உயிர் பயத்துடன் சாலையை கடக்கும் பள்ளி மாணவர்கள் - திருப்பராய்த்துறை பிரச்சினையும், தீர்வுக்கான ஆய்வும்!

By செய்திப்பிரிவு

திருச்சியை அடுத்த திருப்பராய்த்துறையில் 4 பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளுக்கு வெளியூர்களில் இருந்து 1,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் நாள்தோறும் பேருந்து மூலம் வந்து செல்கின்றனர். அதிகளவிலான வாகனப் போக்குவரத்து உள்ள திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் (என்.எச் 81) அமைந்துள்ள திருப்பராய்த்துறை பேருந்து நிறுத்தத்தில் வந்திறங்கும் மாணவ, மாணவிகள், பயணிகள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு தான் சாலையை கடக்க வேண்டிய நிலை உள்ளது.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் தங்கராஜ் கூறுகையில், “1999-ம் ஆண்டு திருப்பராய்த்துறை பேருந்து நிறுத்தத்தில் லாரி ஒன்று புகுந்து ஏற்பட்ட விபத்தில் அங்கு பேருந்துக்காக காத்திருந்த 10 மாணவ, மாணவிகள் உயிரிழந்தனர். அதன்பிறகும் இங்கு பேருந்துக்காக நிற்பவர்கள், சாலையை கடப்பவர்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்குவது தொடர்கிறது.

இதையடுத்து, ‘திருப்பராய்த்துறை தேசிய நெடுஞ்சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும். வாகனங்களின் வேகத்தை குறைக்க தற்காலிக தடுப்புகள் அமைக்க வேண்டும். நெடுஞ்சாலைத் துறை ரோந்து போலீஸாரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும். பள்ளி தொடங்கும், முடியும் நேரங்களில் பள்ளிகளின் நிர்வாகம் சார்பில் மாணவ, மாணவிகள் பாதுகாப்பாக சாலையை கடக்க ஆட்களை நியமிக்க வேண்டும்.

இங்கு உரிய கள ஆய்வு செய்து, வாகனங்கள் செல்லும் வகையில் மேம்பாலம் அமைக்கவோ அல்லது பயணிகள் எளிதாக சாலையை கடக்க நடைமேம்பாலம், சுரங்கப் பாதை அமைக்கவோ நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என பிரதமர், தமிழக முதல்வர், மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர், தேசிய நெடுஞ்சாலைத் துறை, அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டம், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு மனு அனுப்பினேன். அதற்கு தேசிய நெடுஞ்சாலைத் துறை என்.எச் 67 (புதியது 81) திட்ட துணை பொதுமேலாளர் எம்.கணேஷ்குமார், சாலை மிகவும் பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ளதாக பதில் அனுப்பினார்.

இதையடுத்து, விபத்து அபாயம் நிறைந்த அந்த இடத்தை வீடியோ எடுத்து அனுப்பினேன். அதன்பின்னர் நிலைமையை புரிந்து கொண்ட தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், அந்த இடத்தில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய திருச்சி-கரூர் சாலையை பராமரித்து வரும் தனியார் ஒப்பந்த நிறுவனம் மற்றும் அந்த சாலையில் சுங்க வசூலை நிர்வகிக்கும் நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளனர்” என்றார்.

திருப்பராய்த்துறையை ஒட்டியுள்ள திருச்சி- கரூர் நெடுஞ்சாலை 1999 வரை இருவழிச் சாலையாக மட்டுமே இருந்தது. தற்போது அந்த சாலை அகலப்படுத்தப்பட்டு தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் செய்ய வேண்டிய எந்தவிதமான பாதுகாப்பு ஏற்பாடும் இங்கு செய்யப்படவில்லை. ஊருக்குள்ளோ அல்லது ஊரை ஒட்டியோ தேசிய நெடுஞ்சாலை சென்றால் அங்கு பாலம் அமைத்து வாகனங்கள் பாலத்தின் மீது செல்லும் வகையிலும், உள்ளூர் வாகனங்கள், மக்கள் செல்லும் வகையில் சர்வீஸ் சாலை போன்ற ஏற்பாடுகளும் செய்யப்படும்.

திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலை குறித்து புகார் சென்றதையடுத்து
அங்கு அமைக்கப்பட்டுள்ள பேரிகார்டு.

ஆனால் இங்கு சரியான திட்டமிடல் இல்லாமல் சாலை அமைத்துள்ளனர். எனவே, இங்கு வந்து செல்லும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் விபத்தில் சிக்காமல், எளிதாக சாலையை கடக்கும் வகையில் உரிய நிரந்தர ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். அதுவரை சாலை தடுப்புகள் அவசியம் இருக்க வேண்டும். போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீஸார் தொடர்ந்து ஈடுபட வேண்டும். உள்ளூர் பேருந்துகள் நிறுத்தும் வகையில் திருப்பராய்துறையில் உடனடியாக ‘பஸ் பே’ அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு ஆலோசனை வழங்கும் குழுவினர் ஆய்வு

திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் (என்எச் 81) திருப்பராய்த்துறை பேருந்துநிறுத்தம் பகுதியில் சாலைப் பாதுகாப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்துவது தொடர்பான மேற்கண்ட செய்தி சமீபத்தில் ‘இந்து தமிழ்’ நாளிதழின் ‘ஊர்வலம்’ பகுதியில் வெளியானது. இதையடுத்து, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு ஆலோசனை வழங்கும் நிறுவனத்தின் குழுவினர் திருப்பராய்த்துறையில் சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு ஆலோசனை மற்றும் கருத்துகள் வழங்கும் தனியார் நிறுவனத்தின்(உபம் இண்டர்நேஷனல் கார்ப்பரேஷன்) திருச்சி - கரூர் பிரிவுத் தலைவர் மணிமாறன், சுங்கச்சாவடி மக்கள் தொடர்பு அலுவலர் விக்னேஷ் ஆகியோர் தலைமையிலான குழுவினர் திருப்பராய்த்துறை பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர்.

மனுதாரர் தங்கராஜ், சாலை பயனீட்டாளர் நலக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் அய்யாரப்பன், திருப்பராய்த்துறை ஊராட்சித் தலைவர் பிரகாசமூர்த்தி மற்றும் பொதுமக்கள், ‘இந்து தமிழ்’ நாளிதழில் வெளியான செய்தியை சுட்டிக்காட்டி, தங்களது கருத்துகளை தெரிவித்து, அந்த பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என குழுவினரிடம் வலியுறுத்தினர்.

திருப்பராய்த்துறையில் நேற்று ஆய்வு மேற் கொண்ட இந்திய தேசிய நெடுஞ்சாலை
ஆணையத்துக்கு ஆலோசனை வழங்கும் தனியார் நிறுவன அலுவலர்கள்.

இதுகுறித்து ஆய்வுக்கு வந்தகுழுவினர் கூறுகையில், “திருப்பராய்த்துறை பேருந்து நிறுத்தம் பகுதியில் அதிக அளவு ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்படும். தேசிய நெடுஞ்சாலையில் வேகத்தடை அமைக்க முடியாது என்பதால், இச்சாலை வளைவில் வேகத்தடை போன்றுவாகனங்களின் வேகத்தை குறைக்க ‘ரம்ப்லிங் ஸ்ட்ரிப்ஸ்' அமைக்கப்படும். கூடுதல் மின் விளக்குகள் அமைக்கப்படும். மேலும், பஸ் பே கட்டவும், நடைமேம்பாலம் அமைப்பது தொடர்பாகவும் இந்திய தேசியநெடுஞ்சாலை ஆணையம் மூலம் மத்தியஅரசுக்கு ஆலோசனை வழங்கப்படும்.

இங்கு மேம்பாலம் அமைப்பதில் தொழில்நுட்ப ரீதியில் சில சிக்கல்கள் உள்ளன. மேம்பாலம் அமைத்தால் 24 மீட்டர் அகலத்துக்கு இடம் வேண்டும். ஆனால், இங்கு 14 மீட்டர் அகல இடமே உள்ளது. மேலும் சாலையின் இருபுறமும் காவிரி ஆறு மற்றும் வாய்க்கால், கோயில்ஆகியவை உள்ளதால் அங்கு மேம்பாலம் அமைப்பதில் சிரமம் உள்ளது. பொதுமக்களின் கோரிக்கை குறித்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்கப்படும்” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

5 hours ago

கல்வி

3 hours ago

கல்வி

6 hours ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

3 days ago

கல்வி

3 days ago

கல்வி

4 days ago

கல்வி

5 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

கல்வி

7 days ago

கல்வி

7 days ago

மேலும்