பாகலூரில் இடிந்து விழும் நிலையில் ஆபத்தான நூலக கட்டிடம் அருகே இயங்கும் அங்கன்வாடி மையம்

By கி.ஜெயகாந்தன்

ஓசூர்: பாகலூரில் இடிந்து விழும் நிலையில் ஆபத்தாக இருக்கும் நூலக கட்டிடம் அருகே இயங்கும் அங்கன்வாடி மையத்தை இடம் மாற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த பாகலூர் ஊராட்சி அலுவலகம் அருகே ஊர்புற நூலகம் உள்ளது. இந்த நூலக கட்டிடம் கட்டி பல ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது சேதமாகி, இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த ஆபத்தான கட்டிடத்திலேயே வாசகர்கள் வந்து புத்தகம் படித்துச் செல்கின்றனர். அதேபோல் இந்த கட்டிடத்தையொட்டியே அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த மையத்தில் 35-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். அங்கன்வாடி மையமும் குறுகிய இடத்தில் செயல்படும் பழமையான கட்டிடம்.

மழைக் காலங்களில் அங்கன்வாடி வளாகத்திற்குள் மழை நீர் தேங்கி விடுகிறது. மேலும் சுவர்களும் மழை நீரில் நனைந்து வலுவிழந்து உள்ளது. இந்த ஆபத்தான கட்டிடங்களுக்கு இடையே குழந்தைகள் அமர்ந்து படித்து வருகின்றனர். இந்த இரு கட்டிடங்களையும் இடித்து அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்டிக்கொடுக்க வேண்டும் அதுவரை குழந்தைகளை தற்காலிகமாக வேறு இடத்தில் அமர்ந்து படிக்க வைக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து பெற்றோர் கூறியதாவது: பாகலூர் மற்றும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளில் உள்ள சிறு தொழிற்சாலைகளுக்கு பணிக்கு செல்வதால், தங்களது குழந்தைகளை ஊராட்சி அலுவலகம் அருகே நூலகத்தையொட்டி உள்ள அங்கன்வாடி மையத்தில் விட்டுச் செல்கிறோம். அதேபோல் வடமாநில தொழிலாளர்களின் குழந்தைகளும் இங்கு படிக்கின்றனர்.

35-க்கும் மேற்பட்ட குழந்தைகள் தினமும் வந்து செல்லும் மையத்தையொட்டி உள்ள நூலகம் மிகவும் ஆபத்தாக, இடிந்து விழும் நிலையில் உள்ளது. அங்கன்வாடி மைய கட்டிடமும் ஆபத்தாக உள்ளது. மழைக்காலங்களில் விபரீதம் ஏற்படுமோ என்ற அச்சம் உள்ளது. இதனால் குழந்தைகளை மையத்திற்கு அனுப்புவதற்கு தயங்குகிறோம்.

மேலும் இந்த மையத்தில் தண்ணீர் வசதி இல்லாததால் இங்கு பணிபுரியும் பெண் பணியாளர்கள் வெளியில் சென்று தண்ணீர் கொண்டு வருகின்றனர். குழந்தைகள் இயற்கை உபாதைகளுக்குச் சென்றால் தண்ணீர் இல்லாமல் பெரும் அவதியடைகின்றனர். தண்ணீர் இல்லாததால், சில குழந்தைகள் இயற்கை உபாதைகளை கழிக்காமல், வீட்டிற்கு வந்து செல்கின்றனர். எனவே அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல் தண்ணீர் வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும்.

அதோடு, குழந்தைகளின் பாதுகாப்பு கருதி, தற்காலிகமாக வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும், எனக் கூறினர். இது குறித்து அங்கன்வாடி மைய ஊழியர்கள் கூறும் போது, நூலகமும், அங்கன்வாடி மையமும் ஒரே இடத்தில் உள்ளது. இந்த இரு கட்டிடங்களும் மிகவும் பழமையாக உள்ளதால் தற்போது இந்த கட்டிடங்களின் தரம் வலுவிழந்து விட்டது.

அதனால், தற்போதுள்ள கட்டிடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டிடம் கட்டிக் கொடுக்க அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளோம். விரைவில் புதிய கட்டிடம் கட்டிக் கொடுப்பதாக அதிகாரிகள் கூறினர், என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE