ராணிப்பேட்டை அரசு பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அடிப்படை திறன் வளர்ப்பு சிறப்பு பயிற்சி

By செய்திப்பிரிவு

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அடிப்படை கல்வி அறிவை பெறுவதற்காக ‘அடிப்படை திறன் வளர்ப்பு’ மூலமாக சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

ராணிப்பேட்டை மாவட்டம் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ,மாணவிகளின் கற்றல் திறனை மேம்படுத்தவும், அவர்களின் தனித்திறமைகளை பல்வேறு போட்டிகள் மூலமாக வளர்க்கும் முனைப்புடன் மாவட்ட கல்வி நிர்வாகம் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும், பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கவும், 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அடிப்படை கல்வியை முறையாக வழங்க வேண்டுமென நோக்கில் ‘இல்லம் தேடி கல்வி’ உட்பட பல்வேறு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே, அரசுப் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களில் பலரும் அடிப்படை கல்வியில் சில குறைபாடுகள் உள்ளது என கண்டறியப்பட்டது. இதனை சரிசெய்யும் முயற்சியிலும் மாவட்டக் கல்வி துறை தற்போது செயல்பட்டு வருகிறது.

ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள 6 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் அடிப்படை கல்வி திறன்களில் குறைபாடு உள்ளவர்களை கண்டறியப்பட்டு, அவர்களுக்கு என 3 மாதம் காலம் பயிற்சி கடந்த ஜூன் மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சி மேற்கொண்டு வரும் மாணவர்களில் 30 சதவீதம் பேர் தற்போது அடிப்படை கல்வி திறனில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதன் மூலமாக மாணவர்களுக்கு அடுத்தடுத்த வகுப்புகள் செல்லும்போது, அடிப்படை கல்வியில் எந்த குறைபாடுகளும் இருக்காது. மேலும், உயர்கல்வியும் அவர்களுக்கு எளிமையாக இருக்கும் என கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா கூறும்போது, "அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவர்களின் கல்வி திறனை வளர்க்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மதிப்பெண்களுக்காக மட்டுமில்லாமல், அவர்களின் அடிப்படை கல்வியை ஆழமாக கற்க வேண்டுமென நோக்கிலும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இல்லம் தேடி கல்வி உட்பட பல்வேறு திட்டங்களில் அடிப்படை கல்வி வழங்கப்படுகிறது.

அந்த வகையில், 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களில், 16 ஆயிரத்து 300 மாணவர்கள் அடிப்படை கல்வி திறன்களில் பின்தங்கி உள்ளது கண்டறியப்பட்டது. இவர்களுக்கு, தினசரி காலை முதல் மாலை வரை பள்ளிகளில் கடன் ஜூன் மாதம் முதல் அடிப்படை திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகியவற்றில் மாணவர்களின் அடிப்படை திறன்களை வளர்க்க அந்தந்த பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மூலமாக பயிற்சி அளித்து வருகின்றனர்.

உதாரணமாக, தமிழ் என்றால் அவர்களுக்கு உயிர், மெய் எழுத்து, உயிர்மெய் எழுத்துக்கள் அடிப்படை அறிந்து சரளமாக படிக்கவும், எழுதவும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அதேபோன்று, ஆங்கிலம், கணிதத்திலும் அடிப்படைகளை தெரிந்துக்கொள்வதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்த பயிற்சி அளிக்கப்படும் மாணவர்களில் கடந்த ஜூலை மாதம் நிலவரப்படி, 30 சதவீதம் மாணவர்கள் அடிப்படை கல்வி அறிவை பெற்று, மீண்டும் தங்களின் வகுப்புகளின் அன்றாட பாடங்களை படிக்க தொடங்கியுள்ளனர். இந்த முயற்சியின் மூலமாக மாணவர்களின் அடிப்படை கல்வி திறன் மேம்பட்டு வருகிறது.

அதன்படி, ஒவ்வொரு பாடத்திலும் மாணவர்களின் திறன் எந்தளவுக்கு மேம்பட்டு வருகிறது என்ற தகவல்களை சேகரிக்கவும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. பாடப்புத்தகங்களை திரும்ப, திரும்ப மாணவர்களை படிக்க வைக்காமல், நாளிதழ்கள், புத்தகங்களை படிக்க வைத்தும், ஆங்கிலம் வார்த்தைகளை ஒலி மூலமாக (பொனிட்டிக்) கற்கவும், கணிதத்தின் அடிப்படைகளை தெளிவாக புரிந்துக்கொண்டு கணக்குகளை மேற்கொள்ளவும் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

வரும் காலாண்டு தேர்வு வரை இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன்பிறகு கற்றல் பின் தங்கும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படும். இந்த மாணவர்கள் அடிப்படை கல்வியில் திறன் இல்லை என்ற நிலைப்பாடு இ்ல்லாமல், மேல்வகுப்புகள் செல்ல வேண்டுமென சிறந்த நோக்கில் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE