15 ஏக்கர் நிலத்தில் 120 வகையான மரங்களுடன் பசுமை வளாகமாக மாறிய புதுச்சேரி தாகூர் அரசு கல்லூரி!

By அ.முன்னடியான்

புதுச்சேரி: புதுச்சேரி லாஸ்பேட்டையில் தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. 1961-ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த கல்லூரியில் தற்போது 4 ஆயிரம் மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். 20 ஏக்கர் பரப்பளவில் அமையப்பெற்ற இந்த கல்லூரி வளாகத்தில் தரிசாக கிடந்த சுமார் 15 ஏக்கர் நிலத்தில் நகர்புற காடு வளர்ப்பு மற்றும் பசுமை வளாக திட்டத்தின் மூலம் இயற்கை சார்ந்த அரியவகை மர வகைகளும், செடி, கொடிகளும் வளர்த்து பராமரிக்கப்பட்டு வருகின்றது.

இந்த நகர்புற பசுமைக்காட்டில் புத்தர் தோட்டம், கரோனா நினைவு பூங்கா, வீரபாண்டிய கட்டபொம்மன், வேலு நாச்சியார் ஆகியோர் பெயரில் தோட்டங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி இயற்கை சார்ந்த திறந்தவெளியில் மாணவர்கள் அமர்ந்து கல்வி பயிலும் விதமாக அமைதி வனமும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.

மழைநீரை சேமிக்க சங்கம் குளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. கல்லூரி முதல்வரின் முயற்சியால் பேராசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் ஒருங்கிணைப்புடன் வளாகம் முழுவதும் பசுமையாக மாற்றப்பட்டுள்ளது. இதை ஆளுநர், முதல்வர் உள்ளிட்டோர் பார்வையிட்டு பாராட்டினர்.

மேலும், புதுச்சேரி மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவர்கள், இயற்கை ஆர்வலர்கள் பொதுமக்களும் வந்து பார்த்துவிட்டு, காட்டின் சூழல் குறித்து அறிந்து செல்கின்றனர். கல்லூரி முதல்வர் உள்ளிட்டோரின் இந்த முயற்சிக்கு முதல்வரின் பாராட்டு சான்று, சிஎஸ்ஆர் தேசிய விருது, சுற்றுச்சூழல் தலைமைத்துவ விருது உள்ளிட்டவை கிடைத்துள்ளன. இதன்மூலம் புதுச்சேரியில் உள்ள கல்வி நிறுவனங்களில் தாகூர் அரசு கலைக் கல்லூரி முன்னோடி நிறுவனமாக விளங்கி வருகிறது.

இதுதொடர்பாக கல்லூரி முதல்வர் சசிகாந்ததாஸ் நம்மிடம் கூறியதாவது: கடந்த 2017-ல் நான் இந்த கல்லூரியின் முதல்வராக பொறுப்பேற்றவுடன் மாணவர்களை நல்வழிப்படுத்தும் நோக்கில் பல நல்ல விஷயங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, மாணவர்கள் தீய பழக்கங்களுக்கு ஆளாகாமல் இருக்கவும், அவர்களின் நல்ல ஆற்றலை சரியான வழியில் மடைமாற்றம் செய்யவும் முயற்சி எடுத்துள்ளோம்.

புதுச்சேரி தாகூர் அரசு கலை கல்லுாரியில் இயற்கை சார்ந்த அரியவகை மர வகைகளும்,
செடி, கொடிகளும் வளர்த்து பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த வனத்தில் 7 ஆயிரம் செடிகள் படர்ந்து விரிந்துள்ளன. முயல், வாத்து, புறா, பட்டாம்பூச்சி, மயில் போன்றவைகளின் வாழ்விடமாக மாற்றப்பட்டுள்ளது. 20 வகையான பறவைகள், 30 வகையான பட்டாம்பூச்சிகள் உலவுகின்றன. 120 வகையான மரங்கள் உள்ளன. கல்லூரி வளாகத்தில் பெய்யும் மழைநீரை சேமிக்க 6,045 சதுர பரப்பில் 101 அடி ஆழம் கொண்ட சங்கம் குளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 12 மில்லியன் லிட்டர் தண்ணீரை சேமிக்க முடியும்.

புதுச்சேரி நகரப் பகுதியை காட்டிலும் இங்கு 3 சதவீதம் உயிர்வளி அதிகரித்துள்ளது. குறைந்த வெப்பநிலை நிலவுகிறது. கல்லூரியை சுற்றிய பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் 4 அடி வரை உயர்ந்துள்ளது. இங்கு தேனீ வளர்ப்பு என்பது கற்றல் திறனாக அறிமுகப்படுத்தியுள்ளோம்.

பிளாஸ்டிக் குடங்கள், பொருட்கள் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. மாறாக மண் குடங்கள், பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இங்கு பழங்கள், காய்கறிகள் அனைத்தும் இயற்கை முறையில் விளைவிக்கப்படுகின்றன. இதன்மூலம் விடுதி மாணவர்களுக்கு சத்தான உணவு வழங்கப்பட்டு வருகிறது. கல்லூரி வளாகத்தில் விளைந்த காய்கறிகள், பழங்களை விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த ரூ.25 ஆயிரம் முதல்வரின் நிவாரண நிதியில் சேர்க்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி தாகூர் அரசு கலை கல்லுாரியில் உருவாக்கப்பட்ட பூங்காவில்
அமர்ந்து படிக்கும் மாணவ, மாணவிகள்.
படங்கள்:எம்.சாம்ராஜ்

உலக அளவில் வனப்பரப்பு 31 சதவீதம். தேசிய அளவில் வனப்பரப்பு 24.6 சதவீதம். புதுச்சேரியில் வெறும் 13 சதுர கி.மீ. அதாவது புவிப்பரப்பில் 2.65 சதவீதம் மட்டுமே என்பது வேதனை அளிக்கிறது. இதனால் கல்லூரியில் காடு வளர்ப்பு திட்டத்தை தொடங்கி தரிசாக கிடந்த 15 ஏக்கர் நிலம் பசுமையாக மாற்றப்பட்டுள்ளது.

கடந்த 6 ஆண்டுகளில் கல்லூரி வளாகத்தில் பசுமை பரப்பு 90 சதவீதம் அதிகரித்துள்ளது. அமைதியான சூழல் நிலவுவதால் மாணவர்களின் நன்னடத்தை மேம்பட்டுள்ளது. கல்வியின் தரம் அதிகரித்துள்ளது. நிர்வாகத்துக்கு எதிராக போராட்டம் என்பது குறைந்துள்ளது. முன்பைவிட 40 சதவீத மாணவிகள் சேர்க்கை பெறுகின்றனர். 61 சதவீதம் கல்லூரியின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. ராகிங் போன்ற சம்பவங்கள் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது.

நகர்புற காடு வளர்ப்பு மற்றும் பசுமை வளாகத்துக்கு கடந்த 2021-ல் முல்வரின் பாராட்டு சான்று பெற்றுள்ளோம். 2022-ல் சிஎஸ்ஆர் தேசிய விருது கிடைத்தது. தனியார் அறக்கட்டளை சார்பிலும் தேசிய விருது வழங்கப்பட்டது. 2023-ம் ஆண்டுக்கான சுற்றுச்சூழல் தலைமைத்துவ விருதும் கிடைத்துள்ளது. மத்திய சுற்றுலாத்துறையும் புதுச்சேரியில் பார்க்கக்கூடிய இடங்களில் ஒன்றாக இதனை அங்கீகரித்துள்ளது. பசுமை மனிதன், மரம் மற்றும் வன மனிதன் என்ற பட்டங்களும் பெற்றுள்ளது சிறப்பானதாகும் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE