“புதுச்சேரியில் விஞ்ஞானிகளை உருவாக்க அரசு தேவையான உதவிகளை செய்யும்” - முதல்வர் ரங்கசாமி

By அ.முன்னடியான்

புதுச்சேரி: மாணவர்களின் ஆர்வத்தை அறிந்து புதுச்சேரியில் இருந்து விஞ்ஞானிகளை உருவாக்குவோம் என்று மண்டல அறிவியல் கண்காட்சியை தொடங்கி வைத்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.

சர்வதேச சிறுதானிய ஆண்டின் முக்கியத்துவத்தை முன்னிட்டு புதுச்சேரி பள்ளி கல்வித் துறை சார்பில் மண்டல அளவிலான கண்காட்சி கோரிமேடு இந்திரா நகர், இந்திரா காந்தி அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று தொடங்கியது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு கண்காட்சியைத் தொடங்கி வைத்து பார்வையிட்டார். பின்னர் முதல்வர் ரங்கசாமி கூறுகையில், "பள்ளி மாணவர்கள் தங்களுடைய அறிவியல் சம்பந்தப்பட்ட எண்ணத்தை வெளிப்படுத்தும் விதத்தில் அவர்களுடைய கண்டுபிடிப்புகள், எண்ணம் என்பதை தெரிந்து கொள்ளும் வகையில் இந்த அறிவியல் கண்காட்சி இங்கு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த கண்காட்சி நடத்தப்படும். மாணவர்கள் விஞ்ஞானிகளாக உருவாவதற்கான சூழல் வர வேண்டும் என்பது அரசின் எண்ணம்.

அதனடிப்படையில் அறிவியல் கண்காட்சி நடத்தும் போது, ஆசிரியர்களின் துணையோடு மாணவர்கள் தங்கள் எண்ணங்களை எல்லாம் அறிவியல் படைப்புகளாக உருவாக்கி விஞ்ஞான ரீதியான நிலையில் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த ஆண்டு பிரதமர் சொன்னது போன்று சிறுதானிய ஆண்டு என்பதால் சிறுதானியங்களை கொண்டு பாரம்பரிய உணவுகள் தயாரித்து உட்கொண்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் விதமாக வகையில் சிறுதானியங்களையும், உணவு வகைகளையும் மாணவர்கள் காட்சி பொருளாக வைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. மாணவர்கள் விஞ்ஞானிகளாக வர வேண்டும் என்ற அவர்களது ஆர்வத்தை அறிந்து, அவர்களுக்கு கல்வித் துறை மூலம் தேவையான உதவிகளை செய்து புதுச்சேரியில் இருந்து விஞ்ஞானிகளை உருவாக்குவோம்” என்றார்.

இந்நிகழ்வில் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், ஏ.கே.டி.ஆறுமுகம் எம்எல்ஏ, கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி, முதன்மை கல்வி அதிகாரி தன செல்வன் நேரு, பள்ளி முதல்வரும், கண்காட்சி ஒருங்கிணைப்பாளருமான சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இக்கண்காட்சியில் சிறு தானியமே சிறப்பான உணவு, உணவு பாதுகாப்பு, அன்றாட வாழ்வில் நவீன தொழில் நுட்பம், சுகாதாரத் துறையில் தற்போதைய மேம்பாடு, சமுதாய மூட நம்பிக்கைகள் போன்ற தலைப்புகளில் தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் 420 அறிவியல் படைப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, சாலையை சுத்தம் செய்யும் தானியங்கி மின்சார வாகனம், பிரேக்குடன் கூடிய தேர், ரயில்வேயில் ஆம்புலன்ஸ் சேவை, ரோபோட் விவசாயம், ஓடும் வாகனத்தில் ஓட்டுநர் தூங்கினால் உடனே எச்சரிக்கும் கருவி, ரயில் விபத்தை தடுக்கும் தொழில் நுட்பம் உள்ளிட்ட பல்வேறு அறிவியல் படைப்புகள் இடம்பெற்றிருந்தன. பாரதி தாசன் மகளிர் கல்லூரி, வேளாண் அறிவியல் நிலையம், மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி உட்பட பல கல்லூரிகள் சார்பில் சிறுதானிய உணவு அரங்குகளும் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பள்ளி முகப்பில் ஆளுநர், முதல்வர், கல்வி அமைச்சர் ஆகியோரை வரவேற்கும் விதமாக சிறுதானியங்களை கொண்டு அவர்களின் உருவப்படங்கள் வரையப்பட்டிருந்தது பலரையும் வெகுவாக கவர்ந்தது. வரும் 9-ம் தேதி வரை நடைபெறும் இக்கண்காட்சியில் இருந்து 40 படைப்புகள் மாநில அளவிலான கண்காட்சிக்கு தேர்வு செய்யப்படுகிறது. தொடர்ந்து, 11, 12-ம் தேதிகளில் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE