மூங்கப்பட்டு ஊராட்சி நடுநிலை பள்ளியில் சிலம்பம் சுழற்றும் மாணவர்கள்!

By செய்திப்பிரிவு

வேலூர்: விளையாட்டு மைதானம் இல்லாவிட்டாலும், மூங்கப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் சிலம்பம் தற்காப்பு கலை பயிற்சியில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.

பொதுவாகவே அரசுப் பள்ளிகள் என்பது அடிப்படை வசதிகள் பெரிதும் இல்லாமல் இருக்கும் என்பது பெற்றோர்களின் எண்ணமாக உள்ளது. அதிலும், அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்புகள் பெரியளவில் இருப்பதில்லை. ஒரு சில பள்ளிகளில் மட்டுமே போதுமான கட்டமைப்புகள் இருக்கும் நிலையில் குடியாத்தம் அடுத்த மூங்கப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி விளையாட்டு திடல் எதுவும் இல்லாத நிலையில் மாணவர்களின் திறன் மேம்பாட்டுக்காக சிலம்பம் பயிற்சி அளிக்கும் முயற்சியை முன்னெடுத்துள்ளது.

இங்கு, 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை 85 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்கள், காலையில் பள்ளிக்கு வருவது மாலையில் வீடு திரும்புவது மட்டும்தான் வழக்கமான நடைமுறையாக இருந்தது. கலை, விளையாட்டு போன்ற திறன் வளர்ப்பு பிரிவுகளில் இவர்களுக்கு பெரியளவில் வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்தது.

இதை மாற்றும் வகையில் மூங்கப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு திறன் வளர்ப்பு பிரிவுகளில் வாய்ப்புகள் கொஞ்சம், கொஞ்சமாக அளிக்கப்பட்டு வருகிறது. இதன், முதல் முயற்சியாக பள்ளி மாணவர்களுக்கு சிலம்பம் பயிற்சி அளிக்கும் பணியை முன்னெடுத்துள்ளது. இதற்கு, மாணவ, மாணவிகள் மத்தியில் மட்டுமில்லாமல் பெற்றோர்களும் ஆதரவளித்து வருகின்றனர். இந்த பயிற்சியால் அடுத்த சில ஆண்டுகளில் மூங்கப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் சிலம்பம் பிரிவில் சிறப்பான ஒரு இடத்தை பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.

இதுதொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியர் சேகர் கூறும்போது, ‘‘பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விநாடி- வினா போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மாணவர்களுக்கு வானவில் மன்றம் இயங்கி வருவதுடன், மாணவர்களின் கலைத்திறனை வளர்க்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன், அடுத்தகட்டமாக தற்காப்பு கலையான சிலம்பம் பயிற்சிக்கு முயற்சி எடுக்கப்பட்டது. இதற்கு, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆதரவு அளிக்கின்றனர். பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் 45 மாணவ, மாணவிகள் தற்போது சிலம்பம் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிலம்பம் தற்காப்பு கலை என்பதால் மாணவிகள் ஆர்வத்துடன் பயிற்சி பெறுகின்றனர். பள்ளிக்கென்று விளையாட்டு திடல் இல்லாத நிலையில், அருகில் உள்ள கவுன்டன்யா ஆற்றின் ஒரு பகுதியில் சமன் செய்யப்பட்ட இடத்தில் மாணவ, மாணவிகள் தினசரி பயிற்சி எடுத்து வருகின்றனர். இதற்கு கட்டணம் எதுவும் இல்லை. மூங்கப்பட்டு ஊரில் இருக்கும் அதிகம் பேர் சிலம்பம் பயிற்சி பெற்றுள்ளனர் என்பதால் மாணவ, மாணவிகளுக்கு சிலம்பம் பயிற்சி அளிப்பதில் சிரமம் இல்லாமல் உள்ளது’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE