக்கின்றன.
உடற்பயிற்சி உடலியல், இயக்க அறிவியல், விளையாட்டு ஊட்டச்சத்து, காயத்தடுப்பு, பயிற்சி அடிப்படைகள், வலிமை சீரமைப்பு, விளையாட்டு உளவியல் போன்ற அம்சங்களும் இதில் இடம்பெறும். கோட்பாடு மற்றும் நடைமுறை அறிவு மூலம் பங்கேற்பாளர்கள் விளையாட்டு அறிவியலை ஒரு வெற்றிகரமான தொழிலாக உருவாக்குவதற்கான விலைமதிப்பற்ற நுண்ணறிவைப் பெறுவார்கள்.
பொறியியல், அடிப்படை அறிவியல், குறிப்பிட்ட மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் குறித்த பாடப்பிரிவுகளைக் கொண்டுள்ள உலகின் மிகப்பெரிய ஆன்லைன் களஞ்சியமாக என்பிடெல் விளங்குகிறது. என்பிடெல்லுக்கான யூடியூப் சேனல்- மிக அதிக சந்தாதாரர்களைக் கொண்டுள்ள கல்வி சேனலாகும். இதில் 42 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சந்தாதாரர்களாக இருப்பதுடன், ஒரு பில்லியன் பார்வைகளை இந்த யூடியூப் சேனல் கடந்துள்ளது.
மாணவர்கள் ஐந்து முக்கிய (core) பாடப்பிரிவுகள், இரண்டு விருப்ப (elective) பாடப்பிரிவுகளை முடித்ததும் விளையாட்டு அறிவியலில் டொமைன் சான்றிதழ் வழங்கப்படும்.
டொமைனில் வழங்கப்படும் படிப்புகளின் முழுமையான பட்டியல்:
1. இந்திய மக்கள்தொகைக்கான வலிமை, உடலை தயார்படுத்தும் பயிற்சி பாடப் பக்கம்: https://onlinecourses.nptel.ac.in/noc24_hs84/preview
2. விளையாட்டு மற்றும் செயல்திறன் ஊட்டச்சத்து பாடப் பக்கம்: https://onlinecourses.nptel.ac.in/noc24_hs82/preview
3. விளையாட்டுப் பயிற்சி, சுமை மேலாண்மை மற்றும் மீட்பின் அடிப்படைகள் பாடப் பக்கம்: https://onlinecourses.nptel.ac.in/noc24_hs87/preview
4. விளையாட்டு காயம் தடுப்பு- மறுவாழ்வுக்கான அவசியங்கள் பாடப் பக்கம்: https://onlinecourses.nptel.ac.in/noc24_hs85/preview
5. மனித இயக்க அறிவியல் பாடப் பக்கம்: https://onlinecourses.nptel.ac.in/noc24_hs81/preview
6. உடற்பயிற்சி உடலியல் மற்றும் விளையாட்டு செயல்திறன் அறிமுகம் பாடப் பக்கம்: https://onlinecourses.nptel.ac.in/noc24_hs86/preview
7. விளையாட்டு உளவியல் பாடப் பக்கம்: https://onlinecourses.nptel.ac.in/noc24_hs83/preview
முக்கிய செய்திகள்
கல்வி
2 hours ago
கல்வி
6 hours ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
4 days ago
கல்வி
4 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
7 days ago
கல்வி
7 days ago
கல்வி
8 days ago