புதுச்சேரி: புதுச்சேரியின் அரசு பொறியியல் கல்லூரி, அரசு தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்பட்டு இரண்டு ஆண்டுகளாகின்றன. புதுச்சேரி அரசின் முதலாவது பல்கலைக்கழகமாக பெருமையாக தொடங்கப்பட்ட இப்பல்கலைக்கழகத்தில் ஆட்சி மன்றக்குழுவே அமைக்கப்படவில்லை. பொறியியல் கல்லூரிகள் அனைத்தும் இப்பல்கலைக்கழகத்தின் கீழ் கொண்டு வரப்படவில்லை. தலைமைக்குள் மோதல் நிலவும் சூழலில் தரவரிசையில் சரிவை சந்தித்து வருகிறது. இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதை ஆளுநர் வேடிக்கை பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
புதுச்சேரி பொறியியல் கல்லூரி கடந்த 1984-ல் தொடங்கப்பட்டது. இக்கல்லூரி கடந்த 2021-ல் புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்பட்டது. இங்கு பிடெக், எம்டெக், எம்பிஏ, எம்எல்சி, பிஎச்டி பாடப்பிரிவுகளில் 2,500 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். மாணவர்கள் எண்ணிக்கைக்கு 340 பேராசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் 350 பேர் பணியாற்ற வேண்டும். ஆனால் தற்போது பேராசிரியர்கள் 110 பேரும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் 140 பேரும் பணியில் உள்ளனர். புதுச்சேரி தொழில்நுட்பக் கல்லூரியின் தர வரிசை 2011-ல் 144 ஆக இருந்து, 2022-ல் 150 ஆவதாகவும், இந்தாண்டு 184 ஆகவும் குறைந்துள்ளது. பல்கலைக்கழகமான பிறகு, அதன் தர வரிசை மிக அதிகமாக குறைந்துள்ளது.
பல்கலைக்கழக ஊழியர்கள் தரப்பில் இதுபற்றி விசாரித்த போது, "தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில் இதுவரை ஆட்சி மன்றக்குழு அமைக்கவில்லை. அதேபோல் புதுச்சேரியில் உள்ளஅனைத்து பொறியியல் கல்லூரிகளும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படவில்லை. அனைத்து பொறியியல் கல்லூரிகளும் தொடர்ந்து புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் கீழ்தான் செயல்படுகின்றன. புதுச்சேரி பொறியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்பட்டாலும், தற்போதும் ஒரு பொறியியல் கல்லூரி அந்தஸ்தில்தான் இயங்கி வருகிறது. இதற்கான போதிய நிதியும் ஒதுக்கப்படவில்லை.
ஊழியர்களுக்கு 6 மாதங்களுக்கு ஒருமுறைதான் ஊதியம் போடப்படுகிறது. ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணிக்கொடை மட்டுமே தரப்படுகிறது. இதர ஓய்வூதிய பலனும் தரப்படவில்லை. பல்கலைக்கழகத்துக்கு நிரந்தர பாதுகாவலர்கள் கூட இல்லை. தினக்கூலியாகவே உள்ளதால் இரவு நேர பாதுகாப்பு கேள்விக்குறியாகவுள்ளது. முதலில் புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துக்கு ஆட்சி மன்ற குழு நியமித்து தேவையான பேராசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்களை நியமிக்க வேண்டும். ஓய்வூதிய பலன் தர வேண்டும். அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளை தொழில்நுட்ப பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். அவ்வாறு செய்தால்தான் நிதி அதிகரித்து, ஊதியம் மாதம்தோறும் தர இயலும். அதைத் தொடர்ந்தே பிற வளர்ச்சிகளும் இருக்கும்" என்று தெரிவிக்கின்றனர்.
பல்கலைக்கழகத் தலைமை நிலை தொடர்பாக பல்கலைக்கழக வட்டாரங்களில் விசாரித்தபோது, "புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துக்கு பேராசிரியர் மோகன் துணைவேந்தராகவும், அங்கு ஏற்கெனவே பேராசிரியராகப் பணியாற்றி வந்த சிவராஜ் என்பவர் பதிவாளராகவும் நியமிக்கப்பட்டனர். பல பேராசிரியர்களை ஒதுக்கிவிட்டு பணி முன்னுரிமைப் பட்டியல் அடிப்படையில் 62-வது இடத்தில் உள்ள சிவராஜுக்கு பதவி வழங்கியதாக பல்வேறு கட்சியினர் வெளிப்படையாக குற்றம் சாட்டினர். ஏராளமான பதவிகளை சிவராஜ் ஒருவரே வகித்தார்.
குறிப்பாக, புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழக பதிவாளர், உலக வங்கியின் தொழில்நுட்பக் கல்வித் தரத்தை மேம்படுத்தும் திட்ட ஒருங்கிணைப்பாளர், மத்திய அரசின் ரூசா உயர்கல்விக்கான வளர்ச்சித்திட்ட ஒருங்கிணைப்பாளர், புதுச்சேரி மாநில உயர்கல்வி கவுன்சில் மாநில திட்ட இயக்க ஒருங்கிணைப்பாளர், சென்டாக் ஒருங்கிணைப்பாளர் என ஏராளமான பொறுப்பு அவரிடம் இருந்தது. இச்சூழலில் கடந்த 2022 அக்டோபரில் பதிவாளர் சிவராஜ் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குறிப்பிட்டு, பணியிடை நீக்கம் செய்து துணைவேந்தர் மோகன் உத்தரவு பிறப்பித்தார். ஆனால் இந்த உத்தரவு வந்த சில மணி நேரங்களில் அந்த பணியிடை நீக்கத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசை ரத்து செய்தார்.
‘நடவடிக்கை எடுக்க துணை வேந்தருக்கு அதிகாரமில்லை - வேந்தராகிய ஆளுநருக்குதான் நடவடிக்கை எடுக்க உரிமையுள்ளது. புகார் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்படுகிறது’ என்று அப்போது ஆளுநர் தெரிவித்திருந்தார். அதன்பிறகு ஓராண்டாகியும் பதிவாளர் பொறுப்பில் அவர் நீடித்துதான் வருகிறார். இச்சூழலில் புதுச்சேரி மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை விவகாரத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் வாழ்க்கை கேள்விக் குறியானதால் சென்டாக் ஒருங்கிணைப் பாளர் பணியில் இருந்து தற்போது சிவராஜ் நீக்கப்பட்டுள்ளார். ஆனால் புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் அரசு என்ன செய்யபோகிறது என தெரியவில்லை." என்றனர்.
இதுபற்றி புதுவை தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தினர் கூறுகையில், "புதுவை சென்டாக்கில் அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தி நீண்டகாலமாக குழுவின் தலைவராக இருந்தவர் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ஆனால், தொழில்நுட்ப பல்கலைக்கழக பதிவாளராக சிவராஜ் அதே பதவியில் தொடர்கிறார். அவர் எந்தவித ஆக்கப்பூர்வமான பணிகளையும் செய்யவில்லை. எனவே தொழில்நுட்ப பல்கலைக்கழக பதிவாளர் பதவியிலிருந்தும் அவரை நீக்க வேண்டும். அவர் மீதான புகார்களை உயர்மட்ட குழுவுக்கு பரிந்துரை செய்து விசாரணை நடத்த வேண்டும்" என்று குறிப்பிட்டனர். இனியாவது தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை ஆளுநர் கண்டுக்கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
முக்கிய செய்திகள்
கல்வி
13 hours ago
கல்வி
17 hours ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
2 days ago
கல்வி
2 days ago
கல்வி
4 days ago
கல்வி
4 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
7 days ago
கல்வி
8 days ago
கல்வி
8 days ago