அயனம்பாக்க மகளிர் விடுதியும், 2 ஆண்டுகளாக சயனத்தில் அரசு அதிகாரிகளும்!

By இரா.நாகராஜன்

பூந்தமல்லி: திருவேற்காடு அருகே அயனம்பாக்கத்தில் திறப்பு விழா கண்டு இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாகியும் ஆதிதிராவிடர் நலத்துறை கட்டிய பணிபுரியும் மகளிர் தங்கும் விடுதியை செயல்பாட்டுக்கு கொண்டு வராமல் அதிகாரிகள் காலம் தாழ்த்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அதிக கட்டணம் செலுத்தி தனியார் விடுதிகளில் பெண்கள் தங்கும் நிலைக்கு தொடர்ந்து தள்ளப்பட்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு நகராட்சி பகுதியை ஒட்டி சென்னை- அம்பத்தூர் தொழிற்பேட்டை அமைந்துள்ளது. சுமார் 1,300 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த தொழிற்பேட்டை, தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய தொழிற்பேட்டையாக விளங்குகிறது.

இதில், ஆட்டோ மொபைல் தொழிற்சாலைகள், ஆயத்த ஆடை உற்பத்திநிறுவனங்கள், இன்ஜினியரிங் தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் என சுமார் 1,600-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள், நிறுவனங்கள் உள்ளன.

இத்தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான மகளிர் பணிபுரிந்து வருகின்றனர். அதேபோல், திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட அயனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்களிலும் நூற்றுக்கணக்கான மகளிர் பணிபுரிகின்றனர்.

அவ்வாறு பணிபுரியும் மகளிரின் வசதிக்காக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், திருவேற்காடு அருகே அயனம்பாக்கத்தில் பணிபுரியும் மகளிருக்கான விடுதி அமைக்க கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாடு அரசு முடிவு செய்தது.

அதன்படி, அயனம்பாக்கத்தில் ரூ.1.10 கோடி மதிப்பில் 4 ஆயிரம் சதுரடி பரப்பளவில் 13 அறைகளுடன் 2 தளங்களைக் கொண்ட கட்டுமானப் பணி, கடந்த 2019-ம் ஆண்டு செப்.19-ம் தேதி தொடங்கப்பட்டது. இந்தப் பணிகள் 2020-ம் ஆண்டு இறுதியில் நிறைவு பெற்றன. இதையடுத்து, கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 28-ம் தேதி, அப்போதைய தமிழக முதல்வர் பழனிசாமி, தலைமை செயலகத்தில் இருந்தபடி, காணொலிக் காட்சி மூலம் இந்த மகளிர் தங்கும் விடுதியை திறந்து வைத்தார்.

அவ்வாறு திறப்பு விழா கண்டு இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாகியும், இந்த விடுதி இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. இதனால், அம்பத்தூர் தொழிற்பேட்டை உள்ளிட்டவற்றில் பணிபுரியும் பெண்கள் அம்பத்தூர், முகப்பேர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளில் அதிக கட்டணம் செலுத்தி தங்கி வருகின்றனர்.

சரவணசெல்வி

இதுகுறித்து, அனைந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தென்சென்னை மாவட்ட தலைவர் சரவணசெல்வி கூறியதாவது: சென்னைக்கு பணிக்காக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் இளம்பெண்கள் வருவது அதிகரித்து வருகிறது.

இதில், அம்பத்தூர் தொழிற்பேட்டைக்கு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வந்த பிறகு, அம்பத்தூர் பகுதிக்கு வரும் இளம்பெண்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால், அதனை சுற்றியுள்ள முகப்பேர், கலெக்டர் நகர், அண்ணாநகர் விரிவு, அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில், சிறு அளவிலான வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்குகின்றனர். இங்கு வாடகையை ரூ.5 ஆயிரத்துக்கு மேல் உள்ளது.

ஆகவே, சென்னையில் பெண்கள் தங்கி பாதுகாப்பாக பணிபுரிய ஏதுவாக, மகளிர் தங்கும் விடுதிகளின் எண்ணிக்கையை தமிழ்நாடு அரசு அதிகரிக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம்.

இந்நிலையில், ஏற்கெனவே கட்டி முடிக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கு மேலாகியும், அயனம்பாக்கம் ஆதிதிராவிடர் நல பணிபுரியும் மகளிர் தங்கும் விடுதியை பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் இருப்பது சரியல்ல. எனவே, பெண்களின் வசதிக்காக உடனடியாக இந்த விடுதியை செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். இவ்வாறு கூறினார்.

இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ’’ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், அயனம்பாக்கம், ஆதிதிராவிடர் நல பணிபுரியும் மகளிர் தங்கும் விடுதியை, தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்நடவடிக்கைகள் விரைவில் முடிவுக்கு வரும். அதன்பிறகு இந்த விடுதி செயல்பாட்டுக்கு வரும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

3 hours ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

1 day ago

கல்வி

2 days ago

கல்வி

3 days ago

கல்வி

4 days ago

கல்வி

4 days ago

கல்வி

4 days ago

கல்வி

5 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

கல்வி

6 days ago

கல்வி

8 days ago

மேலும்