“எனது உழைப்புக்கு அங்கீகாரம்” - தேசிய நல்லாசிரியர் விருது பெறும் மாலதி உத்வேகப் பகிர்வு

By செய்திப்பிரிவு

தென்காசி: குடியரசு முன்னாள் தலைவர் டாக்டர் ராதா கிருஷ்ணன் பிறந்தநாளான செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் சிறந்த ஆசிரியர்களுக்கு மத்திய அரசு சார்பில் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் மாலதி உட்பட தமிழகத்தைச் சேர்ந்த 2 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு ள்ளனர்.

விருதுக்கு தேர்வானது குறித்து ஆசிரியர் மாலதி கூறியதாவது: பள்ளியில் ரோபோட்டிக் வகுப்பு மற்றும் வில்லுப்பாட்டு கற்றுக் கொடுத்து வருகிறேன். எங்கள் பள்ளியைச் சேர்ந்த 4 மாணவ, மாணவிகள் உலக சாதனை படைக்க உறுதுணையாக இருந்தேன். தனிப்பட்ட முறையில் 4 உலக சாதனைகள் படைத்துள்ளேன்.

தமிழகத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் 600 நாட்களுக்கு மேலாக ஆன்லைன் வகுப்பு நடத்தி உள்ளேன். அறிவியல் பாடத்தை ஆர்வமாக மாணவர்கள் கற்கும் வகையில் வகுப்புகளை நடத்தி வருகிறேன். இதனால் மாணவர்கள் ஆர்வத்துடன் அறிவியல் வகுப்பில் பங்கேற்கின்றனர். இதுவரை 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அறிவியல் பாடத்தில் எங்கள் பள்ளி மாணவ, மாணவிகள் நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ரோபோட்டிக் வகுப்புக்கான உபகரணங்களை எனது சொந்த செலவில் செய்தேன். அரசு பள்ளி மற்றும் நூலகத்துக்கு புத்தகங்களை வழங்கி உள்ளேன். போட்டித் தேர்வுக்கான புத்தகம் எழுதியுள்ளேன். ரூ.1 லட்சம் மதிப்பிலான அந்த புத்தகத்தை தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இலவசமாக வழங்கியுள்ளேன்.

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு ஜூலை மாதம் விண்ணப்பித்து இருந்தேன். மாநில அளவில் தேர்வு பெற்று, தேசிய அளவில் தேர்வு செய்யப் பட்டுள்ள தகவல் கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது உழைப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்காக இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும் என்ற உத்வேகத்தை அளித்துள்ளது என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE