பாதையும் இல்லை, கட்டிடமும் மோசம் - கோவில்பட்டி அருகே பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப மறுக்கும் பெற்றோர்

By செய்திப்பிரிவு

கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியின் கட்டிடம் மோசமாகவும், பள்ளிக்கு செல்வதற்கான பாதையும் இல்லாததால், தங்களது குழந்தைகளை பெற்றோர் அனுப்ப மறுத்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தெற்கு குமாரபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு தலைமை ஆசிரியராக மங்கையர்க்கரசி என்பவரும், உதவி ஆசிரியராக ரத்தினமாலா என்பவரும் பணியாற்றி வருகின்றனர். மேலும், தலா 11 மாணவர்கள், மாணவிகள் என 22 பேர் படித்து வருகின்றனர். இங்குள்ள கட்டிடம் பழமையானதை தொடர்ந்து புதிய கட்டிடம் கட்டப்பட்டு கடந்த 2005-ம் ஆண்டு திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இதில் 2 வகுப்பறைகள், ஒரு தலைமை ஆசிரியர் அறை ஆகியவை உள்ளன. இந்த கட்டிடம் அருகே சமையலறையும் உள்ளது. மேலும், இந்த பள்ளி வளாகத்தில் பழைய வகுப்பறை, சமையலறை கட்டிடங்கள் இடிக்கப்படாமல் உள்ளன. இந்நிலையில், கடந்த 8-ம் தேதி மாலை முதல் விடிய விடிய மழை பெய்தது. இதில், அன்றிரவு பள்ளியின் இடப்பக்க சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதையறிந்த வடக்கு குமாரபுரம் கிராம மக்கள் கடந்த 9-ம் தேதி முதல் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து வருகின்றனர்.

“எங்கள் பகுதியில் இருந்து 21 மாணவ மாணவிகள் தெற்கு குமாரபுரத்தில் பள்ளிக்கு செல்கின்றனர். ஆனால், அந்த கிராமத்தில் ஒரு மாணவி மட்டுமே பள்ளிக்கு வருகிறார். இந்த பள்ளி கடந்த 1980-ம் ஆண்டு முன்பு வரை தனியார் வசம் இருந்தது. அதன்பின்னர் அவர்களால் பள்ளியை இயக்க முடியாமல் அரசிடம் ஒப்படைத்ததாக கூறுகின்றனர். இந்த பள்ளிக்கு என தனியாக பாதை வசதி இல்லை. பள்ளியைச் சுற்றிலும் தனியார் இடங்கள்தான் உள்ளன. அதனால் விசாலமான பாதை வசதி இல்லை.

சுமார் ஒன்றரை அடி அகலம் உள்ள பாதையே உள்ளது. ஒரு அவசரம் என்றால், குழந்தைகளை பள்ளியில் இருந்து வெளியே கொண்டு வருவது எளிது கிடையாது. மேலும், தனியார் நிலங்கள் வழியாக எங்களது குழந்தைகள் பள்ளிக்கு சென்று வந்தனர். இதனை அந்த இடத்துக்காரர்கள் தடுத்துவிட்டனர். இதனால் சாலையை சுற்றித்தான் பள்ளிக்குச் செல்ல வேண்டும். இது அவர்களுக்கு அவ்வளவு பாதுகாப்பு கிடையாது. அதேபோல், பள்ளியில் கடந்த 1980-ம் ஆண்டு கட்டப்பட்ட பழைய கட்டிடமும், கடந்த 2005-ம் ஆண்டு கட்டப்பட்ட கட்டிடமும் மோசமான நிலையில் தான் உள்ளன.

எனவே, பள்ளியை வடக்கு குமாரபுரம் பகுதிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப மாட்டோம்” என, வடக்கு குமாரபுரம் பகுதியை சேர்ந்த பெற்றோர் தெரிவித்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து நேற்று காலை மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) மேரி டயானா ஜெயந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ் குமார், பொறியாளர் மேரி, ஆசிரியர் பயிற்றுநர் மாரிமுத்து கண்ணன், பள்ளி தலைமை ஆசிரியை மங்கையர்க்கரசி உள்ளிட்டோர், வடக்கு குமாரபுரத்துக்குச் சென்று, பள்ளி குழந்தைகளின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பள்ளியை இடமாற்றுவது தொடர்பாக அரசுக்கு தெரியப்படுத்தி நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை குழந்தைகளின் கல்வி பாதிக்காமல் இருக்க, அவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தினர். ஆனால், அதிகாரிகளின் சமாதானத்தை ஏற்காத பெற்றோர் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்துவிட்டனர். இதனால், நேற்று பள்ளிக்கு வந்த தெற்கு குமாரபுரத்தைச் சேர்ந்த மாணவி அமுதாவுக்கு, தலைமை ஆசிரியை மங்கையர்க்கரசி பாடம் நடத்தினார்.

மாணவர்கள் இல்லாததால் உதவி ஆசிரியை ரத்தின மாலா அருகே அஞ்ராம்பட்டி கிராமத்தில் உள்ள பள்ளிக்கு மாற்றுப் பணிக்கு சென்றுவிட்டார். அதேபோல், தற்போது அந்த பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பு அமைப்பதற்காக பணிகளும் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE