அரசு உதவி பெறும் பள்ளி அருகே பாசி படிந்த நிலையில் தேங்கி கிடக்கும் கழிவுநீர் @ கோவில்பட்டி

By செய்திப்பிரிவு

கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே கசவன்குன்று அரசு உதவி பெறும் பள்ளியில் பாசி படிந்த நிலையில் தேங்கியுள்ள கழிவுநீரால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கோவில்பட்டி அருகே ஈராச்சி ஊராட்சிக்கு உட்பட்ட கசவன்குன்று கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள பள்ளிக்கூடத் தெருவில் ரூ.5.25 லட்சம் மதிப்பில் வாறுகால் கட்டும் பணி கடந்த 10 நாட்களுக்கு முன்பு தொடங்கியது. சுமார் 78 மீட்டருக்கு வாறுகால் அமைத்து, கழிவுநீரை உறிஞ்சி குழாய் மூலம் சுத்தப்படுத்தி ஊருக்கு வெளியே உள்ள ஓடையில் கொண்டு விட திட்டமிடப்பட்டுள்ளது.

வாறுகால் பணிக்காக வீடுகளில் இருந்து வெளியேறும் தண்ணீர் தெருவின் நடுவே விடப்பட்டுள்ளது. இந்த கழிவு நீர் சாலையை கடந்து அங்குள்ள ஆர்.சி. பிரைமரி மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு அருகே கழிவுநீர் தேங்கி நிற்கிறது. அதில், ஏராளமான கொசுக்களும் காணப்படுகின்றன. மேலும், அந்த தெருவில் உள்ள மக்களும் தங்கள் வீடுகளுக்கு செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர்.

கிராம மக்கள் கூறியதாவது: வாறுகால் பணி நடைபெறுவது நல்ல விஷயம்தான் என்றாலும், பள்ளிகளுக்கு நடுவே கழிவுநீர் தேங்கி இருப்பது சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி உள்ளது. இதனால் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது.

வாறுகால் பணிகளை விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை சாலையில் கழிவுநீர் தேங்காத வண்ணம் இருக்க தற்காலிக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE