மிக்ஜாம் பாதிப்பு | சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கை மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வு ஒத்திவைப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த 4 மாவட்டங்கள் தவிர, மற்ற அனைத்து மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வுகள் வழக்கம்போல் நடைபெறும் எனவும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நாளை முதல் அரையாண்டுத் தேர்வு நடத்தப்பட உள்ளதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. மழையால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் தவிர, அனைத்து மாவட்டங்களிலும் திட்டமிட்டபடி, அரையாண்டுத் தேர்வு நடைபெறும். இந்த 4 மாவட்டங்களில் மட்டும் நிலைமை சீரானவுடன், அந்தந்த தலைமை ஆசிரியர்களுக்கு முழு அதிகாரம் அளித்து தனித்தனியாக வினாத்தாள் தயாரித்து அரையாண்டுத் தேர்வு நடத்திட பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அறிவுறுத்தியதின் அடிப்படையில் இச்செய்திக் குறிப்பு வெளியிடப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே அடையாறு, கூவம், பக்கிங்ஹாம் வழியாக வெள்ள நீர் விரைவாக வடிந்து வருவதாகவும், வெள்ள பாதிப்பு பணிகளில் 75,000 பேர் ஈடுபட்டுள்ளதாகவும் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கூறியுள்ளார். மேலும், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 866 இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. 4 சதவீத பகுதிகளுக்கு மட்டுமே இன்னும் மின் விநியோகம் கொடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். | முழு விவரம்: 866 இடங்களில் வெள்ளம், மீட்பு பணிகளில் 75,000 பேர், 4% பகுதிகளில் மின்தடை: தமிழக அரசு அப்டேட் @ மிக்ஜாம் பாதிப்பு

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE