பாரதியார் பல்கலைக்கூடத்தில் முதுகலை பட்டப்படிப்புக்கு அனுமதி

By செய்திப்பிரிவு

புதுச்சேரி: பாரதியார் பல்கலைக்கூடத்தில் முதுகலை பட்டப்படிப்புக்கு புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் அனுமதி அளித்துள்ளது.

புதுச்சேரியில் கடந்த 1987-ம்ஆண்டு தொடங்கப்பட்டது பாரதியார் பல்கலைக்கூடம். இக்கல்லூரியில் இளங்கலையில் இசை, நடனம் மற்றும் ஓவியம், சிற்பம் போன்ற நுண்கலைப் பாடப்பிரிவுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இங்கு இளங்கலை முடித்த மாணவர்கள் மேற்கொண்டு முதுகலைப் பயில ஏதுவான சூழல் இல்லாததால் வெளிமாநிலங்களுக்குச் சென்று பயில வேண்டிய நிலை இருந்தது.

மாணவர்களின் சிரமத்தைக் களையும் வகையில் இக்கல்லூரியிலேயே முதுகலைப் படிப்பும் தொடங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து பாரதியார் பல்கலைக்கூடத்தில் இந்தாண்டே முதுகலை படிப்பைக் கொண்டு வர ஆவண செய்யுமாறு கலை பண்பாட்டுத்துறை செயலருக்கு முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டார்.

அதையடுத்து கலை பண்பாட்டுத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா அறிவுறுத்தல் படி துறைச்செயலர் நெடுஞ்செழியன் நடவடிக்கை மேற்கொண்டார். தற்போது நடப்பு கல்வியாண்டு முதுகலைப் படிப்புகளை தொடங்க புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, முதுகலையில் எம்பிஏ இசை (MPA, Music), எம்பிஏ நாட்டியம் (MPA, Dance) மற்றும் எம்எஃப்ஏ நுண்கலை (MFA, Fine Arts) ஆகிய ஒவ்வொரு பாடப்பிரிவிலும் தலா 20 இடங்களில் மாணவர்கள் சேர்ந்து பயிலலாம்.

இதன் மூலம் இங்கு ஏற்கெனவே படித்து முடித்த மாணவர்களும், தற்போதுஇளங்கலை முடித்த மாணவர்களும் சேர்ந்து பயனடைய முடியும்.இதுமட்டுமின்றி, பிஎஃப்ஏ நுண்கலை (BFA, Fine Arts) பாடப்பிரிவில் ஏற்கெனவே இருந்த வந்தமாணவர் சேர்க்கை இடங்கள் 30-லிருந்து 40-ஆக உயர்த்திக் கொள்ளவும் புதுவை பல் கலைக்கழகம் அனுமதி வழங்கியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE