ஏறக்குறைய நான்கு தசாப்தங்களுக்குப் பிறகு தமிழகக் கல்வியில் புதிய திருப்பங்களை எதிர்கொள்ளவிருக்கிறோம்.
1979-ல் பி.யு.சி. நீக்கப்பட்டுப் பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ வகுப்பு முறை பள்ளியில் அறிமுகப்படுத்தப்பட்டது. 1980-ல் பிளஸ் 1 அப்படித்தான் அறிமுகம்செய்யப்பட்டது. அதன் பிறகு 2018 முதல் பிளஸ் 1 பொதுத் தேர்வாக நடத்தப்படும் என்பது மிகப் பெரிய மாற்றம். அதே நேரத்தில் அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பிளஸ் டூ படிக்கலாம் என்ற விதி கிடையாது, தரவரிசை முறை நீக்கம் போன்ற புதிய கொள்கைகள் அமலுக்கு வரவிருக்கின்றன. ஒரு மதிப்பெண் இழந்தால்கூட வாழ்க்கையே பறிபோனதாகப் பரிதவிக்கும் நிலையில் இருந்து மாணவச் சமூகத்தை மீட்டெடுக்க ரேங்கிங் முறை நீக்கம் கைகொடுக்கும்.
மறுபுறம் நீட் தேர்வு சச்சரவால் ஏற்பட்ட பிரச்சினைகள், போராட்டங்கள், மாணவி அனிதா உயிரிழப்பு உள்ளிட்ட அதிர்வலைகள். இதற்கு இடையில் புதிய பாடத்திட்டத்தை வடிவமைக்கக் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாகத் தீவிரமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அடிப்படைப் பாடப்பிரிவுகளுக்கு மட்டுமின்றிப் படைப்பாற்றல் திறனை, அறிவியல் மனோபாவத்தை, புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மாணவர்களின் தனித்துவத்தை ஊக்குவிக்கும் பாடத்திட்டம் வடிவமைக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது.
அதை முன்னிட்டு ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மட்டுமின்றி வரலாற்றாசிரியர்கள், சமூகச் செயல்பாட்டாளர்களையும் உள்ளடக்கிய பாடத்திட்டக் குழு அமைக்கப்பட்டது. கோத்தாரி கல்விக் குழு பரிந்துரை முதல் மத்திய அரசின் 2017-18 புதிய கல்விக் கொள்கைவரை தொலைதூரப் பார்வையும் புரிதலும் கொண்டவர்கள் களமிறங்கினர். சி.பி.எஸ்.சி உட்பட 15 கல்வி வாரியங்களின் சிறப்பம்சங்களை ஒருங்கிணைத்து, சிங்கப்பூர், அமெரிக்கா, நியூசிலாந்து நாடுகளின் பாடத்திட்டத்தோடு ஒப்பிட்டு அவற்றுக்கு நிகரான தரத்தில் இப்பாடத்திட்டத்தை உருவாக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. போட்டித் தேர்வுகளில் வெற்றிபெற வழிவகுக்கும் விதத்திலும் இப்புதிய பாடத்திட்டம் வடிவமைக்கப்படுவதாகத் தொடர்ந்து சொல்லப்பட்டது.
ஒன்று முதல் பன்னிரண்டு வகுப்புகள் வரையிலான புதிய பாடத்திட்டத்தின் வரைவு பொதுமக்கள் கருத்துக் கேட்புக்காகக் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. கல்வியில் பன்முகத் தன்மை, மதச்சார்பின்மை, சமூகநீதிக்கான குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்ற ஆரோக்கியமான பார்வை வரைவின் முகப்புரையில் அழுத்தமாக எதிரொலித்தது. இதன் காரணமாகக் கல்வியாளர்கள், பெற்றோர், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல தரப்பினரின் ஏகோபித்த வரவேற்பை முதல் கட்டமாகப் புதிய கல்வித்திட்ட வரைவு பெற்றுள்ளது. இதே புரிதலும் தெளிவும் பாடத்திட்டத்தின் உள்ளடக்கத்தில் பிரதிபலிக்கிறதா என்ற கேள்வியோடு இவர்களைச் சந்தித்தோம்.
அடிமை சாசனமாக மாறிவிடக் கூடாது!
“மொழிப்பாடங்கள் மிகச் சிறப்பான பாடத்திட்டத்தை ஏந்தியுள்ளன. குறிப்பாகத் தமிழுக்கான பாடத்திட்டம். கலைப் பிரிவுப் பாடங்கள் அந்தந்தத் துறைகளின் நவீன வளர்ச்சிகளைக் கணக்கிலெடுத்து மாறுதல்களை முன்மொழிந்துள்ளன.
இதில் எனக்கு நெருடலாக உள்ளது மேல்நிலை வகுப்புகளில் உள்ள அறிவியல் பாடங்கள்தான். மத்திய அரசுப் பள்ளிகளின் பாடத்திட்டத்தை அப்படியே நகலெடுத்தது போல் இவை இருப்பது தற்செயலானதுதானா? இயற்பியல், வேதியியல், உயிரியல் உள்ளிட்ட பாடங்கள் நீட் தேர்வை மனதில் கொண்டே மாற்றப்பட்டுள்ளன. நீட் தேர்வை மறுப்பதற்கென நம்மிடம் மிச்சமிருந்த இரண்டு நியாயங்களையும் அடுத்தடுத்துப் பலிகொடுத்தாயிற்று.
கிராமப்புற மாணவர்களுக்குப் பயிற்சி வகுப்புகள் இல்லை என்பதும் எங்கள் பாடத்திட்டம் வேறு என்பதும்தான் அவை. இவ்விரண்டும் இப்போது நேர்செய்யப்பட்டுவிட்டது. நிபந்தனையற்று நீட் தேர்வின் முன்பாகத் தமிழக அரசு மண்டியிடுதலுக்கான அடிமை சாசனமாக இவ்வரைவு மாறிவிடக் கூடாது என்பதே நமது பதற்றம். கணிதப் பாடத்திட்டத்தில் உள்ள மாறுதல்களும் பொறியியல் கல்லூரிகளுக்கான தேசிய நுழைவுத் தேர்வுக்கான அச்சாரமா எனச் சந்தேகம் எழுகிறது.
கூடுதல் பாடச்சுமை என்பது மாணவர்களின் படைப்பாற்றலையும் சோதித்தறியும் ஆற்றலையும் மட்டுப்படுத்தும் என்று பேசும் வரைவுக்குழு அறிவியல் பாடங்களில் ஏன் எதிர்நிலைப்பாடு எடுக்கிறது?
தமிழ், தமிழர், தமிழ்நாடு முதலிய உணர்வுகளை ஊட்டும் வகையில் மேல்நிலைப் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்ற வரிகளை வாசிக்கையில் மகிழ்ச்சியாகத்தான் உள்ளது. தேசிய நுழைவுத் தேர்வுகள் வாயிலாக நமது மாநில உரிமைகளைப் பறிக்க நினைக்கும் துர்புத்திக்காரர்களுக்குக் கிடைத்த ஆயுதமாக இந்த ஆவணம் மாறிவிடக்கூடாது என்பதே நமது கவலையும் அச்சமும்.
இந்த வரைவு வழிகாட்டலின்படி பாடப்புத்தகத் தயாரிப்பும் கற்றல் கற்பித்தல் முறைகளும், புறக்கட்டமைப்பு வசதிகளும் புதிய மதிப்பீட்டு முறைகளும் அமைந்தால் மட்டுமே இப்பாடத்திட்டம் அர்த்தம் பெறும். மெனு கார்டில் பசி போகுமா என்ன!” என்கிறார் கவிஞரும் கல்வியாளருமான லிபி ஆரண்யா.
பயனாளிகள் அல்ல படைப்பாளிகள்!
பாடத்திட்டத் திட்டமிடலை முன்னிட்டுக் கடந்த சில மாதங்களாகப் பலநூறு அரசுப் பள்ளி ஆசிரியர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிவருகிறார் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினரும் விலங்கியல் பேராசிரியருமான பொ. ராஜமாணிக்கம். “பெரும்பாலான ஆசிரியர்களுக்கு எதற்காக ஒரு பாடப்பகுதியைக் கற்பிக்கிறோம் என்ற அடிப்படைப் புரிதல் இல்லை. வள்ளலார் பாடல்களின் மையக்கருத்து அன்பும் அறமும் என்ற புரிதல் இல்லாமல் ஆன்மிகப் பார்வையிலிருந்து இராமலிங்க அடிகளாரின் பாடல்களைக் கற்பித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆக, கருத்தியல்ரீதியான விளக்கத்தை ஆசிரியர்களுக்கு ‘ஆசிரியர் வழிகாட்டி’யில் விவரிக்க வேண்டும்.
கொண்டாட்ட மனநிலையில் கற்றல், மதிப்பெண்ணை முன்னிறுத்தாத தேர்வு முறை, தொடக்க நிலை வகுப்புகளிலும் திறந்த புத்தக முறை உள்ளிட்டவை வரைவின் மதிப்பாய்வுப் பகுதியில் அருமையாக விவரிக்கப்பட்டுள்ளன. தமிழ், கணிதம், அறிவியல் பாடங்களுக்குச் சிறப்பாகக் குறிப்புரை வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஆங்கிலம், சமூக அறிவியல் பாடங்களுக்குக் குறிப்புரை இல்லாதது குறை. பிளஸ் 1, பிளஸ் டூ அறிவியல் பாடத்திட்டம் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வதற்கு ஏதுவாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
தகவல் தொடர்பு தொழில்நுட்பத் திட்டமான ஐ.சி.டி.-ஐ பரவலாக்குவது பாராட்டுக்குரிய முன்னெடுப்பு. ஆனால், பாடப்புத்தகத்தைத் தாண்டி ஆசிரியரின் படைப்பாற்றலோடுகூடிய பங்கேற்பு, வகுப்பறை உள்கட்டமைப்பு உள்ளிட்டவற்றை மேம்படுத்தினால் மட்டுமே ஐ.சி.டி. திட்டத்தால் பயன்.
உதாரணத்துக்கு, புத்தகத்தில் திருவிழா எனப் படிப்பதற்கும் மாணவர்களோடு சேர்ந்து ஆசிரியர் தங்களுடைய ஊர் திருவிழாவை வீடியோவாகப் படம் பிடித்து, அந்தக் காணொலியை வகுப்பறையில் திரையிட்டு மாணவர்களோடு கலந்துரையாடுவதற்கும் எவ்வளவு வித்தியாசம் உள்ளது? இது சாத்தியப்பட ஆசிரியர்களுக்குப் பயிற்சியும் ஊக்கமும் அளித்து அவர்களைப் பயனாளிகள் என்ற நிலையிலிருந்து படைப்பாளிகள் என்ற தளத்துக்கு உயர்த்த வேண்டும்.
அடுத்து, வரலாறு, புவியியல், சமூக அறிவியல் பாடங்கள் அனைத்து வகுப்புகளுக்குமே அந்த வயதுக்கு உரியதைக் காட்டிலும் கடினத்தன்மையோடு உள்ளன. இதனால் மாணவர்கள் அந்நியப்பட்டு மீண்டும் மனப்பாடக் கல்விக்குள்ளே தள்ளப்படுவார்கள்” என்கிறார் ராஜமாணிக்கம்.
புதிய போக்குகள்
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை திட்டமானது ஒட்டுமொத்த இந்தியக் கல்வியைப் பொதுமைப்படுத்தி ஒற்றைக் கலாச்சாரத்தைக் கட்டமைக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. அதிலிருந்து முற்றிலுமாக வேறுபட்டுத் தமிழ்நாடு புதிய பாடத்திட்டமானது பன்மைக் கலாச்சாரத்தை அங்கீகரித்து, மதச்சார்பின்மையை பறைசாற்றி, வேற்றுமைகளைக் கொண்டாடும் சிந்தனையை வழிமொழிவது நம்பிக்கை அளிப்பதாகச் சொல்கிறார் எழுத்தாளரும் இயற்பியல் பேராசிரியருமான அ. மார்க்ஸ்
“சில மாதங்களுக்கு முன்னதாகச் சமூக அறிவியல் தொடர்பாகத் தன்னுடைய சீரிய கருத்தை ஒருவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டதை அடுத்து அவரை உடனடியாக அழைத்துப் பாடத்திட்டக் குழுவின் கலந்துரையாடல்களில் இணைத்துக்கொண்டனர். ஆனால், அத்தகைய ஆரோக்கியமான முன்னெடுப்பும் மாற்றத்துக்கான தீவிரமும் பாடத்திட்டத்தில் அவ்வளவாகப் பிரதிபலிக்கவில்லை. உதாரணத்துக்கு, ‘களப்பிரரின் மொழி கன்னடம்’ என்னும் பாடப்பகுதி இடம்பெற்றுள்ளது. நெடுங்காலமாகக் களப்பிரர்களின் ஆட்சிக்காலம் இருண்டகாலம் என்றே சொல்லப்பட்டுவந்திருக்கிறது.
26CH_A. Marxleftஆனால், களப்பிரர்கள் தமிழர்கள் என்பது மட்டுமல்லாமல் அவர்களுடைய காலத்தில்தான் ஐம்பெருங்காப்பியங்கள், அற இலக்கியங்கள் உட்படக் கலையும் இலக்கியமும் செழித்து வளர்ந்தது என்று மயிலை சீனி வேங்கடசாமி போன்றோரின் ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.
வேங்கடசாமி, பேரா. கைலாசபதி, பேரா. சிவதம்பி போன்றவர்களின் நவீன தமிழ் ஆய்வுகள் நம்முடைய பாடத்திட்டத்தில் எதிரொலிக்க வேண்டாமா?” எனக் கேட்கிறார் அ. மார்க்ஸ்.
முகவுரையில் பிரகாசிக்கும் தொலைதூரப் பார்வை, பாடப்புத்தகத்தில் கருத்தியல்ரீதியாகக் கட்டமைக்கப்பட்டுச் சிறப்பான பயிற்றுவிக்கும் முறைகள் மூலமாக மாணவர்களைச் சென்றடைய வேண்டும் என்ற அக்கறையைக் கல்வி ஆர்வலர்கள் வெளிப்படுத்துகிறார்கள்.
முக்கியமாகக் கருத்துக்கேட்பு என்பது வெறும் சடங்காகப் போய்விடாமல் உண்மையான மாற்றத்துக்கான முன்னெடுப்பாகட்டும்!
முக்கிய செய்திகள்
கல்வி
2 days ago
கல்வி
2 days ago
கல்வி
2 days ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
3 days ago
கல்வி
5 days ago
கல்வி
5 days ago
கல்வி
6 days ago
கல்வி
7 days ago
கல்வி
8 days ago
கல்வி
9 days ago
கல்வி
9 days ago
கல்வி
9 days ago