கிராமப்புற மாணவர்களுக்கு பயன்பாட்டு அறிவியல் குறித்து கற்பிக்கும் சென்னை ஐஐடி

By செய்திப்பிரிவு

சென்னை: அன்றாடப் பயன்பாட்டு சாதனங்களுக்குப் பின்னணியில் உள்ள அறிவியல் கருத்துகளை பள்ளி மாணவர்களுக்குக் கற்பிப்பதோடு, அவற்றை தயாரிக்க 3D-அச்சிடுதல் முறையை பயன்படுத்துவது குறித்தும் சென்னை ஐஐடி கற்றுக் கொடுக்கிறது.

இது தொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகப் (ஐஐடி மெட்ராஸ்) பேராசிரியர்களும், மாணவர்களும் அடிப்படை மற்றும் மேம்பட்ட அறிவியல், பொறியியல் கருத்துகளை தமிழகத்தின் கிராமப்புறப் பள்ளிகளுக்கு எடுத்துச் சென்று அங்குள்ள மாணவர்கள் 'புதுமையாக' சிந்திக்கும் வகையில் அறிவியல் பூர்வமான கருத்துகளை கற்றுக் கொடுக்கின்றனர். 'டீச் டு லேர்ன்' (www.teachtolearn.co.in) குழுவினர் முன்னெடுத்த 'டிவைஸ் இன்ஜினியரிங் லேப்' (DEL) மூலம் அன்றாடப் பயன்பாட்டு சாதனங்களுக்குப் பின்னணியில் உள்ள அறிவியல் கருத்துக்களை பள்ளி மாணவர்களுக்குக் கற்பிப்பதோடு, பொம்மைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் போன்றவற்றைத் தயாரிக்க 3D-அச்சிடுதல் முறையை பயன்படுத்துவது எப்படி என்றும் கற்றுக் கொடுக்கின்றனர்.

திறன் மேம்பாட்டிற்கான தளமாக வடிவமைக்கப்பட்ட DEL முன்முயற்சியின்படி, 8, 9, 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்காக மூன்றாண்டு பாடத்திட்டங்கள் உள்ளன. மாணவர்கள் அன்றாட வாழ்க்கையில் காணக்கூடிய பயன்படுத்தக்கூடிய பல்வேறு முக்கிய சாதனங்களைப் பற்றி, அவர்களின் பாடப்புத்தகங்களில் இடம்பெற்ற பாடங்களின் அடிப்படையில் ஆய்வுக்கூடமும் நடத்தப்படுகிறது. உதாரணத்திற்கு சைக்கிள் பெல், காலிங்பெல், எலக்ட்ரிக் அயர்ன், மோட்டார்கள் தொடங்கி கீசர், மைக்ரோவேவ் ஓவன், 3டி பிரிண்டர் போன்ற எளிய சாதனங்கள் வரை எவ்வாறு இயங்குகின்றன என்பது குறித்து விளக்கம் அளிக்கப்படுகிறது.

கிராமப்புற பள்ளி மாணவர்களுடன் ஐஐடி மாணவர்களை இணைப்பதன் மூலம் பள்ளிகள் மட்டத்திலேயே 'உருவாக்கும் கலாச்சாரத்தை' ஏற்படுத்துவதும் வடிவமைப்பு, கட்டமைத்தல் போன்ற திறன்களை மேம்படுத்துவதும் இதன் நோக்கமாகும். இவ்வாறான வகுப்புகள் எதிர்காலத்தில் மாணவர்களுக்கு வாழ்வாதாரங்களை உருவாக்கும் வாய்ப்புள்ளதால் தொழில்முனைவோர் மனநிலையை ஏற்படுத்துவது இதன் மற்றொரு நோக்கமாகும்.

பாடங்களில் இடம்பெற்றுள்ள அம்சங்கள்: டிவைஸ் என்ஜினியரிங் கான்சப்ட் என கூறப்படும் பிரித்தல்-ஒன்றிணைத்தல், செயல்பாட்டுக் கொள்கை, சாதனங்களுக்கான அறிவியல் அடிப்படை, பயன்பாடுகளை விரிவாக்கம் செய்யும்போது என்ன நடக்கும் போன்ற அம்சங்கள் குறித்தும், 3டி பிரிண்டிங் (வடிவமைப்பு, அடிப்படை புரோகிராமிங், அச்சிடுதல் போன்றவை) குறித்தும் முக்கிய பயிற்சித் தொகுப்புகளை டிவைஸ் இன்ஜினியரிங் லேப்ஸ் ஒரே சமயத்தில் வழங்குகிறது.

செயல்முறைகளை அறிந்து கொள்ளுதல், முற்றிலும் நேரடி அனுபவங்களைப் பெறுதல் என்ற அடிப்படையிலேயே மாணவர்களுக்கு பயிற்சியும், கற்பித்தலும் நடைபெறுகிறது. மாணவர்கள் 3டி அச்சிடும் முறையில் FDM நுட்பத்தைப் பயன்படுத்தி அச்சிடக் கற்றுக் கொள்வார்கள். உதிரிபாகங்கள், கியர்கள், சக்கரங்கள், பொம்மைகள் போன்றவற்றை அவர்கள் அச்சிட முடியும். முதலாம் ஆண்டில் இருப்பதைவிட இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டுகளில் சாதனங்கள் மற்றும் அச்சிடும் பொருட்கள் சிக்கல் நிறைந்ததாகவும், கடினமாகவும் இருக்கும். 9-ம் வகுப்பு மாணவர்கள் 3டி அச்சிடும் இயந்திரத்தை தொடக்கம் முதல் உருவாக்க கற்றுக் கொள்வதுடன், எதிர்காலத்தில் தங்கள் வாழ்வாதாரத் தேர்வாகவும் இதனை உருவாக்கிக் கொள்ள முடியும்.

கல்வி நிறுவனங்கள், தன்னார்வ நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற ஐஐடி மெட்ராஸ் தயாராக உள்ளது. குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களில் உள்ள கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் இதுபோன்ற ஆய்வகங்களையும், டிவைஸ் இன்ஜினியரிங் லேப்ஸ்களையும் அமைக்கத் திட்டமிட்டுள்ளது. தொழில்துறையினரும், கொடையாளர்களும் பின்வரும் இணைப்பின் மூலம் தங்கள் பங்களிப்பை வழங்கி, இந்தியா முழுவதும் உள்ள கிராமப்புற பள்ளி மாணவர்களுக்குப் பயனளிக்கும் வகையில் இந்தத் திட்டத்தை விரிவாக்கம் செய்ய உதவலாம்: https://joyofgiving.alumni.iitm.ac.in/projects/general-fund/device-engineering-labs-in-rural-government-schools

இந்த முன்முயற்சியின் முக்கிய பயன்களை விவரித்த ஐஐடி மெட்ராஸ்-ன் அப்ளைடு மெக்கானிக்ஸ் மற்றும் பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் துறையின் திட்டத் தலைவர் பேராசிரியர் பிஜுஷ் கோஷ், "இந்தியாவில் தயாரித்தல் என்ற கலாச்சாரம் பள்ளிகள் மட்டத்திலேயே தொடங்க வேண்டும் என்பதுதான் எங்கள் கருத்து. இக்கலாச்சாரத்தை ஒன்றுகூடி கட்டியெழுப்ப வேண்டும் என்பதற்காகவே சென்னை ஐஐடி பள்ளிகளை அணுகியுள்ளது. ஏதாவது ஒரு பொருளை உருவாக்கும்போதும், வடிவமைக்கும்போதும் அதன் தொடர்புடைய கருத்துக்கள், கோட்பாடுகள் போன்றவற்றையும் மாணவர்கள் தெளிவாகப் புரிந்து கொள்வார்கள். இதன் வாயிலாக அதிக நம்பிக்கையைப் பெறுவதுடன், அதிக சுவாரசியத்துடன் கற்றுக் கொள்ளவும் முடிகிறது" என்றார்.

'டீச் டூ லேர்ன்' திட்டத்தை உருவாக்கிய பேராசிரியர் பிஜுஷ் கோஷ் மேலும் கூறுகையில், "வெரிசோன் இந்தியா, வெர்டிவ் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் தங்களது சமூகப் பொறுப்புணர்வு நிதியின் வாயிலாக இதுபோன்ற ஆய்வகங்களை அமைக்க ஆதரவளித்துள்ளனர். அந்நிறுவனங்களுக்கு சென்னை ஐஐடி நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் 'டெல்' ஆய்வகங்களை நிறுவ சென்னை ஐஐடி ஆர்வமாக உள்ளது. நாட்டின் அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு அறிவியல் மனப்பான்மையை ஊக்குவிக்கும் வகையில் இந்த முன்முயற்சியை தொழில்துறையினரும், கொடையாளர்களும் ஆதரிப்பார்கள் என நம்புகிறோம்" எனக் குறிப்பிட்டார்.

200-க்கும் மேற்பட்ட முதுகலை மாணவர்கள் 25 பரிசோதனைக் கூடங்களில் 'டெல்' ஆய்வகங்களுக்கான சுமார் 30 சாதனங்களுக்கு உரிய உள்ளடக்கத்தைத் தயாரித்துள்ளனர். ஆவணங்கள் மற்றும் பவர்பாயிண்ட் விளக்கக் காட்சிகளை உள்ளடக்கிய 'பயிற்சியாளருக்கான பயிற்சி' உள்ளிட்ட கற்பித்தல் தொகுதிகளையும் அவர்கள் உருவாக்கியிருக்கின்றனர். இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, கிராமப்புற மாணவர்களுக்கு இந்த சாதனங்கள் தொடர்பான கருத்துக்களை 30 முதுகலை மாணவர்கள் நேரடியாக கற்றுக் கொடுத்தனர்.

பள்ளிப் பாடத்திட்டத்தின்படி சாதனக் களஞ்சியங்களை உருவாக்கும் பணியில் இளங்கலை மாணவர்கள் 25 பேர் ஈடுபடுத்தப்பட்டனர். இதுதவிர, பிரதமரின் ஆய்வு உதவித் தொகை திட்ட மாணவர்கள் (PMRF), அறிஞர்கள் 60 பேர் 3டி-யில் அச்சிடப்பட்ட பொருட்கள் தொடர்பான கருத்துகளை விளக்க வெவ்வேறு மாதிரிகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பட்டதாரி மாணவர்கள் அடுத்த 2 அல்லது 3 மாதங்களில் வார இறுதி நாட்களில் பள்ளிகளுக்குச் சென்று கருவிகள் மற்றும் 3டி பிரிண்டிங் தொடர்பாக கற்பிக்கத் தொடங்குவார்கள் என எதிர்பார்க்கலாம்.

தற்போது, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் 13 பள்ளிகளில் 'டெல்' ஆய்வகங்கள் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளன. மேலும் 3 பள்ளிகளுக்கான இறுதிக்கட்டக் கலந்தாலோசனை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த முன்முயற்சியால் 1,000 மாணவர்கள் நேரடியாகவும், 2,500 மாணவர்கள் மறைமுகமாகவும் பயன்பெறுகின்றனர். இன்னும் வகுப்புகள் அதிகரிக்கும்போது இந்த எண்ணிக்கை கணிசமாக உயர வாய்ப்புள்ளது.

கற்பிக்கும் பணிக்காக சென்னை ஐஐடி மாணவர்கள் மட்டுமின்றி, பயிற்சியாளர்களையும் 'டெல்' நியமித்துள்ளது. பணியமர்த்தப்பட்ட பயிற்சியாளர்களுக்கு சென்னை ஐஐடி-ல் சாதனங்கள், கற்பித்தல், 3டி அச்சிடுதல் ஆகியவற்றின் பல்வேறு அம்சங்கள் குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது. சாதனத்திலோ, அச்சிடுவதிலோ உள்ள கருத்துகள் தொடர்பாக விளக்கம் அளிக்க வெவ்வேறு மாதிரிகளை அவர்கள் உருவாக்கி உள்ளனர்.

இது குறித்து செங்கல்பட்டு மாவட்டம் காரணைப்புதுச்சேரி அரசு உயர்நிலைப் பள்ளி (GHS) மாணவரான பி.ஸ்ரீநாத் கூறும்போது, "மிகச்சிறந்த கற்றல் அனுபவம் கிடைத்துள்ளது. உதாரணத்துக்கு மணியை (பெல்) எடுத்துக் கொண்டால் அதன்மீது மின்காந்த மின்னோட்டம் பயன்படுத்தப்படும். எனது ஆசிரியர் இதுபற்றிய தத்துவத்தை மட்டுமே விளக்க முடியும். டிவைஸ் இன்ஜினியரிங் ஆய்வகத்தில் உள்ள வழிகாட்டி, எங்களுக்கு மின்சார மணியில் என்ன நடக்கிறது என்பதை நேரடியாக கற்றுக் கொடுத்தார். மின்சார மணியைத் திறந்துகாட்டி ஒவ்வொருவருக்கும் கற்றுக் கொடுத்தார்கள். மின்சாரம் பாய்வதையும், மின்சாரம் காந்தப்புலத்தை உருவாக்குவதையும், காந்தம் இரும்பை ஈர்ப்பதையும், பின்னர் ஒலியை உருவாக்குவதையும் கண்டோம். இவ்வாறாக, மின்சார மணி எவ்வாறு செயல்படுகிறது என்பதைக் கற்றுக் கொண்டேன்" எனத் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரியில் உள்ள கேம்பிரிட்ஜ் பப்ளிக் இ-ஸ்கூல் நிறுவனரான சனத்குமார் கூறுகையில், "பள்ளி வளாகங்களில் சென்னை ஐஐடி தொடங்கியிருக்கும் டிவைஸ் இன்ஜினிரியங் லேப் முயற்சி மிகச் சிறந்த ஒன்றாகும். இதில் கேம்பிரிடஜ் பப்ளிக் இ-ஸ்கூல் இடம்பெற்றிருப்பது பெருமை அளிக்கிறது. மாணவர்களுக்கு அவர்கள் அளிக்கும் பயிற்சியால் கோட்பாடு அறிவு மட்டுமின்றி நேரடி அனுபவமும் கிடைப்பதால் ஆய்வகத்தில் புதிய கருவிகளை உருவாக்கவும், இணைந்து உருவாக்கவும் தூண்டப்படுகிறார்கள். இந்த முன்முயற்சி நீண்டநாட்கள் தொடரும்போது அது மாணவர்களை இளம் தொழில் முனைவோராகவும் உயர்த்திவிடும்" என்றார்.

செங்கல்பட்டு மாவட்டம் காரணைப்புதுச்சேரி அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியை சூர்யகலா கூறுகையில், "மாணவர்களுக்கு 'டெல்' நேரடி அனுபவத்தை வழங்குகிறது. மாணவர்கள் பெரும்பாலும் 'அதைத் தொடாதே', 'இதை உடைத்துவிடாதே' என்ற வார்த்தைகளைத் தான் கேட்டிருப்பார்கள். ஆனால், இங்கே எந்த ஒரு கருவியையும் திறந்து பார்த்து எவ்வாறு இயங்குகிறது என அறிந்து கொள்ளலாம். அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். எதிர்காலத்தில் அவர்கள் சுயதொழில் தொடங்குவதற்கான சிந்தனையை வளர்க்கும் விதமாக இந்த முயற்சி அமைந்துள்ளது" எனக் குறிப்பிட்டார். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

2 hours ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

2 days ago

கல்வி

3 days ago

கல்வி

4 days ago

கல்வி

4 days ago

கல்வி

4 days ago

கல்வி

5 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

கல்வி

8 days ago

மேலும்