காஞ்சிபுரம்: திருக்காலிமேடு அரசு உயர்நிலைப் பள்ளிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 61 சென்ட் நிலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் பெயருக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், சர்வே செய்யும் பணிகள் தாமதமாவதால் பள்ளி கட்டிடத்துக்கான திட்ட மதிப்பீடு தயாரிக்க முடியாத நிலை உள்ளது. காஞ்சிபுரம் மாநகராட்சியின் 22-வது வார்டு திருக்காலிமேடு பகுதியில் கடந்த 2007-ம் ஆண்டு முதல் உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில், தற்போது 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
எனினும், குளக்கரையில் அமைக்கப்பட்டுள்ள பழைய மற்றும் புதிய கட்டிடங்களில் இட நெருக்கடியுடன் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதனால், உயர்நிலைப் பள்ளிக்கு நிலம் ஒதுக்கி புதிய வகுப்பறை கட்டிடம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பெற்றோர் மற்றும் உள்ளூர் மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதன்பேரில், 'இந்து தமிழ் திசை' நாளிதழில் தொடர்ந்து செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, திருக்காலிமேடு பகுதியில் 2-வது குறுக்கு கவரைத்தெரு பகுதியில் சுமார் 61 சென்ட் அனாதினம் நிலம் வருவாய்த்துறை மூலம் கண்டறியப்பட்டு, அந்நிலத்தை பள்ளிக்கு ஒதுக்க வேண்டும் என கல்வித்துறை சார்பில் வருவாய்த் துறைக்கு கடிதம் வழங்கப்பட்டது.
இதன்பேரில், உயர்நிலைப் பள்ளிக்கு மேற்கண்ட நிலம் ஒதுக்கப்பட்டு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பெயருக்கு நிலம் மாற்றப்பட்டது. எனினும், நிலத்தை அளவீடு செய்யும் பணிகள் தாமதமாவதால் பொதுப்பணித்துறை மூலம் பள்ளி கட்டிடத்துக்கான திட்டமதிப்பீடு தயாரிக்கும் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. இதுகுறித்து, சமூக ஆர்வலர் ராஜ்கமல் கூறியதாவது: இப்பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் நகரப்பகுதியில் உள்ள பல்வேறு அரசு பள்ளிகளில் படிக்கின்றனர். இங்கு, உயர்நிலைப் பள்ளிக்கு புதிய கட்டிடம் அமைத்தால் இப்பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் 5 முதல் 10 கி.மீ. தொலைவில் நகரப்பகுதியில் உள்ள பள்ளியை நாடிச் செல்லும் நிலைமாறும்.
தற்போது உள்ள உயர்நிலைப் பள்ளியில் கழிப்பறை உள்பட பல்வேறு அடிப்படை வசதிகள் இல்லாததால், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதனால், புதிய பள்ளி கட்டிடம் அமைக்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதுகுறித்து, வருவாய்த்துறை மற்றும் சர்வே அதிகாரிகள் கூறியதாவது: திருக்காலிமேடு பகுதியில் பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ள நிலத்தின் சர்வே பணிகளை விரைவாக மேற்கொண்டு அளவீடு செய்து வழங்கப்படும். மேலும், பள்ளிக்கு சொந்தமான நிலத்தின் அருகே அரசு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தால் அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
முக்கிய செய்திகள்
கல்வி
1 day ago
கல்வி
1 day ago
கல்வி
2 days ago
கல்வி
3 days ago
கல்வி
4 days ago
கல்வி
4 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
6 days ago
கல்வி
8 days ago
கல்வி
9 days ago
கல்வி
10 days ago
கல்வி
12 days ago
கல்வி
12 days ago
கல்வி
13 days ago