பொறியியல் படிப்பு கலந்தாய்வு - இதுவரை 56,837 இடங்கள் நிரம்பின

By செய்திப்பிரிவு

சென்னை: பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வில் இதுவரை 56,837 இடங்கள் நிரம்பியுள்ளன.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் 442 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் 1.57 லட்சம் இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான கலந்தாய்வு இணைய வழியில் கடந்த ஜூலை 22-ம் தேதி தொடங்கியது. முதல்கட்டமாக மாற்றுத் திறனாளிகள் உட்பட சிறப்புப் பிரிவுக்கான கலந்தாய்வு ஜூலை 22 முதல் 26-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் 775 இடங்கள் நிரம்பின.

இதையடுத்து பொதுப் பிரிவுக்கான முதல் சுற்று கலந்தாய்வு ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 6-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இதன் முடிவில் 16,096 இடங்கள் நிரம்பின.

இதைத் தொடர்ந்து 2-வது சுற்றுக் கலந்தாய்வு ஆகஸ்ட் 9-ல் தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது. இதில் 40,741 இடங்கள் நிரப்பப்பட்டன. அதில் 5,267 இடங்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் வழங்கப்பட்டது. அந்த வகையில் முதல் 2 சுற்றுகளின் முடிவில் மொத்தம் 56,837 இடங்கள் நிரம்பியுள்ளன.

தொடர்ந்து 3-வது சுற்று கலந்தாய்வு நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்க 89,694 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த பொதுப்பிரிவு கலந்தாய்வு செப். 3-ம் தேதியுடன் நிறைவு பெற உள்ளது. அதன்பின் உள்ள காலியிடங்கள் துணைக் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இன்னும் சுமார் ஒரு லட்சம் இடங்கள் நிரம்பாமல் காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE