காலை உணவு திட்டத்துக்கு முன்னோடியாக சிறந்து விளங்கிய வெள்ளகோவில் அரசுப் பள்ளி!

By இரா.கார்த்திகேயன்

திருப்பூர்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆளும் திமுக அரசு ஓராண்டு நிறைவையொட்டி வெளியிட்ட அறிவிப்பில், மிக முக்கியமானது அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம். முதல்கட்டமாக 1,545 தொடக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, இன்று (ஆக.25) 31 ஆயிரத்து 8 அரசுப் பள்ளிகளில் பயிலும் 15 லட்சத்து 75,000 மாணவர்கள் பயன்பெறும் வகையில், முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆனால், அரசுக்கு முன்னோடியாக திருப்பூர் மாவட்டம் வெள்ள கோவில் அருகே சிலம்பக் கவுண்டன் வலசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், 2021 ஜூலை 15-ம் தேதி காமராஜர் பிறந்த நாளில் இத்திட்டம் தொடங்கப்பட்டு நேற்று வரை தொடர்ந்து மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டு வந்தது.

இது தொடர்பாக தன்னார்வலர்கள் கூறும்போது, ‘‘குழந்தைகள் காலையில் சாப்பிடாமல் பள்ளிக்கு வந்தமர்ந்து, பாடங்களை கவனிக்க முடியாமல் இருப்பதை கண்கூடாக பார்த்தோம். பாடம், விளையாட்டு உள்ளிட்டவற்றில் போதிய விருப்பமின்றி இருப்பதைக் கண்டறிந்து, அரசுப் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை இந்தியாவுக்கே அறிமுகப்படுத்திய காமராஜர் பிறந்த நாளில் காலை உணவுத் திட்டத்தை தொடங்க வேண்டுமென விரும்பி, கடந்த 2021-ம் ஆண்டு காலை உணவுத் திட்டத்தை தொடங்கினோம்.

திட்டத்தின் நிறைவு நாளான நேற்று வழங்கப்பட்ட காலை உணவு

இது பெற்றோர் மத்தியிலும், சக அரசுப் பள்ளிகளின் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. பள்ளி குழந்தைகளுக்கு இட்லி, சப்பாத்தி, தோசை, பூரி, காளான் கிரேவி, குருமா உள்ளிட்டவை சுழற்சி அடிப்படையில் வழங்கப்பட்டது. இப்பள்ளியில் படித்து, உயர் கல்விக்காக ஓலப்பாளையம் உயர்நிலைப் பள்ளிக்கு சென்று வரும் ஏழை குழந்தைகளும், இங்கு வந்து சாப்பிட்டுவிட்டு சென்று பயன்பெற்றனர்.

பள்ளி தலைமை ஆசிரியர் கோ.பிரபாகர் கூறும்போது, “கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் பள்ளியில் சேர்ந்தபோது, மாணவர்களின் எண்ணிக்கை 6-ஆக இருந்தது. தொடர்ந்து 20 பேருக்குள் மட்டுமே இருந்தது. இந்நிலையில், எங்கள் பள்ளியில் மதிய உணவுத் திட்டத்துக்காக வழங்கப்படும் சிலிண்டர் கிடைக்கவில்லை. பள்ளி குழந்தைகள் தொடர்ந்து பசியின்றி இயங்க வேண்டும் என்ற வேட்கையோடு, மிகவும் சிரமப்பட்டு ஊரில் உள்ளதன்னார்வலர்கள் உதவியுடன் ரூ.35 ஆயிரம் மதிப்பிலான சமையல் பாத்திரங்கள் வாங்கப்பட்டன.

தன்னார்வலர்கள் மற்றும் ஊர் மக்களின் முழு ஒத்துழைப்பும் தான் காலை உணவுத் திட்டம் வெற்றி பெற முக்கியக் காரணம். இத்திட்டத்துக்காக யாரிடமும் பணம் பெறவில்லை. ஒரு மாதத்துக்கான வேலை நாட்களின் எண்ணிக்கைக்கேற்ப, தன்னார்வலர்களிடம் சமையல் பொருட்களை பெற்றோம்.

கரோனாவுக்கு பின்னர், பள்ளிகள் மறு திறப்புக்கு பிறகு கடந்த நவம்பர் 11-ம் தேதி தொடங்கி, நேற்று வரை தொடர்ந்து காலை உணவை அனைத்து வேலை நாட்களிலும் வழங்கினோம். 32 மாணவர்கள் சாப்பிட்டு வந்தனர். ஒருவரும் சாப்பிட வழியின்றி பள்ளிக்கு வரக்கூடாது என்பதற்காக தொடர்ந்து தொய்வின்றி நடத்தினோம்.

பள்ளி மேலாண்மைக் குழுவும், பெற்றோரும் ஒத்துழைப்பு அளித்ததால், காலை உணவுத் திட்டம் சிறப்பாக நடைபெற்றது. இரண்டே கால் ஆண்டுகளாக நடந்து வந்த திட்டம், தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இன்று (ஆக.25) இத்திட்டத்தை அரசு தொடங்குவது எங்களுக்கு மகிழ்ச்சிதான்.

இத்தனை நாட்கள் காலையில் குழந்தைகளின் பசியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறோம். தமிழ்நாடு அரசு அறிவிக்கும் முன்பே, எங்கள் திட்டத்தை பல்வேறு தரப்பினர் கேட்டுச்சென்று அமல்படுத்த முயன்றனர். தன்னார்வலர்களின் தயவால் பள்ளி வேலை நாட்களில் ஒரு நாள் கூட தொய்வின்றி, காலை உணவுத் திட்டத்தை அமல்படுத்தி பசியாற்றியது எங்களுக்கு பெருமைதான்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE