அகில இந்திய தொழில் தேர்வுக்கான முதல்நிலை தேர்வு: கிண்டி ஐடிஐ-யில் அக்.10-ல் நடக்கிறது

By செய்திப்பிரிவு

சென்னை: அகில இந்திய தொழில் தேர்வுக்கான முதல் நிலைத் தேர்வு வரும் அக்.10-ம்தேதி கிண்டி தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறவுள்ளது. தகுதியுள்ளவர்கள் தனித்தேர்வராக விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின்கீழ் தேசிய தொழில் பயிற்சி குழுமத்தால் அகில இந்திய தொழில் தேர்வானது அடுத்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெறவுள்ளது.

இத்தேர்வில் தனித் தேர்வர்களாக கலந்துகொள்ள தேசிய தொழில் சான்றிதழ், திறன்மிகு தேசிய தொழில் சான்றிதழ் பெற்றவர்கள், ஆகஸ்ட் 2018 வரை சேர்க்கை செய்யப்பட்ட மாநில தொழில் பயிற்சி குழும தொழில் பிரிவில் தொழிற்பயிற்சி நிலையசான்றிதழ் பெற்றவர்கள் உள்ளிட்டோர் விண்ணப்பிக்கலாம்.

அதேபோல 21 வயது பூர்த்தி அடைந்து, தொழிற்பிரிவு தொடர்பான பணியில் 3 ஆண்டு முன் அனுபவம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். தகுதியுடைய விண்ணப்பதாரர்களுக்கு கருத்தியல் பாடத்தில் முதனிலைத் தேர்வுகள்வரும் அக்.10-ம் தேதியும், செய்முறைத்தேர்வு அக்.11-ம் தேதியும் கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) நடத்தப்படும். கருத்தியல்தேர்வில் வெற்றி பெற்றவர்கள்மட்டுமே செய்முறைத் தேர்வில் கலந்துகொள்ள இயலும்.

இவற்றில் தேர்ச்சி பெறுபவர்கள் ஜூலை 2024-ல் நடைபெறவுள்ள அகிலஇந்திய தொழில் தேர்வில் தனித்தேர்வராகக் கலந்து கொள்ளலாம். எனவே தனித்தேர்வராக விண்ணப்பிக்கும் நபர்கள் விண்ணப்பப் படிவம், முழு விவரங்கள் அடங்கிய விளக்கக் குறிப்பேடு உள்ளிட்டவற்றை www.skilltraining.tn.gov.in என்ற இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, தேர்வு கட்டணத்துடன் சான்றிதழ்களையும் இணைத்துசெப்.18-ம் தேதிக்குள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்களிடம் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE