ஓசூர் மாநகராட்சி பள்ளி வளாகத்தில் குப்பை கிடங்கு: துர்நாற்றத்துடன் கல்வியறிவுக்கு போராடும் சிறார்கள்

By கி.ஜெயகாந்தன்

ஓசூர்: ஓசூர் மாநகராட்சி தொடக்கப் பள்ளி வளாகத்தில் உள்ள குப்பை கிடங்கால், துர்நாற்றத்துக்கு இடையில் சிறுவர்கள் கல்வி பயிலும் அவலம் ஏற்பட்டுள்ளது.

ஓசூர் மாநகராட்சி 6-வது வார்டுக்கு உட்பட்ட சின்ன எலசகிரி பகுதியில் ஆனந்த் நகர், பாலாஜிநகர், கேசிசி நகர், கிருஷ்ணா நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள குழந்தைகள் 259 பேர் ஆனந்த் நகரில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர்.

இப்பள்ளி வளாகத்தில் மாநகராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை குப்பைக் கிடங்கு உள்ளது. இதனால், பள்ளி வகுப்பறையில் எந்த நேரமும் துர்நாற்றம் வீசி வருவதால், மாணவர்களுக்கு கவனச் சிதறல் ஏற்பட்டு, பாடத்தில் கவனம் செலுத்த முடியாத நிலையுள்ளது.

இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் கூறியதாவது: குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் உள்ள பள்ளி வளாகத்தில் மாநகராட்சியின் குப்பைக் கிடங்கு உள்ளது. இங்கு மாநகராட்சி பகுதியில் உள்ள ஓட்டல்கள், வீடுகளிலிருந்து சேகரிக்கப்படும் அழுகிய பொருட்கள் மற்றும் கெட்டுப்போன உணவுகளைக் கொட்டுவதால், கடுமையான துர்நாற்றம் வீசுகிறது.

குப்பைக் கிடங்கிலிருந்து வெளியேறும் துர்நாற்றத்தை தடுக்க பள்ளி வகுப்பறை ஜன்னல்களை மூடி வைத்துள்ளனர். அதையும் மீறி வரும் துர்நாற்றத்தால் மூக்கை பிடித்தபடி கல்வி பயிலும் சிறார்கள்.

இதற்குக் கடந்தாண்டு எதிர்ப்பு கிளம்பியதால், இங்கு குப்பைக் கொட்டுவதை தற்காலிகமாக நிறுத்தியிருந்த நிலையில், கடந்த 4 மாதங்களாக மீண்டும் குப்பைக் கழிவை கொட்டி வருகின்றனர். குப்பைக் கிடங்குக்கும், பள்ளி வகுப்பறைகளுக்கும் இடையில் ஒரே ஒரு தடுப்புச் சுவர் தான் உள்ளது. சில குழந்தைகளுக்கு அவ்வப்போது வாந்தி, தலை சுற்றல், தலை வலி உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.

பல பெற்றோர் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பத் தயக்கம் காட்டி வருகின்றனர். தொலை நோக்கு பார்வையில் லாமல் தொடங்கப் பட்ட குப்பைக் கிடங்கை மாணவர்களின் நலன் கருதி வேறு இடத்துக்கு மாற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது பள்ளியை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இது தொடர்பாக ஆசிரியர்கள் கூறியதாவது: குப்பைக் கிடங்கு அருகே 3 மற்றும் 5-ம் வகுப்புகளின் வகுப்பறைகள் உள்ளன. வகுப்பறையில் பாடம் நடத்த முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. மாணவர்கள் மூக்கை பிடித்துக்கொண்டு வகுப்பறையில் அமர்ந்துள்ளனர். மதிய வேளையில் சாப்பிட முடியாத அளவுக்கு குமட்டல் ஏற்படுகிறது.

பள்ளி நேரங்களில் வகுப்பறை ஜன்னல்களை மூடி வைத்தாலும், காற்று வீசும் போது அதிக துர்நாற்றம் வீசுகிறது. ஈக்கள் அதிகம் உற்பத்தியாகி உள்ளது. குப்பைக் கிடங்கில் கிருமி நாசினியும் தெளிப்பதில்லை. இதனால், தொற்று நோய்ப் பாதிப்பு அபாயம் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE