“அண்ணா பல்கலை. தேர்வுக் கட்டண உயர்வு வரும் செமஸ்டருக்குப் பொருந்தாது” - அமைச்சர் பொன்முடி விளக்கம்

By செய்திப்பிரிவு

விழுப்புரம்: “அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு பாடத்துக்கு ரூ.150-ஆக இருந்த தேர்வுக் கட்டணம் ரூ.225-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும் வரும் செமஸ்டருக்கு இந்தத் தேர்வுக் கட்டண உயர்வு நடைமுறைப்படுத்தப்படாது” என்று தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

விழுப்புரத்தில் தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 56 உதவிப் பேராசிரியர்களில், 52 பேர் வணிக மேலாண்மைப் பிரிவில் பட்டம் பெற்று பணியாற்றியுள்ளனர். முனைவர் பட்டம், MPhil, என எந்த தகுதியும் இல்லாமல் அவர்கள் பணி செய்து வந்துள்ளனர். SLET, NET தேர்வுகளில் 55 சதவீத மதிப்பெண்கள் வாங்கியிருக்க வேண்டும். இதுபோன்ற எந்த தகுதியுமே இல்லாமல், பணியாற்றி வந்துள்ளனர். இன்னும் சொல்லப்போனால், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகங்களில் தேர்வெழுதி வந்தவர்களைக்கூட, உதவிப் பேராசிரியர்களாக நியமிக்கும் நிலைதான் இருந்திருக்கிறது.

எனவே, தகுதி குறைவானவர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும் என ஆரம்பித்தில் இருந்தே சுட்டிக்காட்டப்பட்டு, 2019-ல் சிண்டிகேட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, தற்போது துணைவேந்தர் அதற்கான நடவடிக்கையை எடுத்திருக்கிறார். இந்த முடிவு வரவேற்கத்தக்க ஒன்று. தகுதிநீக்கம் செய்யப்பட்ட உதவிப் பேராசிரியர்களுக்கு 10 ஆண்டுகளாக அவர்களது தகுதியை மீறிய சலுகைகள் வழங்கப்பட்டு வந்தது. இதற்கு யார் காரணமாக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், இருந்த கூடுதல் உதவிப் பேராசிரியர்கள் சிலரை, அரசுக் கல்லூரிகளில் இருந்த காலிப் பணியிடங்களுக்கு நாங்கள் மாற்றினோம். அரசு அவர்களுக்கு என்ன சலுகைகள் செய்ய வேண்டுமோ அதெல்லாம் செய்தும்கூட, இதுபோன்ற தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டது. உயர் கல்வித்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. வருங்காலத்தில், அவர்களது தகுதிகேற்ப பணிகளுக்கு அவர்கள் விண்ணப்பித்தால், அவர்களுக்கு பணி வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்கும்" என்றார்.

அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டணம் உயர்வு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "பொதுவாக பல்கலைக்கழகங்களில் அனைத்துப் பாடங்களுக்கும் தேர்வுக் கட்டணம் என்பது ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என ஏற்கெனவே முடிவு எடுத்தோம். எனவே, ஒரே மாதிரியாக தேர்வுக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று துணைவேந்தர்கள் கூட்டத்தில் அறிவித்திருந்தோம்.

அதன் அடிப்படையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு பாடத்துக்கு ரூ.150-ஆக இருந்த தேர்வுக் கட்டணத்தை, ரூ.225-ஆக உயர்த்தியுள்ளனர். மற்ற பல்கலைக்கழகங்களில் தேர்வுக் கட்டணம் அதிகமாக இருப்பதாகவும், அண்ணா பல்கலைக்கழகத்தில் குறைவாக இருப்பதால் அதனை உயர்த்துவதாக பல்கலைக்கழக நிர்வாகத்தினர் கூறியிருந்தனர். ஆனால், இந்த செமஸ்டருக்கு தேர்வுக் கட்டணம் உயர்த்தப்படாது. வருங்காலத்தில், அனைத்து துணைவேந்தர்கள் மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்களை அழைத்துப் பேசி அடுத்த ஆண்டில் இருந்து ஒரே மாதிரியான தேர்வுக் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக கலந்துரையாடி முடிவெடுக்கப்படும். எனவே, இந்த செமஸ்டருக்கு கட்டண உயர்வு நடைமுறைப்படுத்தப்படாது" என்று அவர் கூறினார்.

முன்னதாக, அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டணம் மற்றும் சான்றிதழ் கட்டணத்தை 50 சதவீதமாக உயர்த்த பல்கலைக்கழக சிண்டிகேட் குழுக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், இளநிலைப் பாடப்பிரிவுகளுக்கான எழுத்து மற்றும் செய்முறைத் தேர்வு என ஒவ்வொரு தாளுக்கும் ரூ.150-ஆக இருந்த தேர்வுக் கட்டணம் ரூ.225-ஆக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE