பொறியியல் கல்லூரிகளில் தேர்வு கட்டண உயர்வு நிறுத்திவைப்பு: அண்ணா பல்கலை. துணைவேந்தர் தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: பொறியியல் கல்லூரிகளில் தேர்வு கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்படுவதாக அண்ணா பல்கலை. துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்தார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்குமான தேர்வுக் கட்டணம் சமீபத்தில் உயர்த்தப்பட்டது. அதில் ஒரு பருவத்துக்கு ரூ.900 வரை தேர்வுக் கட்டணம் உயர்த்தப்பட்டிருந்தது. இது மாணவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது. இந்த கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டுமென மாணவர்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர். அதையேற்று கட்டண உயர்வை உடனே நிறுத்தி வைக்க அண்ணா பல்கலை.க்குஉயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி உத்தரவிட்டார். அதன்படி புதிய தேர்வுக் கட்டணம் வசூலிப்பது தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அண்ணா பல்கலை. துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ், கிண்டியில் உள்ள பல்கலை. வளாகத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தேர்வுக் கட்டணமானது 9 ஆண்டுகளுக்கு பிறகே உயர்த்தப்பட்டுள்ளது. பல்கலை. சிண்டிகேட் கூட்டத்தில், தேர்வுக்கான செலவுஅதிகமாக வருவதுடன், பேராசிரியர்களுக்கான விடைத்தாள் மதிப்பீட்டுக் கட்டணத்தை உயர்த்தி வழங்கவும் முடிவானது. இதை ஈடுசெய்யவே இந்த கட்டணம் அதிகரிக்கப்பட்டது.

50 சதவீதம்தான் தேர்வு கட்டணம்: நாட்டின் வளர்ச்சி விகிதம் 7 சதவீதமாக உள்ளது. இதை அடிப்படையாக வைத்து கட்டணத்தை 100 சதவீதம் உயர்த்தலாம். ஆனால், 50 சதவீதம்தான் தேர்வு கட்டணத்தை உயர்த்தினோம். அதை குறைக்க மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த தகவலறிந்து உயர்கல்வித் துறை அமைச்சரும் எங்களை அணுகி தேர்வுக் கட்டணம் உயர்வு தொடர்பாக விளக்கம் கேட்டார். அதற்கு நாங்கள் பதில் அளித்தோம். அதன்பின் உயர்கல்வித் துறையின் கீழ் வரும் அனைத்து கல்லூரிகளிலும் ஒரே மாதிரியான தேர்வு கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ளது. இதற்காக ஒரு குழு அமைத்து முடிவெடுக்கப்படும். எனவே, இந்த கட்டண உயர்வை நிறுத்தி வைக்க வேண்மென அறிவுறுத்தினார்.

அதன்படி நடப்பு கல்வியாண்டில் பழைய கட்டண நடைமுறையே பின்பற்றப்படும். புதிய கட்டண முறையில் கூடுதலாகப் பணம் செலுத்திய மாணவர்கள் அதற்கான கட்டணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். இதற்காக பல்கலை ஆட்சிமன்றக் குழுவிடம் தற்காலிக ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

இன்னும் 3 மாதங்களில் உயர்கல்வித் துறை சார்பில் அனைத்து கல்லூரிகளுக்கும் ஒரே மாதிரியான கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE