கிராமப்புற மாணவர்களுக்கு இலவச போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகள் நடத்தும் ஓய்வு பெற்ற அதிகாரி ராஜகோபால்!

By எஸ்.கோவிந்தராஜ்

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த வண்டிபாளையத்தைச் சேர்ந்தவர் ஆர்.ராஜகோபால் (73). வணிகவரித்துறையின் கூடுதல் ஆணையராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அரசுப் பள்ளியில் படித்து, சென்னையில் கல்லூரி வாழ்க்கையைக் கடந்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 1 தேர்வில் 1976-ல் வெற்றி பெற்று வணிகவரித்துறை அலுவலராக தனது பணியைத் தொடங்கிய ராஜகோபால், ஓய்வுக்காலத்தை தனது சொந்தக் கிராமமான வண்டிபாளையத்தில் தொடர ஊர் திரும்பியுள்ளார்.

இதையடுத்து, தனது கிராமத்தைச் சுற்றியுள்ள ஏழை மற்றும் விவசாய குடும்பங்களின் எதிர்காலத்தை வசந்தமாக்கும் வகையில், அவர்களின் குழந்தைகளை, போட்டித் தேர்வுகளுக்குத் தயார் படுத்தும் பணியைத் தொடங்கினார். இந்த இலவச சேவை ஐந்து ஆண்டுகளாகத் தொடர்கிறது.

‘சென்னையில் கல்லூரி மாணவனாக இருந்தபோது, தேவநேயப் பாவாணர் நூலகம் தான் எனக்கு விருப்பமான இடம். நாளிதழ்களில் தொடங்கி நாவல்கள் வரை தேடித் தேடி படிக்கும் ஆர்வம் அங்கு தொடங்கியது. இந்த வாசிப்பு பழக்கம் எனக்குள் பொது அறிவை வளர்த்தது. அது, டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் வெற்றி பெற வைத்தது, என தன் வாழ்க்கைப் பயணத்தை விவரித்தார் ராஜகோபால்.

ஓய்வு பெற்றபின், கிராமங்களைச் சேர்ந்த மாணவர்களை, யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயார்படுத்தி, அவர்களுக்கு அரசுப் பணி பெற்று தரவேண்டும் என்ற அவரது நோக்கம் நிறைவேற, இவரது குடும்பத்தினரும் முழு ஆதரவையும் தந்தனர்.

தொடக்கத்தில் சுற்றுவட்டாரங்களில் வசிக்கும் சில மாணவர்களுக்கு ஆலோசனை வழங்குவதில் ஆரம்பித்த இந்த பயணம், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 300-க்கும் மேற்பட்டோருக்கு பயிற்சி அளிக்கும் வகையில் வளர்ச்சி பெற்றது. தற்போது, இவர் உருவாக்கியுள்ள ‘டிஎன்பிஎஸ்சி வெற்றிப்பாதை’ என்ற வாட்ஸ் அப் குழுவில் (94440 29009), 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள், போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சிகளை இலவசமாக பெற்று வருகின்றனர்.

ஓய்வுபெற்ற வணிகவரித்துறை
கூடுதல் ஆணையர்
ஆர்.ராஜகோபால்.

இதுகுறித்து ராஜகோபால் கூறியதாவது: ஆரம்ப காலகட்டத்தில், போட்டித்தேர்வுகளுக்கு பயிற்சி அளிப்பது தொடர்பாக, என் நண்பர்கள், உறவினர்கள் மூலம் தகவலைப் பரப்பினேன். சுற்றுப்புற கிராமங்களில் வசிக்கும் பெற்றோர், தங்கள் குழந்தைகளை வீட்டுக்கு அழைத்து வந்தனர். அவர்களின் விருப்பம், கல்வித்தகுதிக்கு ஏற்ப எந்த போட்டித்தேர்வை எழுதலாம், அதற்கு எப்படி தயாராவது, எத்தகைய புத்தகங்களைப் படிப்பது என்ற விளக்கங்களைக் கொடுப்பதோடு, அது தொடர்பான புத்தகங்களையும் படிக்கக் கொடுத்தேன்.

மாணவர்களின் எண்ணிக்கை அதிகமான நிலையில் வாட்ஸ் அப் குழு தொடங்கி, அதில், தேர்வு தொடர்பான காணொலிக் காட்சிகள், பாடக்குறிப்புகளை அனுப்பினேன். மாணவர்களின் சந்தேகங்களுக்கு நான் மட்டுமல்லாது, துறைசார்ந்த வல்லுநர்கள் மூலமும் விளக்கம் அளித்தேன். சில நேரங்களில் துறை வல்லுநர்களை அழைத்து, எனது வீட்டிலேயே வகுப்புகளை எடுக்கிறேன். தற்போது ஜூம் செயலி மூலமும், புரஜெக்டர் மூலமும் இலவச வகுப்புகளை எடுக்க தொடங்கியுள்ளோம்.

ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி டி.என்.ராமநாதன், திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி சுரேஷ் உள்ளிட்ட பலர் இந்த பயிற்சிக்காக உதவிக்கரம் நீட்டினர். அரசு வேலைவாய்ப்புத்துறையில் பயிற்சி அளிக்கும் வல்லுநர்களையும் அழைத்து அவர்கள் மூலமும் பயிற்சி அளிக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இவரது பயிற்சி வகுப்புகளில் படித்த கிராமப்புற மாணவர்களில் பலர் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதி, பல்வேறு துறைகளில் பணியிடங்களைப் பெற்றுள்ளனர். இதோடு, வேளாண்மை, கட்டிடக்கலை போன்ற துறை சார்ந்த ஆர்வமுள்ள மாணவர்களுக்கு என வல்லுநர்கள் மூலம் பயிற்சியும் அளிக்கிறார். வண்டிபாளையம் கிராமத்தில் இருந்து 10 பேரை காவலர் பணிக்கு அனுப்பியுள்ளார் ராஜகோபால்.

சத்தியமங்கலத்தை அடுத்த வண்டிபாளையத்தில் நடந்த போட்டித் தேர்வு பயிற்சி
வகுப்பு தொடர்பான விழாவில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் பெற்றோரின் ஒரு பகுதியினர்.

‘நான் பட்டப்படிப்பு முடித்தபோது, ‘தி இந்து’ நாளிதழில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு குறித்து விளம்பரம் வந்திருந்தது. அதுவே என் வாழ்வின் உயரத்துக்கு காரணமாக அமைந்தது. இப்போது, ஆங்கில இந்துவுடன், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழை தவறாமல் படிப்பதுடன், மாணவர்களுக்கும் அவற்றை பரிந்துரைக்கிறேன்.

டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற, 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பாடப்புத்தகங்களையும், நாட்டு நடப்புகளைத் தெரிந்து கொள்ள நாளிதழ்களையும் கட்டாயம் படிக்க வேண்டும். அரசுப்பணி பெறுவதன் மூலம், நீங்கள் மட்டுமல்ல சமுதாயமும் மேன்மை அடையச் செய்ய முடியும் என்பதே மாணவர்களுக்கு நான் சொல்லும் அறிவுரை. இவ்வாறு ராஜகோபால் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

4 hours ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

2 days ago

கல்வி

3 days ago

கல்வி

4 days ago

கல்வி

4 days ago

கல்வி

4 days ago

கல்வி

5 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

கல்வி

8 days ago

மேலும்