செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பயிற்சி வகுப்பு: பேராசியர்கள் பங்கேற்பு

By செய்திப்பிரிவு

சென்னை: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சார்பில் ‘தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் தமிழின் செம்மொழிப் பண்புகள்’ என்ற தலைப்பில் கடந்த 6-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. இதில் பேராசியர்கள், அறிஞர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர்.

இது தொடர்பாக செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வெளியிட்ட தகவல்: 2004, அக்டோபர் 12ஆம் நாள் மத்திய அரசு, தமிழுக்கான செம்மொழித் தகுதிக்குரிய அரசாணையை வெளியிட்ட பின்னர் இந்தியச் சூழலில் ‘செம்மொழி’ குறித்த உரையாடல் கவனம்பெறத் தொடங்கியுள்ளது. தமிழ் ஆய்வுத் தளத்திலும் செம்மொழிச் சொல்லாடல் பரவலாக நிகழ்த்தப்படுகின்றது.

பல நூற்றாண்டுகள் கடந்த தொன்மை, தனித்து இயங்கும் ஆற்றல், மிக நீண்ட இலக்கிய - இலக்கண வளமை போன்றன ஒரு மொழிக்குரிய செம்மொழித் தகுதிப்பாடுகளாக வரையறுக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு, தமிழுக்கான செம்மொழித் தகுதிக்குரிய அரசாணையை வெளியிட்டபோது இந்திய மொழியியல் அறிஞர்களின் பரிந்துரைப்படி செவ்வியல் மொழியென அறிவிக்கப்படுவதற்கு, ஒரு மொழியைக் கருத்தில்கொள்வதற்கு வேண்டிய சில வரையறைகளை வகுத்திருந்தது.

• ஆயிரம் ஆண்டுக்குமேலான மிகப் பழமையுடைய நூல்கள்/பதிவுபெற்ற வரலாறு.
• மொழியைப் பயன்படுத்தும் பல தலைமுறையினர் அரிய பண்பாட்டுப் பாரம்பரியம் உள்ளதாகக் கருதும் இலக்கியம்/நூல்கள்.
• அம்மொழிக்கே உரியதாகவும் மற்ற மொழிக்குடும்பத்திடமிருந்து கடன் பெறாததுமான இலக்கியப் பாரம்பரியம்.
• செவ்வியல் மொழி என்பதும் அதன் இலக்கியமும் அம்மொழியின் நவீன இலக்கியத்திலிருந்து வேறுபட்டிருக்குமாதலால், ஒரு செவ்வியல் மொழிக்கும் அதன் நவீன வடிவத்திற்கும் அல்லது அதிலிருந்து பிறந்த மொழிகட்கும் இடையே ஒரு தொடர்பின்மை.

தமிழ்மொழி மேற்கண்ட தகுதிகளைப் பெற்றிருப்பதால் செவ்வியல் மொழி என வழங்கப்படும் என்று மத்திய அரசு குறிப்பிட்டிருந்தது. ஆயிரம் ஆண்டுக்குமேலான மிகப் பழமையுடைய பதிவுபெற்ற வரலாறு, மொழியைப் பயன்படுத்தும் பல தலைமுறையினர் அரிய பண்பாட்டுப் பாரம்பரியம் உள்ளதாகக் கருதும் நூல்கள் ஆகியன அகழாய்வுச் சான்றுகளால் மேலும் உறுதிப்படுகின்றன. சிந்துவெளி ஆய்வும், அரிக்கமேடு, பொருந்தல், ஆதிச்சநல்லூர், கீழடி முதலான இடங்களில் நடத்தப்பட்ட அகழாய்வுகளும் தமிழ் வரலாற்றின் காலத்தைப் பின்னோக்கிக் கொண்டுசெல்வதற்குக் காரணமாக அமைந்துள்ளன.

கீழடியில் அகழாய்வில் கிடைத்த சான்றுகளின்மூலமாகப் தமிழின் தொன்மை தொடர்பாக இதுவரை நிலவிவந்த கருதுகோள்களுக்கு உறுதியான தரவுகள் கிடைத்துள்ளன. தமிழ்நாட்டு நகரமயமாதல் கி.மு. ஆறாம் நூற்றாண்டிலிருந்து தொடங்குகிறது என்பதும் கீழடி அகழாய்வால் உறுதியாகியுள்ளது. தமிழ் – பிராமி எழுத்து வடிவத்தின் காலத்தை இன்னும் பின்னோக்கி எடுத்துச்செல்லத்தக்க சான்றுகள் கிடைத்துள்ளன.

தொல்லியல் ஆய்வு முடிவுகளின்வழியாகப் பெறப்பட்டுள்ள தமிழின் செம்மொழிப் பண்புகளையெல்லாம் வளமிக்க ஆய்வாளர்களை உருவாக்கும் ஆசிரியர்களுக்குப் பயிற்றுவித்துத் தொல்லியல்துறை தொடர்பான ஆய்வுகளை வளர்த்தெடுக்கவும் செம்மொழிப் பண்புகளைப் புலப்படுத்தவும் வேண்டும் என்ற நோக்கில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் ‘தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் தமிழின் செம்மொழிப் பண்புகள்’ என்ற தலைப்பிலான புத்தொளிப் பயிற்சி வகுப்பினை நடத்தியது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த 30 பேராசிரியர்கள் இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்றனர். பல்வேறு பொருண்மைகளில் அறிஞர்கள் உரை வழங்கினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE