கோவை: முதல்முறையாக வாக்களிக்கும் அனுபவம் அனைவருக்குமே அலாதியானது. அந்த அனுபவத்தை பள்ளி அளவிலேயே மாணவர்களுக்கு அளிக்கும் முயற்சியாக கோவையில் 2 அரசு பள்ளிகளில் நாடாளுமன்ற தேர்தல்நடந்து முடிந்துள்ளது.
கோவை வாகராயம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை 1,220 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், தேர்தல் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மாணவ பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்து அவர்களின் தலைமைப் பண்பை வளர்க்கும் விதத்திலும், மாணவர் நாடாளுமன்ற தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. பிரதமர் மற்றும் 6 அமைச்சர் பதவிகளுக்கு மாணவர்கள் போட்டியிட்டனர். மொத்தம் 1,110 பேர் வாக்களித்தனர். உடனடியாக முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதுதொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆர்.செந்தில்குமார் கூறியதாவது: எப்படி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறதோ அதேபோன்று மாணவர் தேர்தல் நடைபெற்றது. போட்டியிடும் வேட்பாளர்கள், யார், யார் என்னென்ன பொறுப்புகளுக்கு போட்டியிடுகிறோம் என பிரச்சாரம் செய்தனர்.தேர்தல் நடைமுறைகள் மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. வாக்குப்பதிவு மையத்தில் பெயர் விவரங்கள்சரிபார்க்கப்பட்டு, மை வைக்கப்பட்டது.
மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குச் சீட்டில் பெயர், வகுப்பு, சின்னம், யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்பதை தெரிவிக்கும் நோட்டா ஆகியவை இடம்பெற்றிருந்தன. இதில், தங்களுக்கு பிடித்த வேட்பாளர்களை ‘டிக்’ செய்து மாணவர்கள் தங்கள் வாக்குகளை வாக்குப் பெட்டியில் செலுத்தினர்.
» “வன்னியர் இடஒதுக்கீட்டு போராட்ட தியாகிகளை நினைவுகூர்வோம்” - ராமதாஸ்
» ஏழைகளின் ரதம் 3-ஏ அரசு பேருந்து... வேலூரில் மீண்டும் இயக்கப்படுமா?
வாக்கு எண்ணிக்கை முடிவில், பிரதமராக (மாணவர் தலைவர்) 9-ம் வகுப்பு மாணவர் கே.என்.அஸ்வின், சுகாதார அமைச்சராக 9-ம் வகுப்பு மாணவி சி.தேவதர்ஷினி, கலை மற்றும் கலாச்சார அமைச்சராக9-ம் வகுப்பு மாணவி பி.நாதஸ்ரீ, சுற்றுச்சூழல் துறை அமைச்சராக 8-ம் வகுப்பு மாணவர் ஏ.காண்டீபன், விளையாட்டுத்துறை அமைச்சராக 9-ம் வகுப்பு மாணவன் யு.சிரஞ்சீவி, கல்வித்துறை அமைச்சராக 7-ம் வகுப்பு மாணவர் ஏ.விஷ்ணு, மாணவர்கள் நலத்துறை அமைச்சராக 9-ம் வகுப்பு மாணவர் எஸ்.அஸ்வின் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
பின்னர், தேர்வு செய்யப்பட்ட மாணவப் பிரதிநிதிகள் தங்கள் பள்ளிக்கான குடியரசு தலைவரை தேர்ந்தெடுத்தனர். இதில், குடியரசு தலைவராக 9-ம் வகுப்பு மாணவி பி.சர்மிளா தேர்வு செய்யப்பட்டார். இவ்வாறு அவர் கூறினார்.
கோவை கணபதி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை 1,026 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.இங்கு, மாணவ பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான மாணவர் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. அதற்கு முன்பு தேர்தல் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பிறகு தேர்தலில் போட்டியிட ஆர்வம் உள்ள மாணவர்கள் தங்களது வேட்புமனுவை மாணவர்களை கொண்டு அமைக்கப்பட்ட தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்தனர். வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
அப்பட்டியலின்படி வேட்பாளர்கள் தங்களுக்கான வாக்குகளை கேட்டு பள்ளி வளாகத்தினுள் தங்கள் சக மாணவர்களிடம் பிரச்சாரம் செய்தனர். அதைத்தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 990 மாணவர்கள் ஆர்வத்துடன் வரிசையில் காத்திருந்து வாக்குகளை செலுத்தினர்.
இதுதொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியை சு.மணிமாலா கூறும்போது, “வாக்கு எண்ணிக்கை முடிவில், பிரதமராக (மாணவர் தலைவர்) 9-ம் வகுப்பு மாணவி சஹானா ஆஸ்மி, சுகாதார துறை அமைச்சராக 8-ம் வகுப்பு மாணவர் கே.சக்தி, கலை மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சராக 7-ம் வகுப்புமாணவர் ஜி.சாய் சரண், சுற்றுச்சூழல்துறை அமைச்சராக 7-ம் வகுப்பு மாணவர் கே.மவிஷ், விளையாட்டுத்துறை அமைச்சராக 9-ம் வகுப்பு மாணவர் டி.தினேஷ்குமார், கல்வித்துறை அமைச்சராக 8-ம் வகுப்பு மாணவர் ஆர்.ஆகாஷ், மாணவர்கள் நலத்துறை அமைச்சராக 9-ம் வகுப்பு மாணவி சாதனாஸ்ரீ ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
பின்னர், தேர்வு செய்யப்பட்ட மாணவப் பிரதிநிதிகள் தங்கள் பள்ளிக்கான குடியரசு தலைவரை தேர்ந்தெடுத்தனர். அதில், குடியரசு தலைவராக 9-ம் வகுப்பு மாணவி எஸ்.ருத்ரபிரியாமணி தேர்வு செய்யப்பட்டார்”என்றார். அறம் அறக்கட்டளை, கரூர் வைசியா வங்கியின் ‘எனது கனவு பள்ளி’ திட்டத்தின் உதவியுடன் இந்த தேர்தல் நடைபெற்றது.
அமைச்சர்களின் பொறுப்புகள் என்ன? - கலை மற்றும் கலாச்சார அமைச்சராக செயல்படுபவர், கலை நிகழ்ச்சிகளில் மாணவர்களை பங்கேற்க செய்வது, அவர்களுக்கு பயிற்சி அளிப்பது, பள்ளியில் நடைபெறும் கலை நிகழ்வுகளை ஒருங்கிணைப்பது ஆகிய பணிகளில் ஈடுபடுவார். பள்ளி வளாகத்தில் செடிகள், மரக்கன்றுகளை நடுவது, பராமரிப்பது, குப்பையை அகற்றுவது, வளாக தூய்மை ஆகியவை சுற்றுச்சூழல் துறை அமைச்சரின் பொறுப்புகளாகும்.
மாணவர்களின் சுகாதாரம் மற்றும் பள்ளிக்கு உணவு உட்கொள்ளாமல் வரும் மாணவர்களை கண்டறிந்து அவர்களை சத்துணவு உட்கொள்ள வைத்தல் உள்ளிட்ட பணிகளை சுகாதாரத்துறை அமைச்சர் மேற்கொள்வார்.
பள்ளியில் நடைபெறும் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வுகளை ஒருங்கிணைப்பது, வழிபாட்டு கூட்டம், இதர நிகழ்வுகளில் மாணவர்களின் ஒழுக்கத்தை கண்காணிப்பது உள்ளிட்ட பணிகளில் மாணவர்கள் நலத்துறை அமைச்சர் ஈடுபடுவார். கல்வித்துறை அமைச்சர் ஒவ்வொரு வகுப்பிலும் கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு ஆதரவாக இருப்பது, அவர்களை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்ற பணிகளில் ஈடுபடுவார்.
விளையாட்டு மைதான தூய்மை, உபகரணங்கள் பராமரிப்பு, பள்ளி விளையாட்டு விழாக்கள் ஒருங்கிணைப்பு ஆகிய பணிகளை விளையாட்டுத்துறை அமைச்சர் மேற்கொள்வார். பிரதமர், குடியரசு தலைவர் ஆகியோர் அமைச்சர்களின் முடிவுகள் சரியாக உள்ளதா என்பதைக் கண்காணிப்பது, அமைச்சர்களுடன் கூட்டங்கள் நடத்தி வழிகாட்டுதல்களை வழங்குவது என ஒட்டுமொத்த முடிவுகளை ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுடன் இணைந்து மேற்கொள்வார்கள்.
முக்கிய செய்திகள்
கல்வி
3 days ago
கல்வி
2 days ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
4 days ago
கல்வி
4 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
6 days ago
கல்வி
8 days ago
கல்வி
9 days ago
கல்வி
9 days ago
கல்வி
9 days ago
கல்வி
10 days ago