கல்லூரிக்கு வராமலே பிசியோதெரபிஸ்ட் படிப்பு சான்றிதழ்: வெளிமாநில பல்கலை.களுக்கு தமிழகத்தில் கட்டுப்பாடு வருமா?

By ஒய். ஆண்டனி செல்வராஜ்

மதுரை: கல்வி வளர்ச்சி என்ற பெயரில் நல்லவை நடந்தால் அவற்றை வரவேற்க வேண்டியதுதான். மருத்துவத் துறையில் தொழிற்கல்வி சம்பந்தப்பட்ட படிப்புகளில் ஏற்கெனவே படித்துப் பட்டம் பெற்றவர்களுக்குப் போதிய வேலைவாய்ப்புகள் இல்லை. பிசியோதெரபி போன்ற படிப்புகளுக்கு தற்போது முக்கியத்துவம் இருந்தும் அரசு வேலைவாய்ப்புகள் போதுமானதாக இல்லை . இந்தச் சூழலில் தற்போது பிசியோதெரபி படிப்புகளை மிக குறுகிய காலத்தில் பட்டயப் (டிப்ளமோ) படிப்புகளாக மாற்றிப் படிப்பதற்கு வெளிமாநில பல்லைக்கலைக் கழங்கள் தமிழகத்தில் மெல்ல வேரூன்றத் தொடங்கி உள்ளன.

கடைகளில் பொருட்களை ஆஃபர் அடிப்படையில் விற்பதுபோல் படிப்புகளை தற்போது கல்லூரிக்கு வராமலே ஆன்லைனில் படித்துச் சான்றிதழ் பெறலாம், குறுகிய காலத்தில் படிக்கலாம் என்பது போன்ற கவர்ச்சியான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். மருத்துவப்படிப்புகள் ஆன்லைனில் படிக்கக்கூடிய படிப்புகள் கிடையாது. அதற்குப் பயிற்சியும், அனுபமும் அவசியமாகிறது. ஆனால், திறமை குன்றியோரை அல்லது திறமையற்றோரை உருவாக்கினால் அது நோயாளிகளைப் பாதிக்கும் அபாயம் என பிசியோதெரபிஸ்ட்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இது குறித்து இந்தியன் அசோசியேஷன் ஆப் பிசியோதெரபிஸ்ட்கள் தமிழ்நாடு கிளை தலைவர் வெ.கிருஷ்ணகுமார் கூறியதாவது: தமிழக மருத்துவக் கல்வி இயக்ககம் அனுமதியோடு மருத்துவப் படிப்புகளை நடத்தும் நடைமுறை தமிழகத்தில் உள்ளது. ஆனால், அதை மீறி வெளி மாநில பல்கலைக்கழகங்கள், மத்திய, மாநில திறன் மேம்பாட்டுக் கழகங்கள் அனுமதி என்ற பெயரில் பிசியோதெரபி உட்பட பல்வேறு மருத்துவப் படிப்புகளை நடத்துவதை மறு ஆய்வு செய்ய வேண்டும். மருத்துவக் கல்வி இயக்குநர் (DME ) இதைத் தொடர்ந்து அனுமதிக்கக் கூடாது.

வெ.கிருஷ்ணகுமார்

பிசியோதெரபிஸ்ட் போன்ற மருத்துவப் படிப்புகளைக் கல்லூரிக்கு நேரடியாக வராமல் படித்துச் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம் என ஒரு தனியார் கல்வி நிறுவனம் சமூக ஊடகங்கள் மூலம் விளம்பரம் செய்துள்ளது. அதற்கு வெளி மாநிலத்தில் உள்ள பல்கலைக் கழகத்தின் அனுமதி வாங்கி உள்ளோம் என்று சொல்கிறார்கள். கல்லூரிக்கு வராமல் மருத்துவச் சான்றிதழைப் பெறுவது சமூகத்தின் பொது சுகாதாரப் பாதுகாப்புக்கு எத்தகைய அச்சுறுத்தல்களைத் தரும் என்பதைக் கற்பனை செய்யக்கூட முடியவில்லை.

ஒரு மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகம் மற்றொரு மாநிலத்தில் உள்ள நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துச் சான்றிதழ் வழங்க பல்கலைக்கழக மானியக் குழு (யூசிஜி) அனுமதிக்கவில்லை. அதுபோல் ஒரு நிறுவனம் `யுனானி பிசியோதெரபி' என்ற படிப்பை பட்டயச் (டிப்ளமோ) சான்றிதழாகத் தருவதாக விளம்பரம் செய்துள்ளது. பிசியோதெரபியை டிப்ளமா என்ற நிலையில் வழங்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் மற்றும் பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவுகள் இருக்கின்றன. பல்கலைக்கழகங்கள் தன்னிச்சையாக இத்தகைய குறுகிய காலப் படிப்புகளைத் தொடங்கினால் அவர்களால் மக்களுக்குத் தீமையே உண்டாகும். தனியார் மருத்துவமனைகள் குறைந்த சம்பளத்தில் ஆள் கிடைப்பார்கள் என்று இத்தகைய திறன் குறைந்தவர்களைப் பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கும் ஆபத்தை எளிதில் கடக்க முடியாது.

பிசியோதெரபி துறைக்கென்று தனியாக கவுன்சில் இல்லை என்பதை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயல்கின்றனர். நான்கரை ஆண்டு மருத்துவத் துறை சம்பந்தப்பட்ட பாடத்திட்டங்களை கற்றுத் தேர்ந்து, மருத்துவ வல்லுநர்களின் வழிகாட்டுதல்கள், செயல் முறை சிகிச்சை முறைகளில் நேரடியாகப் பயிற்சிபெற்ற பிசியோதெரபிஸ்ட்களது உழைப்பை இத்தகைய குறுகிய கால படிப்புகளை படித்தோர் சுரண்டும் போக்கைத் தடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும். இதன் மூலம் மக்கள் நல்வாழ்வு பாதுகாக்கப்படும். மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் மருத்துவப் படிப்புகளை நடத்தும் நிறுவனங்கள், தனிநபர்களைக் கண்காணிக்கும் அமைப்புகளை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE