டிசம்பரில் குரூப் 1, சிவில் நீதிபதி தேர்வு முடிவுகள்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: குரூப் 1, சிவில் நீதிபதி பணிகளுக்கான முதன்மைத் தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் போட்டித் தேரவுகள் மூலம் நிரப்பப்படுகின்றன. அதன்படி கடந்த ஓராண்டில் நடத்தப்பட்ட 14 போட்டித் தேர்வுகளுக்கான முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற தகவல்களை டிஎன்பிஎஸ்சி தற்போது வெளியிட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு: 95 பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட குரூப்-1 முதன்மைத் தேர்வு முடிவும், 5,446 பணியிடங்களுக்கு சென்ற பிப்ரவரியில் நடைபெற்ற குரூப்- 2 முதன்மைத் தேர்வு முடிவும் டிசம்பரில் வெளியிடப்படும். அதேபோல், 731 கால்நடைஉதவி மருத்துவப் பணியிடங்களுக்கு கடந்த மார்ச் மாதம் நடந்த தேர்வில் தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்ட 1,365 பேருக்கான நேர்முகத் தேர்வு நவம்பர் 22 முதல் டிசம்பர் 6-ம் தேதி வரை நடைபெற உள்ளது. குரூப்-1 சி பதவிகளில் வரும் 11 மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான முதன்மைத் தேர்வு நவம்பர் 21, 22-ம் தேதிகளில்நடத்தப்படுகிறது.

வன உதவி காப்பாளர் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட முதன்மைத் தேர்வு முடிவு ஜனவரி மாதமும், சுற்றுலா அலுவலர், சிவில் நீதிபதி பணியிடங்களுக்கான தேர்வுமுடிவுகள் அடுத்த மாதத்திலும் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்த கூடுதல் விவரங்களை https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் தேர்வர்கள் சென்று தெரிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE