அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளுக்கு செப்.1 வரை விண்ணப்பிக்கலாம்

By செய்திப்பிரிவு

சென்னை: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் செப்டம்பர் 1-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 109 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை பட்டப் படிப்புகளில் 24,341 இடங்கள் உள்ளன. இவற்றை நடப்பு கல்வியாண்டில் (2023-24)நிரப்புவதற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை கல்லூரிக் கல்வி இயக்குநரகம் கடந்த வாரம் வெளியிட்டது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த 14-ம் தேதி தொடங்கியது. மாணவர்கள் பலர் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர். இதற்கிடையே சென்னை பல்கலைக்கழகத்தில் இளநிலை பாடப்பிரிவுக்கான தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.

இதையடுத்து முதுநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என மாணவர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதையேற்று விண்ணப்பப் பதிவுக்கான காலஅவகாசம் செப்டம்பர் 1-ம் தேதிவரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே, விருப்பமுள்ளவர்கள் www.tngasa.in, www.tngasa.org ஆகிய இணையதளங்கள் வாயிலாக விரைந்து விண்ணப்பிக்க வேண்டும்.

இணைய வசதியில்லாத மாணவர்கள், உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதேபோல, ஆன்லைனில் கட்டணம் செலுத்த முடியாத மாணவர்கள் `The Director,Directorate of collegiate education,chennai-15' என்ற பெயரில் வரைவோலையாக செலுத்தலாம். இதுதொடர்பான கூடுதல் விவரங்களை 9363462070, 9363462042, 9363462007, 9363462024 ஆகிய எண்களில்தொடர்பு கொண்டு அறியலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE