முதல் ஊக்கத்தொகை ரூ.30,000-ஐ மாணவர்களின் கல்வி செலவுக்கு வழங்கிய கும்பகோணம் மேயர்!

By சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணம்: கும்பகோணம் மாநகராட்சி பழைய அலுவலகத்தில் மாமன்ற உறுப்பினர்களுக்கான சாதாரண கூட்டம் நடைபெற்றது. மேயர்.க.சரவணன் தலைமை வகித்தார். துணை மேயர் சு.ப.தமிழழகன், ஆணையர் ஆர்.லட்சுமணன் முன்னிலை வகித்தனர்.

இதில் பேசிய மாமன்ற உறுப்பினர்கள், கும்பகோணம் முழுவதும் உள்ள புதை வட சாக்கடையிலிருந்து கழிவுநீர் வெளியேறி சாலைகளில் ஆறாக ஒடுகிறது. சில வார்டுகளிலுள்ள வீடுகளுக்குள் கழிவு உள்ளே புகுந்து விடுவதால், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் ஏற்படுவதுடன், தொற்று நோய் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதே போல் பெரும்பாலான மின் கம்பத்திலுள்ள விளக்குகள் பிரகாசமாக எரியாமல் உள்ளது. இது தொடர்பாக அந்த ஒப்பந்தக்கார ஊழியரிடம் கேட்ட போது, மின் கம்பத்தில் ஏறி விளக்குகளை மாற்றுவதற்கான இயந்திரங்கள் இல்லை எனப் பதில் கூறுகின்றனர்.

இது போன்ற நிலை மாநகராட்சி முழுவதும் இருப்பதால், அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். மாமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளாக இதே நிலையில் தான் கும்பகோணம் மாநகராட்சி செயல்படுகிறது.

மாநகராட்சி பிரதான சாலைகளில் திரியும் மாடுகளைப் பிடிக்க வேண்டும், தெருக்களில் தேங்கியிருக்கும் குப்பைகளை அகற்றவும், வார்டு தோறும் 2 மினி டோர், 2 பேட்டரி வாகனங்கள் மற்றும் 2 மூன்று சக்கர சைக்கிளை வழங்க வேண்டும்.

புதை வட சாக்கடை குழாயில் இணைப்பில்லாதவர்களுக்கும் கேட்புத் தொகை வழங்க வேண்டும் உள்ள தீர்மானத்தை ஒத்தி வைக்க வேண்டும். அவர்களுக்கு இணைப்பு வழங்கி விட்டு, தொகையை வசூலிக்க வேண்டும், அதன் பிறகு அந்த தீர்மானத்தையும் நிறைவேற்ற வேண்டும்.

இதே போல் வார்டுகள் தோறும் மாநகராட்சி அதிகாரிகள் பார்வையிட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வீடுகள், வணிக நிறுவனங்களுக்கு கூடுதலாக உயர்த்தப்பட்ட வரியைச் செலுத்த வேண்டும் என்பதை மறுபரீசிலனை செய்து, அந்த வரியை குறைக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.

முன்னதாக ஐயூஎம்எல் உறுப்பினர் எஸ்.பெனாசீர் நிஹார் கூறியது, ராமர் கோயிலுக்குப் புனித நீர் சென்ற நிகழ்ச்சியில் மேயர் பங்கேற்றது கூட்டணிக் கட்சிகளுக்கிடையே தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

துணை மேயர் சு.ப.தமிழழகன் கூறியது, மேயராகிய உங்களைத் தேர்ந்தெடுத்தது உறுப்பினர்களாகிய நாங்கள் தான். நீங்கள் பங்கேற்ற நிகழ்ச்சியால், எங்களைப் போன்ற உணர்வுள்ள கூட்டணிக் கட்சி உறுப்பினர்களிடைய பாதிப்பு ஏற்படுத்தியது.

நாம் இருக்கும் கட்சியின் கொள்கையின் அடிப்படையில் தான் செயல்பட வேண்டுமே தவிர முரண்பாடாக செயல்படக்கூடாது என்றார்.

காங்கிரஸ் உறுப்பினர் அய்யப்பன் கூறியது, நான் மாமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் மேயருக்கு எதிராக பேசியதாகத் தெரிவித்துள்ளீர்கள், நான் என்ன பேசினேன் என்பதை விளக்கமளிக்க வேண்டும் என்றார்.

மேயர் க.சரவணன் கூறியது, இனி வரும் காலங்களில் நிச்சயம் கொள்கையின் அடிப்படையில் பங்கேற்கிறேன். காங்கிரஸ் உறுப்பினர் அய்யப்பன், கூட்டணி கட்சிக்கு எதிராகப் பேசி வருகிறார். உள்கட்சி பூசல் பிரச்சனையை இங்கு கொண்டு வரவேண்டாம். உங்களது செயல்பாடுகளைப் பற்றி காங்கிரஸ் கட்சியின் மேலிடத்திற்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. உங்கள் மீது கட்சி ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தொடர்ந்து, மாநகராட்சி மேயருக்கான முதன் முதலாக பெறும் ஊக்கத்தொகையை, மாநகராட்சி பள்ளிகளிலுள்ள மாணவர்களின் கல்வி செலவுக்கு, நமக்கு நாமே திட்டத்திற்கு, ஆணையர் ஆர்.லட்சுமணனிடம் ரூ. 30 ஆயிரத்திற்கான காசோலையை மேயர் க.சரவணன் வழங்கினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE