சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கு பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கியது

By செய்திப்பிரிவு

சென்னை: இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின்கீழ் அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவக் கல்லூரி, யுனானி மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் சித்த மருத்துவக் கல்லூரி, மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஓமியோபதி மருத்துவக் கல்லூரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கோட்டாறில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி உள்ளன.

இந்த 5 அரசு கல்லூரிகளில் உள்ளஇடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள 275 இடங்கள் மாநிலஅரசுக்கு உள்ளது. இதேபோல் 28 தனியார் கல்லூரிகளில் உள்ள இடங்களில் 15% அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள இடங்களில் 65% மாநில அரசுக்கும், 35%நிர்வாக ஒதுக்கீட்டுக்கும் உள்ளன. அரசு ஒதுக்கீடு இடங்கள், நிர்வாகஒதுக்கீடு இடங்கள், தனியார் கல்லூரிகளின் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கு மாநில அரசு கலந்தாய்வு நடத்தி வருகிறது. அரசு கல்லூரிகளின் 15% இடங்களுக்கு மட்டும் மத்திய அரசு கலந்தாய்வு நடத்துகிறது.

சித்தா, ஆயுர்வேத, யுனானி, ஓமியோபதி (பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், பிஎச்எம்எஸ்) பட்டப்படிப்புகளுக்கு 2023-24-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனர். விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு பின்னர், கடந்த 17-ல்தகுதியான மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.

நேற்று முன்தினம் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணாஅரசினர் இந்திய மருத்துவமனை வளாகத்திலுள்ள தேர்வுக்குழு அலுவலகத்தில் கலந்தாய்வு தொடங்கியது. முதல் நாள் கலந்தாய்வில் 7.5%உள் இடஒதுக்கீட்டின் கீழ் 81 அரசுபள்ளி மாணவர்களும், சிறப்பு பிரிவில் 12 மாணவர்களும் இடஒதுக்கீட்டு ஆணைபெற்றனர். பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது.

இதில், 365 மாணவர்களுக்கு கல்லூரிகளில் சேருவதற்கான இடஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது. தரவரிசைப் பட்டியலில் முதல் 5 இடங்களை பெற்றவர்கள் கலந்தாய்வில் பங்கேற்காததால், பட்டியலில் 6-வது இடத்தில் இருந்த மதுரை மாணவி பி.தயா (நீட் மதிப்பெண் 720-க்கு 549) முதலிடம் பிடித்தார். அந்த மாணவி பாளையங்கோட்டை சித்தா கல்லூரியில் சேருவதற்கான ஆணையை பெற்றார்.

பொதுப் பிரிவு கலந்தாய்வு வரும் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது. 31-ம் தேதி அகில இந்திய ஒதுக்கீட்டுஇடங்களுக்கான கலந்தாய்வும், நவம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வும் நடைபெறவுள்ளது. கூடுதல் விவரங்களை www.tnhealth.tn.gov.in இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE