அரசியல் ஆளுமைகள் அணிவகுத்த பி.எஸ்.ஜி சர்வஜன பள்ளி - நூற்றாண்டு சிறப்புகள்

By டி.ஜி.ரகுபதி 


கோவை: அறியாமை எனும் இருளை அகற்ற உதவும் முக்கிய ஆயுதம் கல்வி. பாரதியார் உள்ளிட்ட பல தலைவர்கள் தங்களின் எழுத்து வரிகளால் கல்வியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்துள்ளனர்.

நம் இந்திய நாடு ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தின் கீழ் சுதந்திரத்தை எதிர்நோக்கி இருந்த சமயம் அது.சரியாக கூற வேண்டும் என்றால் ஒரு நூற்றாண்டுக்கு முந்தைய சமயம், பூளைப் பூக்கள் நிரம்பி காணப்பட்ட பூளைமேடு (இன்றைய பீளமேடு) பகுதியில் வசிக்கும் மாணவர்கள் கல்வி கற்பதற்காக கோவை நகரின் மையப்பகுதிக்கு சென்று,வர வேண்டிய நிலை இருந்தது. அப்போது விரல் விட்டு எண்ணும் அளவிலேயே பள்ளிகள் இருந்தன.

பேருந்து, ரயில் போன்ற பொதுப்போக்குவரத்து சாதனங்கள் முழுமையாக இல்லாத அந்தச் சூழலில், இங்கிருந்து மாணவர்கள் கல்வி கற்க தொலைதூரங்களுக்கு சென்று வருவது சிரமமாக இருந்தது. இதையடுத்து, தீபாவளித் திருநாளான20-10-1921 அன்று பி.எஸ்.ஜி குடும்பத்தினர் முன்னிலையில் ஊர் பொதுமக்கள் ஒன்று கூடினர்.

மாணவர்களின் பயனுக்காக பீளமேட்டில் பள்ளி தொடங்குவது குறித்து ஆலோசித்தனர். அதன் இறுதியில், பீளமேட்டில் உயர்நிலைப்பள்ளி தொடங்குவது என முடிவெடுத்தனர். 1922-ல் அது செயல்வடிவம் பெற்றது. அதே ஆண்டு மே மாதம் 1-ம் தேதி சர்வஜன உயர்நிலைப்பள்ளிக்கு அன்றைய கல்வியமைச்சர் ஏ.பி.பாத்ரோ அடிக்கல் நாட்டினார். கட்டுமானப் பணிகள் முடிந்தன.

பள்ளிக்கு என்ன பெயர் வைக்கலாம் என பி.எஸ்.ஜி சகோதரர்கள் பொதுமக்களுடன் ஆலோசித்தனர். அப்போது சாதி, மதம் என மனிதர்களை பிரிக்கும் பெயரில் பள்ளிக்கு பெயர் வைக்க வேண்டாம் என முடிவெடுத்த பி.எஸ்.ஜி சகோதரர்களில் மூத்தவரான வெங்கிடசாமி நாயுடு, சர்வஜனங்களுக்கும் பயன்படும் வகையில் ‘சர்வஜன உயர்நிலைப்பள்ளி’ என பெயர் வைத்து உரத்த குரலில் மக்களிடம் கூறினார்.

மக்களிடமும் அப்பெயருக்கு வரவேற்பு எழுந்தது.அதைத் தொடர்ந்து சர்வஜன உயர்நிலைப்பள்ளி கடந்த 4-6-1924-ம் ஆண்டு செயல்படத் தொடங்கியது. அன்று தொடங்கிய இப்பள்ளி நூறாண்டுகளாக தனது சேவையை தொடர்கிறது. பி.எஸ்.ஜி சர்வஜன மேல்நிலைப்பள்ளியின் நூற்றாண்டு தொடக்க விழா இன்று (ஆக. 2)பள்ளி வளாகத்தில் நடக்கிறது.

சர்வஜன மேல் நிலைப் பள்ளியின் சிறப்புகள் குறித்து பள்ளியின் செயலாளர் பி.நாராயணசாமி கூறியதாவது: பீளமேட்டில் வசித்து வந்த பி.எஸ்.கோவிந்த சாமி நாயுடுவுக்கு 4 புதல்வர்கள். நால்வரும் தங்களது சொத்தை நான்காக பிரிக்காமல் 5 ஆக பிரித்தனர். அந்த 5-வது பங்கில் உருவானதுதான் பி.எஸ்.ஜி அறநிலையம். இந்த அறநிலையத்தின் முதல் கல்வி நிறுவனம் பி.எஸ்.ஜி சர்வஜனப் பள்ளியாகும்.

இரு பாலர் கல்வி முறை: நாட்டின் சுதந்திரத்துக்கு கால் நூற்றாண்டுக்கு முன்னரே, அனைவருக்குமான கல்விச்சேவையை தொடங்கியது இப்பள்ளி. பல்வேறு வளர்ச்சிகளுக்கு பாதை அமைக்கும் முதல் முயற்சியை தொடங்கிய பெருமை இப்பள்ளிக்கு உண்டு. ஆண், பெண் சேர்ந்து படிக்கும் இரு பாலர் கல்வி முறை கோவையில் இப்பள்ளியில் தான் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. தாய்மொழி மூலம் கல்வி கற்பதற்கு வித்திட்ட முதற்பள்ளி என அன்னிபெசன்ட் அம்மையாரால் பாராட்டப்பட்டது.

1925-ம் ஆண்டு தந்தை பெரியார் இப்பள்ளிக்கு வந்தார். ‘கடவுள் இப்பள்ளிக்கு மென்மேலும் அபிவிருத்தி வழங்கி அருள் புரியவேண்டும்’ என குறிப்பெழுதியுள்ளார். அதை தற்போது வரை பாதுகாத்து வருகிறோம். டெல்லி தீன்மூர்த்தி பவனில் ஆண்டுதோறும் நடைபெறும் அறிவியல் கண்காட்சியில் சர்வஜனப் பள்ளி தொடர்ந்து பங்கேற்றுவந்தது. அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி, பள்ளியின் அரங்கை பார்வையிட்டு, ‘சர்வஜன’ என்ற பள்ளியின் பெயர் தனக்கு மிகவும் பிடித்துள்ளது எனவும், ‘சர்வ் அன்ட் ஸ்மைல்’ என்ற பள்ளியின் குறிக்கோள் வாசகமும் தன்னை கவர்ந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

1946-ம் ஆண்டு சென்னைக்கு ஒரு விழாவில் பங்கேற்க காந்தியடிகள் வந்திருந்தார். அப்போது இப்பள்ளியைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றதன் மூலமாக, பள்ளியின் பெயரை காந்தியடிகள் அறிந்தார். ‘சர்வஜன.. ஆகா! எத்தனை அழகான பெயர். சர்வஜன சுகினோ பவந்து’ (எல்லா மக்களுக்கும் நன்மை உண்டாகட்டும்) என்று காந்தியடிகள் பாராட்டி கூறினார்.

பல்வேறு துறை பிரபலங்கள் இப்பள்ளிக்கு வந்து சென்றுள்ளனர். முன்னாள் குடியரசு தலைவர்கள் ராஜேந்திர பிரசாத், வி.வி.கிரி, அப்துல்கலாம், ஜாகிர் உசேன், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு,முன்னாள் தமிழக ஆளுநர்கள் கே.கே.ஷா, ராமமோகன ராவ், முன்னாள் தமிழக முதல்வர்கள் ராஜாஜி, எம்.ஜி.ஆர், நோபல் பரிசு பெற்ற அறிவியல் மேதை சர்.சி.வி.ராமன் உள்ளிட்ட பல ஆளுமைகள் இப்பள்ளிக்கு வந்து சென்றுள்ளனர்.

பி.எஸ்.ஜி என்ற ஆலமரத்தின் விழுதுகளாக பல நிறுவனங்கள் தோன்றியுள்ளன. அனைத்துக்கும் முதலானது சர்வஜன மேல்நிலைப்பள்ளி. சர்வஜன என்ற பெயருக்கு ஏற்ப, சர்வஜனங்களும் பயன்பெற்று வருகின்றனர். சர்வஜனப் பள்ளி நூறாண்டுகள் என்ற பிரமாண்டத்தை நோக்கி சென்றுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE