எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான முதல் சுற்று கலந்தாய்வில் இடங்கள் ஒதுக்கீடு நிறைவு: ஆக.8-க்குள் கல்லூரிகளில் சேர வேண்டும்

By செய்திப்பிரிவு

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான முதல் சுற்று கலந்தாய்வில் இடங்கள் ஒதுக்கீடு நிறைவு பெற்றுள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும்தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ்இடங்களுக்கு பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தரவரிசைப் பட்டியல் கடந்த ஜூலை 16-ம் தேதி வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில், முதல் சுற்று கலந்தாய்வு ஜூலை 25-ம் தேதி தொடங்கியது.

இடங்கள் தேர்வு: தரவரிசைப் பட்டியலில் 1 முதல் 25,856 வரை (நீட் மதிப்பெண் 720 முதல் 107 வரை) உள்ளவர்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 1 முதல் 13,179 வரை (நீட் மதிப்பெண் 715 முதல் 107 வரை) உள்ளவர்கள், www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் பதிவு செய்துஇடங்களைத் தேர்வு செய்தனர்.

அதற்கான அவகாசம் நிறைவடைந்த நிலையில், நேற்றுஇடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அது தொடர்பான விவரங்கள்சுகாதாரத்துறை இணைய தளத்தில் வெளியிடப்பட்டது.

ஆக 4-ம் தேதி (இன்று) முதல் முதல் 8-ம் தேதி மாலை 5 மணி வரை இடங்கள் ஒதுக்கீடு பெற்றதற்கான ஆணையை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆகஸ்ட் 8-ம் தேதி மாலை 5 மணிக்குள் மாணவர்கள் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் சேர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காலியாக உள்ள இடங்கள் அடுத்த சுற்று கலந்தாய்வில் நிரப்பப்படும் என்று மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE